இந்தி கட்டாயமில்லை-பட்னவிஸ்… மோடிக்கு முதல்வரின் 3 கேள்விகள்!

Published On:

| By Aara

மகாராஷ்டிரத்தில் மராத்தி மட்டுமே கட்டாய மொழியாக இருக்கும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறியிருக்கும் நிலையில், பாஜக மாநில முதல்வரின் கருத்தை வைத்தே பிரதமர் மோடிக்கு கேள்விகளைத் தொடுத்துள்ளார் தமிழ்நாடு் முதல்வர் ஸ்டாலின்.

மகாராஷ்டிராவில் மராத்தி மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகளும்,மராத்திய அமைப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்தியை கட்டாயமாக்க அனுமதிக்காது என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ராஜ் தாக்கரேவால் நிறுவப்பட்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, அரசாங்கம் தனது முடிவை திரும்பப் பெறவில்லை என்றால் போராட்டம் தவிர்க்க முடியாதது என்று எச்சரித்தது.

ADVERTISEMENT

இந்தியை கட்டாயமாக்குவது மராத்தி மொழி, அடையாளம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க ஒரு சூழ்ச்சி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. புதிய கல்விக் கொள்கையின் போர்வையில் மராத்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் எச்சரித்தது. Devendra Fadnavis claims MK Stalin question to Modi

இதற்கிடையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக்கும் முடிவை ரத்து செய்யுமாறு மாநில அரசின் மொழி ஆலோசனைக் குழு முதலமைச்சரை வலியுறுத்தியது. மொழி ஆலோசனைக் குழுவின் தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக், இந்தியை கட்டாயமாக முன்வைப்பதற்கு முன்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) தங்கள் எண்ணங்களையும் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறினார்.

ADVERTISEMENT

இது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாகக் கூறுவது தவறு. மராத்தி மட்டுமே கட்டாயமாக இருக்கும். வேறு எந்த மொழியும் கட்டாயமாக இருக்காது’ என்றும் கூறினார்.

மேலும் அவர், “மராத்திக்கு பதிலாக இந்தி கட்டாயமாக்கப்படவில்லை. மராத்தி மட்டுமே கட்டாயம். புதிய கல்விக் கொள்கை மூன்று மொழிகளைக் கற்க வாய்ப்பளித்துள்ளது. இந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே, இரண்டு இந்திய மொழிகளில் மராத்தியை கட்டாயமாக்கியுள்ளோம். இந்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி அல்லது வேறு எந்த மொழியையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். இவற்றுக்கு வெளியே எதையும் நீங்கள் எடுக்க முடியாது.

ADVERTISEMENT

வழிகாட்டும் குழு தனது அறிக்கையில் இந்தி மூன்றாவது மொழியாக இருந்தால், அதற்கு ஆசிரியர்கள் உள்ளனர் என்று கூறியது. பிற மொழிகளைத் தேர்ந்தெடுத்தால் அதை சொல்லித் தர ஆசிரியர்கள் இல்லை; அதுதான் குழுவின் பரிந்துரை. இதில் எங்கும் எந்த அத்துமீறலும் இல்லை.

இந்தி தவிர வேறு மொழியை யாராவது கற்றுக்கொள்ள விரும்பினால், அதைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு முழு அனுமதியும் வழங்குவோம். ஏனெனில் புதிய கல்விக் கொள்கையால் அத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறைந்தது 20 மாணவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஒரு ஆசிரியரை வழங்க முடியும், ஆனால் அதற்குக் குறைவான மாணவர்கள் இருந்தால், அந்த மொழியை ஆன்லைனில் அல்லது வேறு வழியில் கற்பிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே கட்டாயமாக இருக்கும். வேறு எந்த கட்டாயமும் இருக்காது” என்று விளக்கியுள்ளார் மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னவிஸ்.

தேவேந்திர பட்னவிஸின் இந்த கருத்தை சுட்டிக் காட்டித்தான் பிரதமர் மோடிக்கு கேள்விகளை இன்று (ஏப்ரல் 21) எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். Devendra Fadnavis claims MK Stalin question to Modi

“மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறுகிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததற்கு இது அவரது பதட்டத்தின் தெளிவான வெளிப்பாடாகும்.

மாண்புமிகு பிரதமரும் மத்திய கல்வி அமைச்சரும் இப்போது தெளிவுபடுத்த வேண்டும்:

  • தேசிய கல்விக் கொள்கையின் (#NEP) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?
  • அப்படியானால், தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?
  • கட்டாய மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?” என்று கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். Devendra Fadnavis claims MK Stalin question to Modi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share