குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக திமுகவினரிடையே கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஆதரவு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசுக்கு, சமூக நீதித்துறை அமைச்சர் பதவி அண்மையில் வழங்கப்பட்டது. இதனால் திமுக விசிகவினரிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
முன்னாள் அமைச்சரான குன்னம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.எஸ். சிவசங்கர். கடந்த சில நாட்களாக வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அந்த அடிப்படையில், இன்று ஆறாவது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி கூறினார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பெரம்பலூரைச் சேர்ந்த திமுகவினர் குன்னத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் வரதராஜன் தலைமையிலான ஒரு தரப்பினர், திமுகவினரின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மோதல் நீடித்த நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னம் காவல்துறையினர், இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு தரப்பு மோதல் காரணமாக, குன்னம் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும், குன்னத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.









