காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு நாளை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தநாள். முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் மறைவு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என செல்வப்பெருந்தகை ஏற்கனவே நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், சென்னை மாநகரில் செல்வப் பெருந்தகையை வாழ்த்தி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் அரசியல் ரீதியாக சலசலப்பையும் பரபரப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வாழ்த்து போஸ்டரில் என்ன பரபரப்பு? அதன் வாசகங்கள் தான் பரபரப்பாகிவிட்டது…
’ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு! ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் 2026இன் துணை முதல்வரே வாழ்த்துக்கள்’ என்ற வாசகங்களோடு காங்கிரஸ் மாநில செயலாளர் கவி காமு ஏவிஎம் ஷெரிப் ஒட்டிய போஸ்டர்கள்தான் பரபரப்புக்கு வித்திட்டன.

ஏப்ரல் 11 ஆம் தேதி அதிமுக-பாஜக கூட்டணியை முறைப்படி அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026 இல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி மலரும் என்று தெரிவித்தார். அப்போது அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் சம்மதம் என்பதைப் போல அமர்ந்திருந்தார். Deputy CM Selvaperundhakai…controversy poster
எனவே 2026 இல் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராகி விட்டது என்பதே அரசியல் அரங்கில் பேசப்படுகிற முக்கியமான விவாதம்.
அமித்ஷாவின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரலை உரத்து எழுப்பியது. அதேபோல காமராஜர் ஆட்சியை விரைவில் அமைப்போம் என மாநில காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகை பதவி ஏற்றுக்கொண்டபோதே அறிவித்தார்.

இத்தகைய பின்னணியில்தான்… 2026 ன் துணை முதல்வர் என செல்வப் பெருந்தகையை அடையாளப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் திமுக வட்டாரத்திலும் கவனிக்கப்பட்டன.
ஊடகங்களில் இந்த செய்தி வந்தவுடன் போஸ்டர் ஒட்டிய நிர்வாகி ஏ.வி.எம். ஷெரிப்புக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று என்னை சந்தித்தவர்களிடம் நான் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளேன். எனது பிறந்தநாளை முன்னிட்டு தங்களுடைய இந்த சுவரொட்டி விளம்பர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும். உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும்.
தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்துபேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை போஸ்டர்களை ஒட்டிய நிர்வாகி ஏ.வி.எம். ஷெரிப்பை மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு, காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்திருப்பது பற்றி கேட்டோம்.
“நான் கால் நூற்றாண்டாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். இது என்னுடைய குரல் மட்டுமல்ல. லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்களின் குரல். நான் மறைந்த தன்மானத் தலைவர் இளங்கோவனின் பாசறையில் வளர்ந்த சிறுவன்.
அவர் 2011 இல் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயநல ஆட்சியா இங்கேயும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் எழுப்பியவர். அவர் எழுப்பிய குரலைதான் நான் மீண்டும் எழுப்பியிருக்கிறேன். Deputy CM Selvaperundhakai…controversy poster
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு பெற்றால் தான் மக்கள் மத்தியில் கட்சியை வளர்க்க முடியும். இந்த சுவரொட்டி என்பது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. காங்கிரஸ் மாநில தலைமைக்கும் இப்போது உங்களிடம் சொன்னது தான் என்னுடைய விளக்கம். என்றைக்கும் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று கூறினார் ஏவிஎம் ஷெரிப்.