பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று (மே 24) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். mk stalin clarifies why he me met modi
இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “பள்ளி கல்வித்துறைக்கான SSA நிதியை பெறுவது, கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது, சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க வேண்டும்,
செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சாதிப்பெயர் விகுதிகளை மாற்றுவது,
கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன்.
இந்தக் கூட்டம் முடிந்தபிறகு பிரதமர் மோடியை ஐந்து நிமிடங்கள் சந்தித்து இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினேன். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மோடி உறுதியளித்தார்” என்று தெரிவித்தார்.
வெள்ளைக் கொடி ஏந்தி ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை. அவரிடம் இருப்பது போன்று காவி கொடியும் இல்லை” என்றார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “இதெல்லாம் பித்தலாட்டம், பொய். தேவையில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்று அதிகமாக அவதூறு பரப்புவார்கள். அதையெல்லாம் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி சந்திப்பு பற்றி பேசிய ஸ்டாலின், “எப்போதெல்லாம் டெல்லி வருகிறேனோ, அப்போதெல்லாம் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திப்பது வழக்கம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதேநேரத்தில் அரசியலும் பேசினோம்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். mk stalin clarifies why he me met modi