தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை அனுப்பும் பணி இன்று தொடங்கியது. மாவட்டங்களிலுள்ள அரசு அலுவலகங்களில் இருந்து, உரிய போலீஸ் பாதுகாப்புடன் இந்த பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்கள் தங்கள் செல்போன்களை வெளியே பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 75,064 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 325 வாக்குச்சாவடிகள் பெண்களால் நிர்வகிக்கப்பட உள்ளன. 75 வாக்குச்சாவடிகள் இளைஞர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 975 இடங்களில் மொத்தம் 4,085 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வேளச்சேரி தொகுதியில் 315 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 192 வாக்குச்சாவடிகள் உள்ளன. திருவிக நகர் தொகுதியில் நம்மாழ்வார்பேட்டை அரசு பள்ளியில் மட்டும் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 14.59 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக மாநகர் பேருந்துகளில் இலவச பயண வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. 234 தொகுதிகளிலும் மொத்தம் 1.06 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 5,875 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.543 கோடி என தெரிவித்துள்ளார்.
