டிஜிட்டல் திண்ணை: கட்சி பேதமின்றி ‘கரன்சி மழை..’ சிக்கிய பணக் கட்டுகள்.. கோவை கொந்தளிப்பு.. என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Election Money

வைஃபை ஆன் செய்ததும் ”காசு துட்டு பணம் மணி” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது..

என்னய்யா.. ’பட்டுவாடா’ பஞ்சாயத்தா?

ADVERTISEMENT

ஆமாய்யா… பணம் பிடிபட்டதுதான் தலைப்பு செய்திகளா வந்துகிட்டே இருக்கே..

சென்னை ஆயிரம் விளக்குல அதிமுக வேட்பாளருக்கு பணம் கொடுக்க போன பாஜககாரங்ககிட்ட இருந்தும் ரூ500 பணக் கட்டுகள் சிக்கி இருக்குது..

ADVERTISEMENT

பெரம்பலூரில திமுக நிர்வாகின்னு சொல்லப்படுகிறவர் காரில் இருந்து ரூ2.44 கோடி பிடிபட்டிருக்கு

பல்லாவரம் ஐஜேகே வேட்பாளருக்காக பணப் பட்டுவாடா செய்ய கொண்டு போன ரூ9.97 லட்சம் பணம் பிடிபட்டுச்சு

ADVERTISEMENT

ஒட்டப்பிடாரத்துல அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வீட்டில இருந்து ரூ 48 லட்சம் சிக்கியிருக்கு..

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதலாகி இருக்கு

மயிலாப்பூரில திமுக வேட்பாளரோட உதவியாளர் வீட்டுல இருந்து ரூ500 பணக் கட்டுகளை பறிமுதல் செஞ்சிருக்காங்க..

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் உறவினரிடமிருந்து 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கு.. இதே மொடக்குறிச்சியில அதிமுக ஒன்றிய செயலாளரோட பர்னிச்சர் கடையில பதுக்கி வெச்ச ரூ13.48 லட்சம் சிக்கி இருக்குது..

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில இருந்து ரூ. 62 லட்சம் பறிமுதல் செஞ்சிருக்காங்க..

நீலகிரி மாவட்ட திமுக ஆபிசில இருந்து ரூ.22 லட்சம் பணம் பறிமுதல் பண்ணி இருக்காங்க..

ராமநாதபுரத்தில பணம் கொடுத்தாங்கன்னு அதிமுக நிர்வாகிகளை கைது செஞ்சுருக்காங்க..

ஆம்பூர் பாலூரில அதிமுக பிரமுகர்கிட்ட ரூ3.06 லட்சம் பிடிபட்டிருக்கு..

லால்குடியில தவெக வேட்பாளர் குப கிருஷ்ணன் உறவினர் வீட்டுல இருந்தும் 50 லட்சம் ரூபாய் சிக்கி இருக்குது..

கோவை தெற்குல ஓட்டுக்கு ரூ5,000 கொடுக்கிறாங்கன்னு தேர்தலையே ரத்து செய்யுங்கன்னு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் போராடிகிட்டு இருக்கிறதுதான் ஹைலைட்டா பேசுறாங்க… அங்கே நடந்ததை பத்தி கடைசியா சொல்றேன்…

இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது அப்படிங்கிறது பரவலா நடந்துருக்கு.. பெரும்பாலான கட்சிகள் கொடுத்திருக்காங்க..

அதிமுகவில வேட்பாளர்களை தேர்வு செஞ்சப்பவே, ஓட்டுக்கு ரூ1,000 கொடுக்கிறதுன்னு முடிவு செஞ்சிருச்சு கட்சி தலைமை.

இதுல ஓட்டுக்கு ரூ500 வீதம் தொகுதிக்கு ரூ10 கோடி கட்சி பணத்தை அதிமுக தலைமையே அனுப்பியும் வெச்சிருச்சு..

வேட்பாளர்களாக நிற்கிறவங்க தங்களோட வசதிக்கு தகுந்த மாதிரி கூடுதலாக ரூ500 போட்டு ஒரு ஓட்டுக்கு 1,000 ரூபாய்னு கொடுங்கன்னும் அதிமுக தலைமை சொன்ன மாதிரி கொடுத்து முடிச்சுட்டாங்க.. திண்டுக்கல்லில் அதிமுக முதல்ல ரூ3,000 கொடுத்தது.. அப்புறமா கூடுதலா ரூ1,000 சேர்த்தும் கொடுத்திருக்குது..

ஆனா ரிசர்வ் தொகுதிகளில் வேட்பாளர்களை செலக்ட் செய்யவே போராடுனதால, அங்க வேட்பாளர்கள் ஓட்டுக்கு தர வேண்டிய பணத்தையும் சேர்த்து அதிமுக தலைமையே மொத்தமா ரூ20 கோடி கொடுத்துருச்சு..

