சுருட்டை முடி இருப்பவர்களுக்கு அதை அழகாக வைத்திருப்பது சில நேரங்களில் சவாலாகவே இருக்கும்.
ஒரு நாள் இயற்கையாக அழகாக சுருண்டிருக்கும் முடி, மறுநாள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஃபிரிஸ்ஸாக மாறிவிடும்.
அதற்காக தினமும் ஸ்ட்ரெய்ட்னர் அல்லது கர்லிங் அயரைக் கொண்டு முடியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சரியான பராமரிப்பு முறையைப் பின்பற்றினால் இயற்கையான சுருட்டையே அழகாக வைத்திருக்க முடியும்.
சுருட்டை முடிக்கு ஏன் கூடுதல் கவனம் தேவை?
சுருட்டை முடியின் தன்மை காரணமாக இயற்கையான எண்ணெய், முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை எளிதாகப் பரவாது. இதனால் வறட்சி, ஃபிரிஸ் மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே சுருட்டை முடிக்கு ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஷாம்பூவைத் தேர்வு செய்வதில் கவனம்
சுருட்டை முடியை பராமரிப்பதில் பயன்படுத்தும் ஷாம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமாக சுத்தம் செய்யும் தன்மை கொண்ட சில ஷாம்பூக்கள் முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெயையும் ஈரப்பதத்தையும் அகற்றிவிடலாம். இதனால் முடி மேலும் வறண்டு, சுருட்டின் வடிவம் பாதிக்கப்பட்டு ஃபிரிஸ் அதிகரிக்கலாம்.
முடியின் தன்மைக்கு ஏற்ப மென்மையான கிளென்சர் அல்லது சல்பேட் குறைவான, அல்லது சல்பேட் இல்லாத ஷாம்பூவைத் தேர்வு செய்வது உதவியாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் ஒரே தயாரிப்பு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. முடியின் எண்ணெய் தன்மை, பயன்படுத்தும் ஸ்டைலிங் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பார்த்தே தேர்வு செய்ய வேண்டும்.
கண்டிஷனர் இல்லாமல் சுருட்டை முடி பராமரிப்பது கடினம்
சுருட்டை முடிக்கு கண்டிஷனர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முடியின் கீழ்பகுதி மற்றும் நுனிகளில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் அங்கு கூடுதல் கவனம் தேவை.
கண்டிஷனரைப் பயன்படுத்தும்போது முடியை மெதுவாக விரல்களால் பிரித்து சிக்கல்களை அகற்றலாம். சிலருக்கு லீவ்-இன் (Leave-IN) கண்டிஷனர் அல்லது லேசான ஸ்டைலிங் தயாரிப்பு கூடுதல் உதவியாக இருக்கும். எந்தப் பொருள் சரியாக வேலை செய்கிறது என்பது முடியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
குளித்த பிறகு சீப்பை எடுக்க வேண்டாம்
சுருட்டை முடியைப் பராமரிப்பதில் குளித்த பிறகு செய்யும் ஒரு சிறிய தவறு கூட முழு லுக்கையும் மாற்றிவிடும். முடி ஈரமாக இருக்கும்போது அதை பலமாக சீவுவது அல்லது உரசுவது சுருட்டின் இயற்கையான வடிவத்தை கலைத்துவிடலாம்.
முடி இன்னும் ஈரமாக இருக்கும்போதே கைகளால் மெதுவாக ‘scrunch’ செய்து சுருட்டுகளை அதன் இயல்பான வடிவத்துக்கு கொண்டு வரலாம். தேவையெனில் அந்த நேரத்தில் சிறிதளவு ஸ்டைலிங் ஜெல் அல்லது பொருத்தமான தயாரிப்பைப் பயன்படுத்தலாம்.
டவலால் முடியை தேய்க்காதீர்கள்
குளித்த பிறகு தலைமுடியை டவலால் வேகமாகத் தேய்ப்பது சுருட்டை முடிக்கு நல்ல பழக்கம் அல்ல. அதிக உராய்வு ஃபிரிஸ்ஸை அதிகரித்து, ஏற்கெனவே உருவாக்கிய சுருட்டுகளின் வடிவத்தையும் கலைக்கலாம்.
