நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய ஆர்வத்தையும் சர்வதேச பந்தய பாதைகளில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதில் அஜித்தின் மனைவி ஷாலினி, கணவர் ரேசில் ஈடுபடும் போது தனக்கு ஏற்படும் பதற்றத்தையும் அதே வேளையில் தனது கனவுகளை தீவிரமாக நோக்கும் அவரது ஆர்வத்திற்கு என்றும் உறுதுணையாக நிற்பதையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
கார் பந்தயத் தொடர்களில் பங்கேற்பது வெறும் வெற்றிக்காகவோ அல்லது கோப்பைகளுக்காகவோ மட்டுமல்ல. சாத்தியமற்றது என எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் அந்த சில நொடிகளுக்காகவே அஜித் பந்தய களத்தில் ஈடுபடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
அஜித்தின் மகன் மற்றும் மகள் இருவரும் தங்களது தந்தையின் உழைப்பு மற்றும் மதிப்பீடுகள் குறித்து பேசியுள்ளனர்.
இந்த ட்ரெய்லரில் அதிவேக ரேசிங் காட்சிகள், பந்தய பாதையில் ஏற்படும் விபத்துகள், திருப்பங்கள் ஆகியவை ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையோடு விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார். ஷாலினி வெளியிடும் இப்படம் நவம்பரில் திரைக்கு வர உள்ளது.
இந்த ட்ரெய்லரை ரோகிணி திரையரங்கில் ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.எல்.விஜய் ஆகியோர் ரசிகர்களுடன் கண்டு ரசித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எல்.விஜய், ”இவ்வளவு பெரிய படத்திற்கு வித்தியாசமான மார்க்கெட்டிங் அணுகுமுறை கண்டிப்பாக தேவை. சிறுவயதில் நாம் செய்யத் தவறிய அல்லது விட்டுச் சென்ற விஷயங்களைத் தேடி அலைவது தான் மனித வாழ்க்கை. இந்த ஆவணப்படமும் அதுபோன்ற ஒரு கதைக் களத்தைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
