மாமியார் வீட்டில் மாட்டிக்கொண்ட மருமகன்!
மலையாளத் திரையுலகில் பிஸியான குணசித்திர நடிகராக, வித்தியாசமான கதைகளில் மிளிர்கிற நாயகனாக, சீரான வளர்ச்சியைத் திரையுலகில் பெற்று வருபவராக விளங்குபவர் சௌபின் ஷாஹிர். மிகச்சாதாரணமான ஒரு குடும்பஸ்தனாக, அப்பாவியாகக் காட்டுகிற பாத்திரங்களில் அவரைக் கண்டால் எப்படியிருக்கும்? இந்த கேள்விக்கான பதிலாக அமைந்தது ‘மச்சாண்ட மாலாஹ’ பட ட்ரெய்லர். machante malakha movie review
இதில் அவரது ஜோடியாக நமீதா ப்ரமோத் நடித்துள்ளார். தியான் சீனிவாசன், சாந்தி கிருஷ்ணா, மனோஜ் கே.யு., வினீத் தட்டில் டேவிட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜெக்சன் ஆண்டனியின் கதைக்கு திரைக்கதை வசனத்தை அமைத்துள்ளார் அஜீஷ் பி.தாமஸ். போபன் சாமுவேல் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஊஸேபச்சன் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்சனைகளை மையமாகக் கொண்ட குடும்பச்சித்திரமாக அமையும் என்ற உறுதியைத் தந்தது ‘மச்சாண்ட மாலாஹ’ ட்ரெய்லர்.
படம் அதனை மெய்ப்பிக்கிறதா?
’வீட்டோட மாப்பிள்ளை’
முப்பது வயதைக் கடந்தும் தகுந்த வரன் அமையாமல் வாடுகிற ஒரு ஆண். அவரது அப்பாவித்தனத்தைக் கண்டு ஒதுக்கித் தள்ளும் பெண் வீட்டார்.
கேரள அரசுப் போக்குவரத்துக்கழகப் பேருந்தொன்றில் நடத்துனராக இருந்தபோதும், இளம்பெண்கள் அவரைக் கணவராக ஏற்கத் தயாராக இல்லை. ஆனால், அவரை ஒரு பெண் விரும்புகிறார். அவரும் ஒரு நடத்துனர் தான்.
ஆனால், அப்பெண்ணின் குடும்பத்தினர் முடிவு வேறாக இருக்கிறது. சில நாட்களாக அப்பெண் பணிக்கு வராமல் போகிறார். அதனைக் கண்டு அந்த ஆண் தவிக்கிறார்.
இரண்டொரு நாட்கள் கழித்து, ‘திடீர் திருமணம்’ முடிந்து திரும்புகிறார் அந்த பெண் நடத்துனர். பிறகு, அந்த டிப்போவில் இருக்கும் சக பணியாளர்களை, அந்த பேருந்து நிலையத்தில் தன்னோடு பழகியவர்களை எதிர்கொள்ள முடியாமல் வேறு இடத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார் அந்த ஆண்.
வாழ்வின் மீதான பற்றுதலைத் தொலைத்துவிட்டு, தன் வேலைகளில் மூழ்குகிறார். ஆனால் ஒருநாள் பேருந்தில் ஏறும் பெண்ணொருத்தி அவரது இயல்பைக் குலைக்கிறார். சண்டையிடுகிறார். அவரைப் பற்றி மேலதிகாரியிடம் புகார் செய்கிறார்.
அப்பெண்ணின் செய்கை அந்த ஆணை எரிச்சல்படுத்துகிறது. ஆனால், அவரை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள் தற்செயலாக அமைகின்றன.
ஒருகட்டத்தில் தனக்கு அப்பெண் மீது காதல் உண்டானதை உணர்கிறார் அந்த ஆண். அவரைப் பெண் கேட்கலாம் என்று முடிவெடுக்கிறார்.
