வைபை ஆன் செய்ததும் அதிமுகவின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. digital thinnai – amitshah itching eps via sengottaiyan
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“கடந்த மார்ச் 25ஆம் தேதி இரவு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று அன்று இரவே அவரை சந்தித்தார்.
இதன் மூலமாக அதிமுக பாஜக கூட்டணி உருவாகிடும் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்… எடப்பாடியோடு தொடர்ந்து முரண்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனையும் திடீரென டெல்லிக்கு அழைத்து பேசியிருக்கிறார் அமித்ஷா.
எடப்பாடியை சந்தித்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில்… அதற்குள் அவசரமாகவும் ரகசியமாகவும் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்து அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்ட நிலையில்… அந்தக் கட்சிக்குள் தொடர்ந்து கலகக் குரல் எழுப்பி வந்த செங்கோட்டையனை அழைத்து அமித்ஷா சந்திக்க வேண்டிய காரணம் என்ன என்ற கேள்விகள் அதிமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.
இது பற்றி டெல்லி வட்டாரத்தை விசாரித்த போது, ‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக வேண்டும்’ என்று அமித்ஷா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்று வெளிப்படையாக தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும், அப்படி இல்லை என்றால் அதிமுகவில் கலகத்தை உருவாக்கி… செங்கோட்டையனை பொதுச்செயலாளர் ஆக்கி பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் அனைவரையும் ஒன்றாக்கி தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் திட்டம்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தான் பிப்ரவரி மாதத்தில் எடப்பாடிக்கு எதிராக கலக குரல் எழுப்பினார் செங்கோட்டையன். சட்டமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த போது உள்ளேயே அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
செங்கோட்டையனை துருப்புச் சீட்டாக வைத்து டெல்லி இப்படி விளையாடுவதை உணர்ந்துதான்… எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் அழைப்பை ஏற்று நேரடியாக அவரை சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைவதற்கான சம்மதத்தையும் தெரிவித்துவிட்டு வடை பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு விட்டு வந்தார் எடப்பாடி. அதே நேரம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதில்லை என்பதிலும் எடப்பாடி உறுதியாகவே இருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில் அமித்ஷா- எடப்பாடி சந்திப்பு நடந்து முடிந்த பிறகு… தனக்கு தொடர்பில் இருக்கும் பாஜக புள்ளிகளிடம் செங்கோட்டையன் வருத்தப்பட்டிருக்கிறார். ’என்னை ஒரு கருவியாக பயன்படுத்தினீர்கள். ஆனால் இப்போது எடப்பாடி உங்களை வந்து சந்தித்து விட்ட பிறகு என்னை அப்படியே விட்டு விட்டீர்கள்’ என்பதுதான் செங்கோட்டையனின் வருத்தம்.
இந்த விஷயம் தற்போது தமிழ்நாடு விவகாரங்களை கையாண்டு வருகிற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே சென்னையில் செங்கோட்டையனை அழைத்து பேசினார் நிர்மலா சீதாராமன். அவர் மூலமாக அமித் ஷாவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

செங்கோட்டையனின் வருத்தத்தை போக்கும் வகையில் உடனடியாக அவரை டெல்லிக்கு அழைத்தார் அமித்ஷா. digital thinnai – amitshah itching eps via sengottaiyan
’உங்கள் மீது நாங்கள் தொடர்ந்து நல்லெண்ணத்தில் தான் இருக்கிறோம், உங்களை கைவிட மாட்டோம்’ என்று செங்கோட்டையனை அழைத்து அவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார் அமித்ஷா.
இது மட்டுமல்ல செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறவர்.
இந்த நிலையில் செங்கோட்டையனை அழைத்து அமித்ஷா சந்தித்ததன் மூலம், அதிமுகவை ஒருங்கிணைப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறாரோ என்ற விவாதங்களும் அதிமுக கட்சிக்கு உள்ளேயே நடந்து கொண்டிருக்கின்றன.
செங்கோட்டையன் டெல்லி சென்ற தகவலை நேற்று இரவு அறிந்து கொண்ட எடப்பாடி அது தொடர்பாக தன்னுடைய பாஜக தொடர்புகளிடம் இரவே விசாரித்திருக்கிறார்.
செங்கோட்டையனின் மனக்குமுறலை தீர்ப்பதற்கான சந்திப்பா அல்லது அதிமுகவை ஒருங்கிணைப்பதில் செங்கோட்டையன் இப்போதும் அமித்ஷாவின் துருப்புச் சீட்டாகத்தான் இருக்கிறாரா என்ற விவாதங்கள் பரபரப்பை கூட்டி இருக்கின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.