2026-ல் மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்கும்..வைகோ நம்பிக்கை

Published On:

| By Minnambalam Desk

Vaiko Stalin

2026-ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தமக்கு எம்பி பதவியை திமுக வழங்கும் என்ற நம்பிக்கையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Vaiko Confident of Securing Rajya Sabha MP Post

தமிழக மாநிலங்களவை எம்பிக்களான வில்சன், புதுகை அப்துல்லா, சண்முகம், சந்திரசேகர், அன்புமணி ராமதாஸ் மற்றும் வைகோ ஆகியோரது பதவி காலம் ஜூலை 24-ந் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தேர்தலில் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாகப் போட்டியிடுவர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது; இதனால் மாநிலங்களவை எம்பி பதவியை உறுதி செய்து ஒப்பந்தத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என வைகோ அப்போது ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், உங்களுக்கு எம்பி பதவி கொடுப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் காங்கிரஸ் கட்சியும் எம்பி பதவி கேட்கும். அதனால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருந்தாராம் முதல்வர் ஸ்டாலின்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திமுக அறிவித்த மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் வைகோ பெயர் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக மதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கடந்த சில மாதங்களாகவே வைகோவுக்கான மாநிலங்களவை எம்பி பதவி இடம் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 20-ந் தேதி மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, தமக்கு மீண்டும் மாநிலங்களவை எம்பி பதவி தரவில்லை என்றால் கட்சி நிர்வாகிகள் யாரும் கோபப்படக் கூடாது என அறிவுரை வழங்கி இருந்தார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் ஏப்ரல் 25-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, மாநிலங்களவை எம்பி பதவி பற்றி வைகோ மீண்டும் ஸ்டாலினிடம் பேசினார். இதற்கு, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கேற்பத்தான் இந்த முறை மாநிலங்களவை வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். அதனால் அடுத்த தேர்தலின் போது, சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவெடுப்போம் என கூறியிருந்தாராம் ஸ்டாலின். இதனால்தான் வைகோ இன்னமும் நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம் என்கின்றன.

அடுத்த மாநிலங்களவை எம்பி தேர்தல் எப்போது?

தற்போது மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள திமுகவின் திருச்சி சிவா, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு மற்றும் அதிமுகவின் தம்பிதுரை, ஜிகே வாசனின் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம், மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share