வைஃபை ஆன் செய்ததும் ‘களை கட்டுதே மாநிலங்களவைத் தேர்தல்’ என்ற தலைப்புச் செய்தியுடன் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai stalin rajya sabha mp selection
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்களான திமுகவின் வில்சன், புதுகை அப்துல்லா, தொமுச சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவின் சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட உடனேயே அரசியல் களம் பரபரத்துவிட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே திமுக – அதிமுகவில் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள் யார் யார்? வைகோ, அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற விவாதங்கள் களைகட்டின.
திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த நிர்வாகிகள், துறை சார்ந்த பிரமுகர்கள் என பல தரப்பிலும் மாநிலங்களவை எம்பி வாய்ப்பு கேட்டு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 4 வேட்பாளர்களை இன்று
மே 28-ந் தேதி அறிவித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். digital thinnai stalin rajya sabha mp selection
தற்போதைய மாநிலங்களவை எம்பியான பி. வில்சன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரைத் தவிர்த்து கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுவர் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவின் சிட்டிங் எம்பியான வில்சன், கட்சியின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர். 2012-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மூடிவிட முயற்சித்தார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார் வில்சன். அப்போது, ‘வில்சன் அல்ல Win Son’ என கருணாநிதியால் வெகுவாகப் பாராட்டப்பட்டவர்.
தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்தவர். 2018-ல் கலைஞர் மறைந்த போது மெரினாவில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுத் தந்ததால், 2019-ம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாகும் வாய்ப்பைப் பெற்றார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, இந்தியா கூட்டணி வென்று ஆட்சி அமைந்தால் மத்திய சட்டத்துறை அமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தாராம். அது நிறைவேறாமல் போன நிலையில், மீண்டும் வில்சனுக்கு மாநிலங்களவை எம்பி அல்லது தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.
அண்மையில் ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்தவர் வில்சன். திமுக அரசுக்கு மத்திய அரசின் பல்வேறு நெருக்கடிகள் தொடருகிறது. இதனால் மிக முக்கிய வழக்குகளில் வில்சன் தொடர்ந்து டெல்லியில் தேவைப்படுவார் என்ற அடிப்படையில் மீண்டும் மாநிலங்களவை எம்பி வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம்.
அத்துடன் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், கிறிஸ்தவர்களின் ஆதரவைப் பெறும் வகையிலும் அந்த ‘கோட்டா’வில் வில்சன் மீண்டும் எம்பியாக்கப்படுகிறார் என்கின்றனர் அறிவாலய வட்டாரங்கள். digital thinnai stalin rajya sabha mp selection
இஸ்லாமியரான புதுகை அப்துல்லா, மீண்டும் மாநிலங்களவை எம்பியாக விரும்பவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறியிருக்கிறாராம்.
2019-ம் ஆண்டு அப்துல்லாவை மாநிலங்களவை எம்பி பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்தான் பரிந்துரைத்தாராம். இப்போதும் 2026 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியை அப்துல்லாவுக்கு உறுதி செய்துவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு தரலாம் என சொன்னாராம் உதயநிதி.

இதனையடுத்தே இஸ்லாமியரான கவிஞர் சல்மா பெயரை டிக் செய்தாராம் முதல்வர் ஸ்டாலின். இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சிபாரிசும் இருந்ததாம்.
கவிஞர் சல்மா திமுகவில் மிக நீண்டகாலம் பயணிக்கிறவர். இலக்கிய வட்டாரங்களில் ராஜாத்தி சல்மா என அழைக்கப்படுகிறவர்.
2006-ம் ஆண்டு மருங்காபுரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மட்டும் வாய்ப்பு தரப்பட்டது. அந்த தேர்தலில் சல்மா தோல்வி அடைந்தார். அதன் பின்னர் திமுகவில் சில பதவிகள் கொடுக்கப்பட்டாலும், சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை.
கடந்த முறை கூட மாநிலங்களவை எம்பி பதவிக்கு கவிஞர் சல்மா முயற்சித்துப் பார்த்தும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லையாம். இதனை உணர்ந்தே கவிஞர் சல்மாவுக்கு தற்போது வாய்ப்பு தந்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். digital thinnai stalin rajya sabha mp selection
எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு நிச்சயம் மாநிலங்களவை எம்பியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது திமுகவில் பலரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கின்றனர்.
ஏனெனில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, கள்ளக்குறிச்சி தொகுதியில் சிவலிங்கம் போட்டியிடுவதை திமுக தலைமை உறுதி செய்தது. இதனால் கள்ளக்குறிச்சியில் ஜரூராக தேர்தல் பணிகளையும் சிவலிங்கம் செய்யத் தொடங்கினார்.
இதற்காக கணிசமாக செலவும் செய்து கொண்டிருந்தார் சிவலிங்கம். ஆனால், திடீரென மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் படு அப்செட் ஆகிப் போனார் சிவலிங்கம். இந்த அதிருப்தியை வெளிப்படுத்த சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் கூட இருந்தாராம் சிவலிங்கம்.