ஆனால், அந்த ஆணின் மைத்துனர் ‘அவசரம் வேண்டாம்’ என்கிறார். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. நண்பருடன் பெண் கேட்டுச் செல்கிறார்.
அந்தப் பெண்ணின் வீட்டில், அவரது தாயார் ‘என்னோட மகளைக் கட்டிக்கணும்னா சில கண்டிஷன்ஸ் இருக்கு’ என்கிறார். ‘வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கணும்’ என்பது அவற்றில் முதன்மையானது. அதற்குச் சம்மதம் தெரிவிக்கிறார் அந்த ஆண்.
அதனைக் கேட்டதுமே, அந்த ஆணின் சகோதரியும் மைத்துனரும் அதிர்கின்றனர்.

குறிப்பாக, அந்த மைத்துனர் ‘மச்சான் ஒரு அப்பாவி’ என்று எண்ணுகிறார். அப்படிப்பட்ட மைத்துனர், ‘என் மச்சானோட தேவதை இவ’ என்று அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணை ஏற்றுக்கொண்டாரா என்று சொல்கிறது ‘மச்சான்ட மாலாஹ’ படத்தின் மீதி.
‘மச்சாண்ட மாலாஹ’ எனும் டைட்டிலுக்கு ‘மச்சானின் தேவதை’ என்றே அர்த்தம்.
’பழைய பட’ வாசனை!
நாயகன் சௌபின் ஷாஹிர் ஒரு வழக்கமான ஹீரோ இல்லை. அதனால், தனது தோற்றத்திற்கேற்ற கதைகளாகத் தேர்ந்தெடுத்து, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பிரதிபலிப்பதில் வல்லவராகத் திகழ்கிறார். அதிலொன்றாக இடம்பெற்றிருக்க வேண்டிய இப்படம், குழப்பமான திரைக்கதையால் தட்டிப் போயிருக்கிறது. மற்றபடி, அவரது பங்களிப்பில் எந்தக் குறையும் தென்படவில்லை.
நாயகி நமீதா ப்ரமோத் ‘பிஜி’ எனும் பெண்ணாக, சட்டென்று நம் மனதோடு ஒட்டிக் கொள்கிறார். பிடிவாத குணத்தோடு இருப்பதாகச் சொன்னாலும், அடிப்படையில் அப்பாத்திரம் நல்ல தன்மை கொண்டதா என்பது திரைக்கதையில் விளக்கப்படவில்லை. அதனால், அவருக்கான பாராட்டுகளையும் கபளீகரம் செய்திருக்கிறது திரைக்கதை.
இப்படத்தில் நாயகனின் மாமியாராக வரும் சாந்தி கிருஷ்ணா, நம்மை எரிச்சலூட்டும் அளவுக்கு வந்து போயிருக்கிறார். ’இயக்குனர்கள் விசு, வி.சேகர் படங்களில் இச்சித்தரிப்பைக் கண்டிருக்கிறோம் என்பதால் அது பிரமிப்பூட்டுவதாக இல்லை.
ஒருவேளை சாந்தி கிருஷ்ணா அப்படியொரு பாத்திரத்தில் தோன்றுவது வித்தியாசத்தைத் தரும் என்று இயக்குனர் போபன் சாமுவேல் நம்பியிருக்கலாம்.
சாந்தியின் கணவராக நடித்துள்ள மனோஜ், ஆங்காங்கே ‘காமெடி ஒன்லைனர்’களை அள்ளிவிட்டு சிரிக்க வைக்கிறார். ‘இது இப்படித்தான் முடியும்னு எனக்குத் தெரியும்’ என்று அவர் சாதாரணமாகப் பேசும் வசனம் கூடச் சிரிப்பூட்டுகிறது. ஆனால், திரைக்கதையில் அது தொடர்ந்து வருமாறு கவனிக்கத் தவறியிருக்கிறது படக்குழு.
சாந்தி – மனோஜ் இருவரது நடிப்பும் நம்மை ஈர்ப்பதாக உள்ளது.
