தனுஷ் நடிக்கும் படத்தில் கண்கலங்க வைக்கிற, நெகிழ வைக்கிற, உத்வேகம் கொள்ள வைக்கிற, பிரமிக்க வைக்கிற இடங்கள் நிச்சயம் இருக்குமென்ற நம்பிக்கையை ரசிகர்களுக்குத் தந்துள்ளன அவரது முந்தைய படங்கள். அதேபோல, குறிப்பிட்ட சில படங்களுக்கான ‘ஆடியோ’ அல்லது ’ட்ரெய்லர்’ வெளியீட்டு விழா மேடைகளில் அவர் பேசுகிற விஷயங்களும் சர்ச்சைக்குள்ளாகும்.
அந்த வரிசையில், சிறு வயதில் இட்லி தினமும் இட்லி சாப்பிட வேண்டுமென்று ஏங்கியதாகவும், அப்போது தங்களிடத்தில் பணம் இல்லை எனவும் சமீபத்தில் நடந்த ‘இட்லி கடை’ பட விழாவின் போது கூறியது ‘வைரல்’ ஆனது.

அடுத்த சில மணி நேரங்களில் ‘இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்குது’, ‘ஒரு டைரக்டரோட மகனா இருந்தவரால இட்லி சாப்பிட வசதி இல்லையாம்’ என்ற ரேஞ்சில் எதிர்க்குரல்களும் சமூகவலைதளங்களில் பரவலாகின.
எதிர்குரல்கள் அதிகமானால் ரசிகர்களின் ஆதரவுக்குரல்கள் சும்மாவா ஒலிக்கும். ‘தனுஷ் பேசுனதுக்கு இதோ இருக்குங்க ஆதாரம்’ என்பது போல மறைந்த இயக்குனர், கதாசிரியர் விசு பேசிய பழைய வீடியோ ஒன்றை ‘கட்’ செய்து அவர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் தனது உதவி இயக்குனர் ஒருவர் ‘மணல் கயிறு’ முதல் ‘சகலகலா சம்பந்தி’ படம் வரை பணியாற்றியதாகவும், அவர்தான் இயக்குனர் கஸ்தூரி ராஜா எனவும் சொல்லியிருக்கிறார்.
சென்னை கண்ணம்மாபேட்டையிலுள்ள ஒரு சிறிய வீட்டில் அவரது குடும்பம் வசித்ததாகவும், தனது மூத்த சகோதரரின் வீட்டிற்கு வந்து அவரது குழந்தைகள் டிவி பார்ப்பார்கள் எனவும், அவர்கள் வீட்டில் டிவி இல்லாததே அதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
‘இப்போ சொல்லுங்க, எங்க தலைவர் பொய் சொன்னாரா’ என்கிற ரேஞ்சில் பதிவுகளை அள்ளியிறைத்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். ’இது தனுஷ் ஹேட்டர்ஸுக்கான பதில்’ என்கிற அவர்களது குரல், இப்போது இந்த இண்டர்நெட் மோதலை இன்னும் சூடாக்கியிருக்கிறது.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, ‘வெள்ளிக்கிழமையானால் வெறுமனே படம் பார்க்க மட்டும் தியேட்டருக்குச் செல்வோம்’ என்றிருக்கிற ரசிகர்கள் நிலைமைதான் ரொம்பப் பாவம்.
ஒருவேளை இந்த மோதலின் ‘ரெஃபரன்ஸ்’ படத்தில் வசனமாக, காட்சியாக இடம்பெற்றால், சுற்றியிருக்கும் ரசிகர்கள் ‘ஹோ’வென்று கூச்சலிடும்போது ‘சின்னதம்பி’ படத்தில் வரும் கவுண்டமணி போலத் தாளப் பிசகுடன் கைதட்ட வேண்டியிருக்கும்..!
