எண்ணெய் நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு… டீசல் ஏற்றுமதி வரி அதிரடி உயர்வு

Published On:

| By Pandeeswari Gurusamy

Diesel

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டீசல் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ.14 ஆகவும், விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 12.5 ஆகவும் உயர்த்தியுள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.மத்திய வருவாய்த் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.14 வரியும், ஏடிஎஃப் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.12.5 வரியும் விதிக்கப்படும். உள்நாட்டு நுகர்வுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் ஜூன் 16 முதல் அமலுக்கு வருகின்றன.

ADVERTISEMENT

மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு இருப்பை உறுதி செய்யும் வகையில் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 27 அன்று ஏற்றுமதி வரி, சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) மற்றும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி (RIC) உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த வரி விகிதங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றன. கடைசியாக ஜூன் 1-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் ஆகியவற்றின் சராசரி விலைகளின் அடிப்படையில் இந்த விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதனிடையே, நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை போதுமான அளவில் இருப்பதாக பெட்ரோலிய அமைச்சகம் திங்கள்கிழமை உறுதியளித்துள்ளது. எனினும், பெருநிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் மொத்த வாங்குதலை குறைத்து சில்லறை விற்பனை நிலையங்களில் நேரடியாக வாங்குவதால் சில இடங்களில் விநியோக நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனைச் சீரமைக்கவும், சாதாரண நுகர்வோரைப் பாதுகாக்கவும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும் என 90 நாட்களுக்கு தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களும் தொழில்துறையினரும் எரிசக்தியை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share