பாஜகவை வீழ்த்துவதே முதல் கடமை – மு.வீரபாண்டியன்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPI

இந்தியாவின் மிகச் சிறந்த விழுமியங்களைச் சிதைக்கும் பாஜகதான் எங்கள் முதன்மை எதிரி. அதை வீழ்த்துவதுதான் எங்கள் முதல் கடமை. இதற்கு முன்னால் உள்ள மற்ற காரணிகளை எளிதில் கடந்து செல்ல முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (மார்ச் 26) செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், “திமுகவின் பேச்சுவார்த்தை குழு சந்தித்து போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட பகுதிகளை திமுக ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இடங்கள் குறித்த விவரங்களை கூட்டணி கட்சிகளின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது” என தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, விழுமியங்களைச் சிதைக்கும், கூட்டாட்சி முறையைச் சிதைக்கும், சட்டத்தின் ஆட்சியைச் சிதைக்கும் அனைத்தும் எதிர்காலத்துக்கு பேராபத்து. எனவே, இந்தியாவின் மிகச் சிறந்த விழுமியங்களைச் சிதைக்கும் பாஜகதான் எங்கள் முதன்மை எதிரி. அதை வீழ்த்துவதுதான் எங்கள் முதல் கடமை. இதற்கு முன்னால் உள்ள மற்ற காரணிகளை எளிதில் கடந்து செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் “பல கட்சிகள் கூட்டணியில் சேரும்போது ஏற்ற இறக்கங்கள், எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துக்கள் வரும். ஆனால் இவை அனைத்துக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் ஜனநாயகத்துக்கு இடம் உண்டு. ஆனால் பாஜகவில் அந்த இடம் இல்லை. அவர்கள் டெல்லிக்குச் சென்று, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற நிலை உள்ளது. அங்கு ஜனநாயகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. இங்கோ ஜனநாயகத்தின் கதவுகள் திறந்துள்ளன. இது தமிழக மக்களுக்கு நன்கு புலப்படும். அவர்கள் மிக அனுபவம் வாய்ந்தவர்கள், அறிவு சார்ந்தவர்கள். அவர்கள் மிகச் சரியான தீர்ப்பளிப்பார்கள். எனவே எங்கள் கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share