கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் முகத்தில் கறுப்பு மை பூச தங்களது அமைப்பு முயற்சித்ததாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பின் பிரவீண் ஷெட்டி பிரிவு தலைவர் பிரவீண் ஷெட்டி கூறியுள்ளார். Kamal Haasan Targeted in Karnataka Over Kannada Language Row
இது தொடர்பாக பிரவீண் ஷெட்டி கூறியதாவது: தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார். இப்படி பேசியதன் மூலம் கன்னட மொழியை அவமதித்துவிட்டார் கமல்ஹாசன். இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நடிகர் கமல்ஹாசன், பெங்களூருக்கு வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் அவர் தங்கியிருந்ததாக சொல்லப்பட்ட எலகங்கா பகுதிக்குச் சென்று அவரது முகத்தில் கறுப்பு மை பூச திட்டமிட்டோம். ஆனால் நாங்கள் அங்கே செல்வதற்கு முன்னரே கமல்ஹாசன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
கன்னட மொழி குறித்த கருத்தை கமல்ஹாசன் திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்சனை முடியும் வரை தக் லைப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு பிரவீண் ஷெட்டி கூறினார்.
முன்னதாக நேற்று கேரளாவில் தக் லைப் பட நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தாம் பேசியது வரலாற்று அறிஞர்களின் கருத்து. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என கூறியிருந்தார்.
பைத்தியம், அர்பன் நக்சலைட்- பாஜக
கர்நாடகா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி (பாஜக) தலைவர் ஆர். அசோக் கூறுகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது; கமல்ஹாசன் ஒரு அர்பன் நக்சலைட். கன்னடர்கள் கமல்ஹாசனைப் புறக்கணிக்க வேண்டும்.
நடிகர் கமல்ஹாசனை கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. கன்னட மொழிக்குத் துரோகம் செய்துவிட்ட கமல்ஹாசனின் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றார்.