‘ரகசியக் காப்பு’ உறுதிமொழியை மீறுகிறாரா விஜய்? – டாக்டர் கிருஷ்ணசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

ஊழல் ஆதாரத்தோடு மூன்று துறைகளின் கோப்புகள் இருப்பதாக கூறும் முதல்வர் விஜய் அதன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தின்படி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும்போது இரண்டு முக்கிய உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஒன்று, நாட்டின் இறையாண்மையைக் காப்பது; மற்றொன்று, அரசு நிர்வாகம் சார்ந்த அதிமுக்கிய ரகசியங்களை வெளியில் கசியவிடாமல் காப்பது. ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள், தான் பதவிப் பிரமாணத்தின் போது எடுத்துக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை சட்டமன்றத்திலேயே மீறியிருக்கிறார்.

ADVERTISEMENT

19.08.2026 அன்று, சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், “ஒரு வாரத்திற்கு முன்பு, நிதியமைச்சர் 3 துறைகளை ஆராய்ந்து, அதன் கோப்புகள் எல்லாம் என்னுடைய மேசையில் இருக்கிறது என்று கூறினார்; அதை அவர் போகிறப் போக்கில் சொல்லவில்லை; அவை உண்மையில் என் மேசையில் தான் உள்ளன; அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன; அதை open பண்ண வச்சுராதீங்க; எதை எப்போ open பண்ணணுமோ, அது அப்போ open ஆகும்” என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது முதலமைச்சரின் தலையாய கடமை. அவ்வாறிருக்க, அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஊழல் கோப்புகள் தம்மிடம் இருப்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டு, அவற்றின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தனது மேசையிலேயே தேக்கி வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வி வலுத்துள்ளது.

ADVERTISEMENT

இத்தகைய கோப்புகளைப் பொதுவெளியில் பேசிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பதும், கோப்புகளை தமக்குள்ளேயே வைத்திருப்பதும் எதற்காக? திரைமறைவில் என்ன நிகழ்கின்றன என்ற சந்தேகங்கள் தற்போது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளன.

முன்கூட்டியே இதுபோன்ற விவகாரங்களைப் பொதுவெளியில் பேசுவதும், நடவடிக்கையை நிலுவையில் வைப்பதும் ஒரு தவறான முன்னுதாரணம் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்கள் உஷார் ஆவதற்கும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வழிவகுக்காதா? அதிகாரப்பூர்வ ரகசியக் காப்பு நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது ஆகாதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share