SRH vs DC : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தங்கள் வசம் ஈர்த்துள்ளது ஐதராபாத்.
ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்று வரும் 35வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டிராவிஸ் ஹெட் அதிரடி பேட்டிங்!
நடப்பு தொடரில் முதன்முறையாக தனது சொந்த மைதானமான அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற அந்த அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் என்ற இமாலய ரன்களை எட்டியது. இதன்மூலம் நடப்பு தொடரில் மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரை பதிவு செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார்.
அதே போன்று 6வது வீரராக களமிறங்கிய சபாஷ் அகமது அரைசதம்(59) அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 55 ரன்களை வழங்கினாலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடக்கமே சொதப்பல்!
தொடர்ந்து 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்ய வந்தது.
வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரில் முதல் 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய நிலையில் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னரும் (1) வெளியேறினார்.
எனினும் 3வது விக்கெட்டுக்கு இணைந்த மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரல் சிறிதும் தயக்கமின்றி பந்தை பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக ஆடினர்.
அதனால் அந்த அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்தது.
மேலும் அதிரடியாக ஆடிய மெக்கர்க் அரைசதம் அடித்த நிலையில் 65 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் அபிஷேக் போரலும் 42 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் ரிஷப் பந்தை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
https://twitter.com/Aryanexists/status/1781740162864791702
நடராஜன் 4 விக்கெட்!
ரிஷப் பந்தின் மெதுவான பேட்டிங்கும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்காத நிலையில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 4 ஓவர்களில் 1 ஓவர் மெய்டன் செய்து, 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மேலும் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஐதராபாத் அணி 2வது இடத்திற்கு முன்னேற்றியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் : எங்கு குறைவு? எங்கு அதிகம்? – முழு விவரம்!