அதிமுகதான் முதல்ல ஓட்டுக்கு ரூ1,000 அப்படிங்கிற கணக்கை தொடங்கி வைச்சது..

இதை திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கலையாம்.. இதை பத்தி திமுக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “அதிமுக ஓட்டுக்கு ரூ500தான் கொடுக்கும்.. நாங்க ஓட்டுக்கு ரூ1,000 கொடுத்தா போதும்னு நினைச்சோம்..

ஆனா அதிமுக இப்படி செய்யும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.. அவங்க ஓட்டுக்கு ரூ1,000 கொடுத்திருக்காங்க… அதனால நாங்களும் முதல்ல ரூ1,000தான் கொடுக்க ஆரம்பிச்சோம்.. ஆனால் பொதுமக்களே, எதிர்க்கட்சிக்காரங்களே ரூ1,000 கொடுக்கிறாங்க.. நீங்க ஆளும் கட்சிதானே.. கூடுதலா கொடுங்கன்னு கேட்டதால ஓட்டுக்கு ரூ2,000 தொடங்கி கொடுக்கப்பட்டிருக்குது” என்றனர்.

அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் போட்டி போடுகிற தொகுதிகளிலும் இதே நிலவரம்தான்..

அதிமுக கூட்டணியில இருக்கிற பாமக ஓட்டுக்கு பணம் கொடுக்கிறது இல்லைன்னுதான் இதுவரை இருந்தாங்க.. இந்த முறை தருமபுரியில சவுமியா அன்புமணி ஜெயிக்க ரூ1,000 கொடுத்திருக்காங்க.. பென்னாகரத்துல காங்கிரஸ் வேட்பாளர் ஜிகே மணி மகன் தமிழ்க்குமரனை தோற்கடிச்சாகனும்னு ஓட்டுக்கு ரூ1,000 கொடுத்திருக்காங்களாம்..

சாத்தூரில பாஜக ஓட்டுக்கு ரூ2,000 கொடுத்திருக்காங்க.. அவிநாசி தொகுதியில பாஜக ஓட்டுக்கு ரூ500 கொடுத்துச்சு.. ஆனா திமுக ரூ2,000 கொடுத்ததால பாஜகவும் கூடுதலாக பணம் கொடுக்குதாம்..

விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் சில இடங்களில் பணத்தை கொடுத்திருக்கு.. சேலம் தெற்கு தொகுதியில தவெக ரூ2,000 கொடுத்திருக்காங்க.. கோபிசெட்டிபாளையம், திருநெலேலியிலேயும் தவெக ரூ1,000 கொடுத்திருக்காங்க..

நாம் தமிழர் கட்சிதான் பணம் கொடுக்கலை.

சரிய்யா.. சென்னையில பட்டுவாடா ஜரூரா?

சென்னையைப் பொறுத்தவரைக்கும் பொதுவா எப்பவுமே பணம் அதிகமா கொடுக்க மாட்டாங்க.. இந்த முறை இங்கேயும் அதிமுக ஆரம்பிச்சு வைக்க திமுகவும் ஜரூரா கொடுத்திருச்சு.. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மாதிரி ஏரியாவுல பணப்பட்டுவாடா முழுவீச்சுல நடந்துருக்கு..

இதை பத்தி விசாரிச்சப்ப, “சென்னையில அதிமுகதான் ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பிச்சது.. ஏன்னா, அதிமுக ஓட்டுகளைத்தான் தவெக பிரிக்குதுன்னு நினைக்கிறாங்களாம்.. அதை பேலன்ஸ் செய்யதான் ஓட்டுக்கு பணம் கொடுத்தது அதிமுக.. அவங்க கொடுத்ததால திமுகவும் கொடுத்திருக்கு.. சென்னையில இரண்டு கட்சியுமே பணம் கொடுத்திருக்காங்க” என்றனர்.

கோவையில என்னதான் பிரச்சனை?

வர்றேன்.. கோவையில விசாரிச்சப்ப, ”தெற்கு தொகுதியில அதிமுக வேட்பாளரா அம்மன் அர்ஜூனன் போட்டியிடுறாரு.. அங்கே அதிமுக முதல்ல ஓட்டுக்கு ரூ1,000 கொடுத்து முடிச்சது..

திமுக வேட்பாளரா செந்தில் பாலாஜி போட்டி போடுற தொகுதி.. இங்கே திமுக ஓட்டுக்கு ரூ5,000-ன்னு கொடுக்க ஆரம்பிச்சது..

அப்ப ஒரு அம்மா, திமுக டீமை வழிமறிச்சு, “எனக்கு கொடுக்க வேண்டிய காசு ஏன் தரலை?”ன்னு உரிமையா கேட்டுச்சு..