ஆனால், திமுகவின் சீனியர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர்தான் சிவலிங்கத்தை சமாதானம் செய்திருக்கின்றனர். அப்போது, தலைவர் ராஜ்யசபா சீட் கூட கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அமைதியாக இருந்து தேர்தல் பணிகளை செய்யுங்க என சொல்லப்பட்டதாம். இதனால் சிவலிங்கம் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார். அவருக்கு இந்த முறை ஏமாற்றம் கிடைக்காமல் எம்பி பதவி கிடைத்துள்ளது. சிவலிங்கத்தின் தேர்வில் இன்னொரு கணக்கும் இருக்கிறதாம்.
அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் உடையார் சமூகத்துக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டு வந்ததாம். திமுகவில் உடையார்களின் ‘முகமாக’ பொன்முடி மட்டும்தான் அறியப்பட்டு வந்தார். தற்போது பொன்முடி ஓரம்கட்டப்பட்டுவிட்ட நிலையில், சிவலிங்கத்துக்கு மாநிலங்களவை எம்பி தரப்பட்டு உடையார் சமூகத்துக்கான பிரதிநிதித்துவம் சமன் செய்யப்படுகிறது என்கின்றனர் திமுக சீனியர்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமக்கு ஸ்டாலின் மீண்டும் எம்பி பதவி தருவார் என ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.
அப்போது ஒரு மாநிலங்களவை எம்பி இடத்தையும் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என வைகோ பிடிவாதம் பிடித்தார். ஆனால், ஸ்டாலினோ, உங்களுக்குக் கொடுத்தால் காங்கிரஸும் கேட்கும். அதனால் மாநிலங்களவை எம்பி இடம் பற்றி அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என நாசூக்காக சொல்லி அனுப்பிவிட்டாராம். தற்போது வைகோவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த இடம்தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாத நிலையில், மாநிலங்களவை எம்பி இடம் தரப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது, திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன், தமிழ்நாடு முழுவதும் பிரசாரமும் செய்தார்.
இதனடிப்படையில் தற்போது மநீம தலைவரான மூத்த நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவைக்குள் எம்பியாக நுழைகிறார்.

சரி அதிமுகவில் வேட்பாளர்கள் யார்?
அதிமுகவிலும் ஏகப்பட்ட ‘தலை’கள் 2 மாநிலங்களவை எம்பிக்கள் இடங்களுக்காக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு நாலா பக்கமும் நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றனராம் இந்த ‘தலை’கள்.
தற்போதைய நிலையில் அதிமுகவில், மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மனோ, நடிகை விந்தியா மற்றும் ராஜ் சத்யன் ஆகியோரில் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

திமுகவில் மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதால், அதிமுகவில் அக்கட்சிக்காக தொடர்ந்து பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் இன்பதுரைக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதிமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல வில்சன், கிறிஸ்தவர், இன்பதுரையும் கிறிஸ்தவர் என்பதால் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறலாம் என்கின்றனர். digital thinnai stalin rajya sabha mp selection
அதேநேரத்தில் தேமுதிகவும் இடைவிடாமல் அதிமுகவிடம் ஒரு மாநிலங்களவை எம்பியை பெற்றுவிட முயற்சிக்கிறதாம். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கூட, “பொறுமை கடலினும் பெரிது, மாநிலங்களவை தேர்தல் தேதி தற்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறியிருந்ததும் இந்த முயற்சிகளின் வெளிப்பாடுதானாம்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் கடந்த முறை நமக்கான 2 இடங்களை கூட்டணி கட்சிகள் என்பதற்காக பாமகவின் அன்புமணிக்கும் தமாகாவின் ஜிகே வாசனுக்கும் விட்டுக் கொடுத்தோம்.
இந்த இருவருமே 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நம்முடன் இல்லை. நமக்கு எதிராகத்தான் இருந்தனர். அதனால் இந்த முறை கூட்டணிக் கட்சிக்கு மாநிலங்களவை எம்பி பதவியை தரவே முடியாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாராம் என டைப் செய்தபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப்லைனுக்கு போனது வாட்ஸ் அப். digital thinnai stalin rajya sabha mp selection