மழை நேரம், மாலை டீ நேரம் வந்தாலே சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
அப்படிப்பட்ட நேரங்களில் எளிதாக செய்து அசத்தக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் காலிஃப்ளவர் பக்கோடா.
வெளியில் வாங்கும் பக்கோடாவைப் போலவே வீட்டிலேயே சுவையாகவும், குருமுறுப்பாகவும் சில எளிய டிப்ஸ்களுடன் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 1 நடுத்தர அளவு
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 முதல் 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
சீரகத்தூள் அல்லது ஓமம் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது
எண்ணெய் – பொரிப்பதற்கு
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்யுங்கள்
காலிஃப்ளவரை சிறிய பூக்களாக வெட்டி, கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு வடிகட்டி, அதிலுள்ள தண்ணீரை முழுமையாக வடிக்க வேண்டும். இந்த நடைமுறை காலிஃப்ளவரை சுத்தப்படுத்துவதோடு, பக்கோடா மொறுமொறுப்பாக வரவும் உதவும்.
பக்கோடா மாவு எப்படி தயாரிப்பது?
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், சீரகத்தூள் அல்லது ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து, மாவு காலிஃப்ளவரில் நன்றாக ஒட்டும் அளவுக்கு மட்டுமே கலக்க வேண்டும். மிகவும் நீர்த்ததாக இருக்கக்கூடாது.
இதில் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்தால் கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
பொன்னிறமாக பொரித்தெடுத்தால் ரெடி!
கடாயில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, மாவில் புரட்டிய காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு நடுத்தர தீயில் பொரிக்கவும். வெளிப்புறம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறியதும் எடுத்துவிடுங்கள்.
மேலே சிறிது சாட் மசாலா அல்லது மிளகுத்தூள் தூவி, புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறினால் சுவை இன்னும் அதிகரிக்கும். மாலை நேர டீ அல்லது காபியுடன் இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.
