முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா.செழியன் இன்று (ஜூலை 10 )காலை 5 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவு தமிழ் திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியன், கல்லூரி திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று, தாரை தப்பட்டை, பரதேசி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதன் மூலம் திரை உலகில் நன்கு அறியப்பட்டவர்.
‘பரதேசி’ படத்துக்காக 2013-ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவு செய்து இயக்கிய டூலெட் (Tolet) படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்றார்.
நமது மின்னம்பலம் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருமான காமராஜ் இயக்கிய ‘கலைஞர் எல்லோர்க்கும் எல்லாமுமாய்’ ஆவணப்படத்தையும் இயக்குநர் செழியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் ‘உலக சினிமா’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை பெற்ற செழியன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரை உலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