இவர்களோடு நாயகனின் மைத்துனராக வரும் திலேஷ் போத்தன், அவரது மனைவியாக வருபவர் இருவரும் நம்மை ஈர்க்கின்றனர்.
வழக்கறிஞராக வரும் தியான் சீனிவாசன், ‘காமெடி செய்கிறேன் பேர்வழி’ என்று கடுப்பேற்றுகிறார்.
மேலும் ஆல்பி பஞ்சிகரன், டேவிட் வினீத் தட்டில் உள்ளிட்ட சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இப்படத்தில் இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் விவேக் மேனன், படத்தொகுப்பாளர் ரதீஷ் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சஹஸ் பாலா, பின்னணி இசை தந்துள்ள ஊஸேபச்சன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, ஒரு வழமையான மலையாள ‘ட்ராமா’ படமொன்றை நமக்களித்திருக்கிறது.
ஊஸேபச்சனின் பாடல்கள் எரிச்சலூட்டவில்லை என்றபோதும், அவை உடனடியாக நம் மனதோடு ஒட்டிக்கொள்ளும் ரகத்தில் இல்லை.
ஜெக்சன் ஆண்டனியின் கதையானது, ‘இன்றும் இப்படிச் சில பெண்கள் சமூகத்தில் இருக்கின்றனர்’ என்று சொல்ல முயன்றிருக்கிறது. ஆதிக்க மனப்பான்மை கொண்ட அப்பெண்கள், வீட்டில் இருக்கும் ஆண்களை அடிமைத்தனத்துடன் நடத்துகின்றனர் என்று சொல்கிறது.
ஆனால், அதனைத் தற்காலச் சூழலுக்கு ஏற்றபடி, இப்போதைய மலையாளப் படங்களின் திரைக்கதையாக்கத்துடன் பொருந்துகிற வகையில் காட்சிகளை அமைக்கத் தவறியிருக்கிறார் திரைக்கதையாசிரியர் அஜீஷ் பி.தாமஸ்.

அதுவே இப்படத்தில் இருக்கும் ரசிக்கத்தக்க காட்சிகளையும் ‘விழலுக்கு இறைத்த நீராக்கி’ இருக்கிறது.
‘மாமியார் வீட்டில் மாட்டிக்கொண்ட மருமகன்’ என்பதை வைத்து அவல நகைச்சுவையில் அமர்க்களப்படுத்தியிருக்கலாம். அது நிகழாமல் போனதில் வருத்தம் அதிகம்.
இது போன்ற கதைகள் தமிழில் ஏற்கனவே வந்திருக்கின்றன. ‘யதார்த்தம்’ தென்பட வேண்டிய அக்கதைகள் ‘சினிமாத்தனத்தை’ பூசிக்கொண்டு நம்மை மிரள வைத்திருக்கின்றன.
அதே போன்றதொரு கதையை ‘யதார்த்தம்’ என்று உணரும் வகையிலான ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’ உடன் தர முயற்சித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் போபன் சாமுவேல். ஆனால், கதையின் மைய இழை எங்கோ அறுந்துபோயிருப்பதை அவர் உணர்ந்தும் எதுவும் செய்ய முடியவில்லையா அல்லது அவரது கவனத்தை விட்டு அது நழுவியதா என்று தெரியவில்லை.
கதாபாத்திர வார்ப்பில் இன்னும் கூர்மையை வெளிப்படுத்தி, கதையை வலுப்படுத்துகிற காட்சிகளைப் பொருத்தி, தேவையற்ற விவரங்களைத் தவிர்த்திருந்தால் ‘கவனிப்பைப் பெறுகிற குடும்பச் சித்திரமாக’ இந்த ‘மச்சான்ட மாலாஹ’ மலர்ந்திருக்கும். அதனைச் செய்யாத காரணத்தால், இப்போது ‘பழைய படம் மாதிரி இருக்கு’ என்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளது. machante malakha movie review