முடியில் இருக்கும் தண்ணீரை மெதுவாக அழுத்தி எடுப்பது நல்லது. மைக்ரோஃபைபர் டவல் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். முடியை இயற்கையாக உலர விடுவதும் ஒரு வழி. வேகமாக உலர வேண்டுமெனில் குறைந்த வெப்பத்தில் டிஃப்யூசர் பயன்படுத்தலாம்.
‘No-poo’, ‘Co-washing’ என்றால் என்ன?
சுருட்டை முடி பராமரிப்பில் ‘no-poo’ மற்றும் ‘co-washing’ போன்ற முறைகள் பிரபலமாக உள்ளன. ‘No-poo’ என்பது வழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்தாமல் முடியைப் பராமரிக்கும் முறையைக் குறிக்கிறது. ‘Co-washing’ முறையில் ஷாம்பூவுக்குப் பதிலாக கண்டிஷனரைப் பயன்படுத்தி தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பை சுத்தம் செய்ய முயற்சிக்கப்படுகிறது.
ஆனால் இத்தகைய முறைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி பொருந்தாது. அதிக எண்ணெய், வியர்வை அல்லது ஸ்டைலிங் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் சேரும் படிவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே தங்களுடைய முடியின் தன்மையைப் புரிந்துகொண்டு முறையைத் தேர்வு செய்வதே முக்கியம்.
சுருட்டை முடிக்கு அதிக வால்யூம் பெறுவது எப்படி?
சுருட்டை முடியில் வேர்ப்பகுதிக்கு சிறிது வால்யூம் கொடுக்க வேண்டும் என்றால், முடி உலரும் நேரத்தில் தலையை மெதுவாகக் கீழே குனிந்து வேர்களை கைகளால் லேசாக அசைக்கலாம். கிளிப்புகளைப் பயன்படுத்துவதும் ஒரு வழி.
ஹேர் டிரையரைப் பயன்படுத்தினால் குறைந்த வெப்பத்துடன் டிஃப்யூசர் பயன்படுத்துவது உதவியாக இருக்கும். அதிக வெப்பம் சுருட்டை முடியில் ஃபிரிஸ்ஸை அதிகரிக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை.
சுருட்டை முடிக்கு ஹேர் கட் எப்படி இருக்க வேண்டும்?
சுருட்டை முடிக்கு ஹேர் கட் செய்யும்போது அதன் இயற்கையான curl pattern-ஐ கருத்தில் கொள்வது முக்கியம். ஈரமாக இருக்கும் போது முடி நீளமாகத் தோன்றுவதால், உலர்ந்த பிறகு அதன் நீளம் மற்றும் வடிவம் மாறக்கூடும்.
இதனால் சில சுருட்டை முடிக்கு நிபுணர்கள் dry cut முறையைப் பயன்படுத்துகின்றனர். உலர்ந்த நிலையில் சுருட்டுகளின் இயற்கையான அமைப்பைப் பார்த்து வெட்டுவதால் முடியின் இறுதி வடிவத்தை முன்கூட்டியே கணிக்க எளிதாக இருக்கும். சரியான லேயர்ஸ் அமைத்தால் சுருட்டை முடிக்கு நல்ல வடிவமும் இயற்கையான வால்யூமும் கிடைக்கலாம்.
தினசரி பராமரிப்பில் முக்கியமானது என்ன?
சுருட்டை முடிக்கு தினமும் முழுமையான ஸ்டைலிங் செய்வது அவசியமில்லை. சில நேரங்களில் தண்ணீரை சிறிதளவு தெளித்து, ஃபிரிஸ்ஸான பகுதிகளில் மட்டும் சிறிய அளவு பொருத்தமான ஹேர் தயாரிப்பைப் பயன்படுத்தினாலே சுருட்டுகளை மீண்டும் வடிவத்துக்கு கொண்டு வர முடியும்.
மேலும் முடியை அடிக்கடி கழுவுவது அவசியமா என்பதும் ஒவ்வொருவரின் முடி மற்றும் ஸ்கால்ப் தன்மையைப் பொறுத்தது. சிலருக்கு வாரத்தில் இரண்டு முறை போதுமானதாக இருக்கலாம்; மற்றவர்களுக்கு அதைவிட அடிக்கடி கழுவ வேண்டியிருக்கலாம். எனவே பிறர் பின்பற்றும் ருடீனை அப்படியே நகலெடுப்பதைவிட, தங்கள் முடி எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை கவனிப்பதே சிறந்த வழி.
