இசையமைப்பாளர் இளையராஜா மீது இசை நிறுவனமான சரிகம இந்தியா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இளையராஜா தனது படைப்புகளுக்கு காப்புரிமை கோரி வருகிறார்.
அதுபோன்று இளையராஜா மற்றும் சரிகம நிறுவனத்திற்கு இடையே 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு காப்புரிமை தொடர்பான வழக்கில், இளையராஜா தனிப்பட்ட முறையில் இந்த படங்களின் பாடல்களுக்கு உரிமை கோரவோ பிற டிஜிட்டல் தளங்களுக்கு உரிமம் வழங்கவோ முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடையை நீக்க கோரி இளையராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் இளையராஜாவுக்கு எதிராக சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
அதில், நீதிமன்ற தடையையும் மீறி இளையராஜா தொடர்ந்து அந்த பாடல்களுக்கு உரிமை கொண்டாடி வருகிறார். குறிப்பாக முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம் பாடல் தொடர்பாக இளையராஜா ”பியான்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்திடம் உரிமை கேட்டு சட்ட நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு கொடுத்துள்ளார். அந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு அல்லது அமலில் உள்ள தடை உத்தரவு குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லி வழக்கு குறித்து உயர் நீதிமன்ற கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தான் அந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளையராஜாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தியோகபூர்வமாக ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கு அனுப் ஜெயராம் பம்பானி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக இளையராஜா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