அதுக்கு, “ஏம்மா.. உன் பேரு அதிமுககாரங்க லிஸ்ட்ல இருக்குதே”ன்னு திமுக டீம் சொன்னாங்க..

அந்த அம்மாவோ, “நீங்க சொல்றதெல்லாம் சரி.. ஆனா எங்க வீட்டுக்காரர்தான் அதிமுக.. எனக்கு ஸ்டாலின்தான் மாசம் ரூ1,000 பணம் கொடுக்கிறாரு.. பேங்க்ல பணம் போட்டுட்டு மெசேஜ் அனுப்புறாரு.. அது மகளிர் உரிமைத் தொகைன்னா.. இப்ப நீங்க கொடுக்கிறதும் ‘வாக்காளர் உரிமை தொகை’.. அந்த உரிமை தொகை கொடுக்கிற மாதிரி இந்த உரிமைத் தொகையும் கொடுத்துதான் ஆகனும்”னு சண்டை போட்டாங்க..

இப்படி தொகுதி முழுக்க திமுக டீமின் ஓட்டுக்கு 5,000 ரூபாய் பட்டுவாடா நல்லா ரீச் ஆனதால அம்மன் அர்ஜூனன் தரப்பு சண்டைக்கு போயிருச்சு..

திமுககாரங்ககிட்ட போய், “நாங்க 1,000 ரூபாய்தானே கொடுத்தோம்.. நீங்களும் 1,000 ரூபாய்தானே கொடுக்கனும்.. ஏன்யா கூட கொடுக்கிறீங்க?”ன்னு தகராறு பண்ணியிருக்காங்க..

இந்த பஞ்சாயத்து தொண்டாமுத்தூர் தொகுதியில போட்டியிடும் அதிமுக சீனியர் எஸ்பி வேலுமணிகிட்ட போனது..

ஆனா எஸ்பி வேலுமணிகிட்ட, “உங்க தொகுதியில அதிமுக ரூ2,000 கொடுத்திருக்குது.. நாங்க வெறும் ரூ1,000 தானே கொடுத்துட்டு அமைதியா இருக்கோம்.. நாங்க உங்ககிட்ட சண்டை போட்டோமா?

”நாங்க கொடுத்த மாதிரி ரூ1,000 மட்டும் நீங்க கொடுக்கனும்”னு எதிர்வாதம் செய்ய எஸ்பி வேலுமணிக்கு ‘கிறுகிறுத்து’ போய்விட்டதாம்..

இதனால கடுப்பாகிப் போய், “எதுக்குய்யா பஞ்சாயத்து பேசிகிட்டு.. அவங்க அவங்க வேலையை பாருங்க”ன்னு பஞ்சாயத்தை கலைச்சு விட்டுட்டாரு..

அதுக்குள்ள திமுக டீம் ஒட்டுமொத்த கோவை தெற்குதி தொகுதிக்குள் ரூ,5000 பட்டுவாடா செஞ்சும் முடிச்சுருச்சு..

இதுல ரொம்பவே கடுப்பாகிப் போன அம்மன் அர்ஜூனன், தனக்கு சப்போர்ட்டா யாருமே இல்லையேன்னு கோபப்பட்டு தன்னோட ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்துல இறங்கிட்டாரு.. அதனால அங்க ஒரே டென்ஷனா இருக்குது..

கோவை வடக்குலேயும் பதற்றம்தான்.. பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டி போடும் தொகுதி.. இங்கே பாஜக ஓட்டுக்கு ரூ1,000 கொடுத்திருக்கு.. திமுக ரூ1,500 தந்திருக்கு.. அதனால, “அதெப்படி நீங்க எங்களைவிட கூடுதலா ரூ500 கொடுக்கலாம்”னு பாஜககாரங்க சண்டைக்கு போயிருக்காங்க.. அதுக்கு திமுக சைடுல இருந்து, ”நீங்க 6 மாசத்துக்கு முன்னாடி இருந்தே இங்கதான் போட்டி போடுவோம்னு ப்ளான் பண்ணியே கர்ப்பிணிகளுக்கு, முதியவர்களுக்கு அரை லிட்டர், 1 லிட்டர் பால்னு இலவசமா கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்கதானே..
அந்த கணக்குக்கு இந்த ரூ500 சரியா போச்சுன்னு வெச்சுக்கோங்க”ன்னு கூலா சொல்லி இருக்காங்க..

இதுக்கு நடுவுல கோவை தெற்கு தொகுதியில எலக்‌ஷனே நிக்க போகுதுன்னு வதந்தி கிளம்ப மாவட்ட ஆட்சியரே விளக்கம் கொடுத்து நிலைமை சமாளிச்சாலும் திக் திக்னுதான் இருக்குதான் கோவை ஏரியா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share