காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முதல்முறையாக கியூ ஆர் கோடுடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிக் கொண்ட பிறகு சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார்.
ஒரு நிலையான தலைமை இல்லாததால் கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சோனியா காந்தி தலைமையில் நடந்த காரியகமிட்டி கூட்டத்தில் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்காளர்கள் யார். யார் யாருக்கு வாக்களிக்க அதிகாரம் உள்ளது என்று சசிதரூர், மணீஷ் திவாரி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து அறிவிப்புகளையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இன்று(செப்டம்பர் 13)டெல்லி தலைமை அலுவலகத்தில் 9,100 வாக்காளர்கள் கொண்ட வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க அதிகாரம் படைத்த ஒவ்வொரு வாக்காளருக்கும் க்யூ ஆர் கோடு கொண்ட அடையாள அட்டை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அடையாள அட்டைகள் இன்று தயாராகி தேர்தல் பொறுப்பாளரான மதுசூதனன் கையெழுத்திட்டு நாளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.
மாநிலங்களில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுச் சென்று வாக்காளர்களிடம் அளிப்பார்கள் என்று தேர்தல் பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
