ஆசிரியர்களுக்கு ’டெட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்- அனைத்து கட்சிகளும் ஆதரவு!

Published On:

| By Mathi

Resolution in Assembly demanding exemption from TET exam for teachers

தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‘டெட்’ (TET) தேர்வில் இருந்து ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 25) தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த இந்த தனித் தீர்மானத்துக்கு பாமக, சிபிஐ, சிபிஎம், அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 25) பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டு வந்த தனித் தீர்மானம்:

ADVERTISEMENT

ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் தொழில் மட்டுமல்ல, அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தை செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும் பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாக கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூக பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் (NCTE) 23.8.2010-ஆம் நாளில் தேதியிட்ட அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வு (டெஸ்ட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித இடையூறும் இன்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ல் ஆசிரியர் தகுதி தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.9.2025-ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405/2025, 1385/2025 மற்றும் 1386/2025-ல் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேற்கண்ட உத்தரவினால் தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வினை பெற இயலும். மேலும் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.5.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.8.2028க்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத வலியுறுத்துவது, வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையை பாதிக்கும் செயலாகும்.

எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானம் முன்மொழியப்படுகின்றது:

தமிழ்நாடு பள்ளிகளில் 23.8.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்டகால பணி அனுபவம் மற்றும் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு ‘டெட்’ட்டில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு 23.8.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் தேவையான சட்டபூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (NCTE) வழியாக இது தொடர்பான தெளிவான மற்றும் உரிமிக்க அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்மாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணி பலன்கள் எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

பாமக கணேஷ்குமார்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. 2010-க்கு முன் நடைமுறையில் உள்ளதை பதவி உயர்வு, பென்சன் போன்றவற்றை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வரவேற்கிறேன். அதேவேளையில் கல்வித்துறை பொதுப்பட்டியலில் போனதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை. அதை மாநிலப் பட்டியலில் சேர்க்குமாறு இந்த தீர்மானத்தை ஆதரித்து அமைகிறேன்.

இ.கம்யூ தளி ராமச்சந்திரன்: கல்வி அமைச்சர் கொண்டுவந்திருக்கின்ற தனி தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆதரிக்கிறேன். தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் 2010-ல் ஒன்றிய அரசாங்கம் தகுதி தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு டெட்-ஐ கொண்டுவந்த பிறகு அவர்களுடைய பதவி உயர்வு, பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆகவே அந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. நேற்றுகூட சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தினேன். இன்றைக்கு அந்த ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையிலே இந்த தீர்மானத்தை நம்முடைய பள்ளி கல்வித்துறை கல்வித்துறை அமைச்சர் கொண்டுவந்திருக்கிறார். இந்த தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆதரித்து வரவேற்கிறேன்.

சிபிஎம் செல்லசுவாமி: இந்த தனி தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நான் ஏகமனதாக வரவேற்கிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் ஏற்கனவே இதுதான். எனவே சுமார் 15 முதல் 20 ஆண்டு காலம் வரை பணி செய்து இறுதியிலே பணி ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நேரத்திலே அவர்களுடைய வாழ்வாதார உரிமையை பாதிக்கின்ற இந்த செயலை ஏற்க முடியாது. எனவே இதிலிருந்து விலக்களிக்க வேண்டும். குறிப்பாக கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறி இந்த தீர்மானத்தை நான் ஆதரிக்கின்றேன்.

அதிமுக அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, டெட் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாய தகுதி என்று உச்சநீதிமன்றம் 1.9.2025 அன்று உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின் மீது பலர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் 29.5.2026 அன்று தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தின் விரிவான தீர்ப்பு நேற்று வெளிவந்துத்துள்ளது.

தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும், ஆசிரியர் அமைப்புகளும் தாக்கல் செய்த 65-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மாண்புமிகு தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு அவற்றை தள்ளுபடி செய்து முந்தைய உத்தரவை உறுதி செய்தது.

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாயம் ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயம் டெட் தேர்ச்சி பெற வேண்டும். பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு. பணிமூப்பு சீனியாரிட்டி எதுவாக இருந்தாலும், டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது.

சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31, 2028 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இனி மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று தெள்ள தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தேர்ச்சி பெற ஏதுவாக, மாநில அரசுகளும், தகுதி தேர்வு வாரியங்களும் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே டெட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. 2028-க்குள் தேர்ச்சி பெறாத பெற ஆசிரியர்கள் கட்டாயம் கட்டாயம் ஓய்வுபெற நேரிடலாம்.

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கும் டெட் கட்டாயமா என்ற கேள்வி, மேல்முறையீட்டிற்காக பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மத்திய அரசை இந்த உரிய அழுத்தம் மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் தந்து ஆசிரியர்களுடைய பணி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சரின் சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அமர்கிறேன்.

திமுக கொறடா எ.வ.வேலு: நீண்ட நெடிய காலமாக ஆசிரியர் பணி புரிவோருக்கு திடீரென டெட் (TET) தேர்வு எழுதுவது என்பது சாத்தியக்கூறு அல்ல. இன்றைய நிலையிலே அதற்குப் புதிய சிலபஸ்கள் எல்லாம் இருக்கின்றன.

அந்த ஆசிரியர்கள் படித்த காலங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னால், 25 ஆண்டுகளுக்கு முன்பு.. இன்று டெட் தேர்வைப் பொறுத்தவரை, அந்தச் சிலபஸைப் படித்து பாஸ் பண்ண வேண்டும் என்ற நிலைமை எல்லாம் இல்லை என்பதை அப்போது எங்களுடைய கழகத் தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த காரணத்தினால்தான், உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள் ஆசிரியர்களுக்காக வழக்குத் தொடுத்து, இந்தத் தேர்வு தேவையில்லை என்று நாங்கள் தான் அப்பொழுது வழக்குத் தொடுத்தோம் ஆசிரியர்களுக்காக.

அதிலே பல ஆசிரியர்களும் இணைத்துக் கொண்டார்கள். ஆனால், என்ன நடந்தது என்று கேட்டீர்கள் என்றால், சீராய்வு மனுவும் சரி, மெயின் வழக்கிலும் சரி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘கட்டாயம் டெட் தேர்ச்சி பெற்றுத்தான் ஆகவேண்டும்’ என்ற ஒரு தீர்ப்பினை வழங்கினார்கள்.

ஆனால், நாங்கள் அப்பொழுது சொன்னோம், மீண்டும் தேர்தலுக்குப் பின்னாலே இதே சட்டமன்றத்திலே தீர்மானம் போடுவதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசாங்கத்திலே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு புதிதாக ஒரு சட்டத்தை ஏற்ற வேண்டும். இப்ப இருக்கிற சூழ்நிலை என்னவென்றால், புதிய சட்டத்தை அங்கு இயற்றினால்தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும்.

இன்றைக்குத் தீர்மானத்தில் பார்த்தால் கடைசியாகச் சொல்கிறீர்கள்; ‘மேற்கண்ட நடவடிக்கை மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப் பலன்கள் எவ்விதத் தடையும் இன்றித் தொடர்வதை உறுதி செய்யுமாறு, ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது’ என்று குறிப்பிடுகிறீர்கள். ஒன்றிய அரசு நினைத்தால் தான் இதை நாம் செய்ய முடியும்.

ஆக, இப்படி ஒன்றிய அரசாங்கத்திலே இந்த அரசு வலியுறுத்தி, புதிய சட்டங்களை நிறைவேற்றுகிற பொழுது, ஆசிரியர்களுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தச் சட்டம் ஏற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை மட்டும் தெரிவித்துக்கொண்டு, இந்த ஆசிரியர் பணியைப் பொறுத்த அளவுக்கு, நாங்கள் முழுமையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் புதிய சட்டங்கள் வருவதற்கும், அவர்களுக்குச் சலுகை பெற்றுத் தருவதற்கும் முழுமையாக நாங்கள் ஒத்துழைப்போம்.

காங்கிரஸ் தாரகை கத்பர்ட்: நம்முடைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. அதைப்போன்று தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாகப் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணி பலன்கள் எந்தவித தடையும் இன்றி செய்வதற்காக எங்களுடைய காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களை நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக நாங்கள் வலியுறுத்துவோம் என்பதையும் நாங்கள் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share