இந்தப் பெண் என்ன சொல்ல வருகிறார்? yamakaathagi movie review
ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்க வேண்டும்? மொத்தப் படத்தில் இருந்து முக்கியமான ஷாட்களை கத்தரித்து ஒன்றாகக் கோர்த்திருக்க வேண்டும். கதையின் மையத்தை, கதாபாத்திரங்களின் அறிமுகத்தைச் சொல்வதாக இருக்க வேண்டும். ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைவதோடு, படத்தில் இருக்கும் சிறப்பம்சங்களை திரையரங்கில் உணரும் வகையில் ‘பூடகமானதாக’ அமையப் பெற வேண்டும். மேற்கத்திய திரைப்படங்களைப் போல, ‘இப்படித்தான் இந்தப் படம் இருக்கும்’ என்று ஒரு ஐடியாவை பெறுகிற வகையில் ‘விலாவாரியாக’ வடிவமைக்கப்பட வேண்டும். இது போன்று சொல்லிக்கொண்டே போகலாம். yamakaathagi movie review
அனைத்தையும் தாண்டி, ‘இந்த படத்தைப் பார்க்கலாம் போலிருக்கே’ என்ற எண்ணத்தைத் தூண்டுவதுதான் ஒரு ட்ரெய்லரின் அடிப்படையாக இருக்க முடியும். அப்படியொரு தூண்டுதலைத் தந்தது ‘எமகாதகி’ பட ட்ரெய்லர்.
பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில், ஜெசின் ஜார்ஜ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேந்திர பிரசாத், ரூபா கொடுவாயூர், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு பெண்ணின் பிணம் வீட்டை விட்டுச் செல்லாமல் ‘முரண்டு’ (?!) பிடிப்பதாக உணர்த்தியது. அதுவே, ‘வித்தியாசமான ஹாரர் படமாக இருக்குமோ’ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
வெள்ளித்திரையில் அந்த எதிர்பார்ப்புக்கேற்ற உள்ளடக்கத்தைப் பரிசளிக்கிறதா இந்த ‘எமகாதகி’?

இறந்த பின்னும் துயரம்! yamakaathagi movie review
தஞ்சாவூர் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமம். அங்குள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடத்த முடிவாகிறது. ஊர் தலைவர் (ராஜு ராஜப்பன்) அதற்கான தேதியை அறிவிக்கிறார்.
அதனைக் கேட்டதும், ஊர் தலைவரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்சியடைகின்றனர். காரணம், கோயில் நகையை அடகு வைத்து, ஒரு வர்த்தகத்தில் அவர்கள் ஈடுபட முயன்றதே. இப்போது, அந்த நகையைக் கோயிலில் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர்.
இன்னொரு புறம், வீடு திரும்பும் ஊர் தலைவர் தனது மனைவியிடம் ஆத்திரப்படுகிறார். ‘என்ன நடந்தது’ என்று கேட்கும் மகள் லீலாவின் (ரூபா கொடுவாயூர்) கன்னத்தில் அறைகிறார்.
ஆஸ்துமா நோயினால் அவதிப்படுகிற பெண் லீலா. அந்த ஒரு காரணத்தைத் தாண்டி, அனைவரையும் அன்புடன் அரவணைக்க விரும்புகிற அவரது சுபாவமும் சுற்றியுள்ளவர்கள் அன்பைப் பொழியக் காரணமாக இருக்கிறது. அதனால் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் இதர மனிதர்களிடமும் ‘செல்லப்பிள்ளை’யாக இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு பெண், தனது தந்தையின் திடீர் ஆத்திரத்தைக் கண்டதும் திகைப்படைகிறார்.
லீலாவின் வீட்டில் ஒரு அறை மட்டும் எப்போதும் பூட்டியே கிடக்கும். அவரது பாட்டி நாள் முழுவதும் அந்த அறையை வெறித்துப் பார்த்தவாறே இருப்பார்.
‘அந்த அறையில் இருந்து ஏதோ நாத்தம் வருது’ என்று அன்று காலையில் லீலா சொல்கிறார். அதனைத் தொடர்ந்து, பூட்டு உடைக்கப்பட்டு அந்த அறையின் கதவு திறக்கப்பட்டிருக்கிறது. அந்த நொடி முதல் ‘என்ன நடக்கப்போகுதோ’ என்ற பதைபதைப்பிலேயே இருக்கிறார் அந்த மூதாட்டி. அதேநேரத்தில், அந்த அறை ஏன் பூட்டிக் கிடந்தது என்பதற்கான காரணத்தைச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில், அன்று நள்ளிரவில் தூங்கச் செல்கிறார் லீலாவின் தாயார் (கீதா கைலாசம்). அறைக்குள் நுழைந்ததும் ஸ்விட்சை ஆன் செய்பவர், தூக்கிலிட்டுத் தொங்கிய நிலையில் இருக்கும் லீலாவைக் கண்டதும் அலறித் துடிக்கிறார்.
அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து பார்க்கின்றனர். மருத்துவர் உடனடியாக வரவழைக்கப்படுகிறார். அவர் சோதித்துப் பார்த்தபின்னர், லீலா மரணமடைந்ததாக உறுதிப்படுத்துகிறார்.
அடுத்த நாள் காலையில் அந்த ஊரே லீலா வீட்டின் முன்னர் திரண்டிருக்கிறது. எல்லா சடங்குகளும் முடிந்து மாலையில் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதென்று முடிவாகிறது.
ஆனால், லீலாவின் பிணத்தை அந்த கிராமத்தினரால் தூக்க முடிவதில்லை. இம்மியளவு கூட அசைக்க முடிவதில்லை.
அதனை அறிந்ததும் ஊரே பதற்றமாகிறது. ‘திருவிழா வச்சிருக்கிற நேரத்துல ஏதாவது பெரிய குத்தம் வந்திரக் கூடாதே’ என்று பதைபதைக்கிறது.
அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘எமகாதகி’யின் மீதி.
அப்படியென்ன ‘நிறைவேறாத ஆசை’, துயரம் அல்லது மர்மம் பிணமான பின்னும் லீலாவின் மனதில் ஒளிந்திருக்கிறது? இந்தப் பெண் மனம் என்ன சொல்ல முயற்சிக்கிறது? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் திரைக்கதை நகர்வதே இப்படத்தின் யுஎஸ்பி.
அதேநேரத்தில், ‘ஏன் இந்த விபரீதம்’ என்று கேள்வியெழுப்பி புலம்புகிற ஊர் மக்கள், அதற்கான பதிலை நாலாபுறமும் தேடியலைவதாகக் காட்டாதது இப்படத்தின் பலவீனம்.

சிறப்பான ஆக்கம்! yamakaathagi movie review
’எமகாதகி’யில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் அறிமுகக் கலைஞர்கள் தான்.
தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்துள்ள ரூபா கொடுவாயூர் தமிழில் நடிக்கும் முதல் படமிது. ஆனால், அவரது நடிப்பில் அதற்கான அறிகுறி துளி கூடத் தெரியாதது சிறப்பு. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் பிணமாகத்தான் வருகிறார். ஆனால், ‘எந்தப் பாவனையும் அவரிடத்தில் வெளிப்படவில்லையே’ என்று குறை சொல்லமுடியாத வண்ணம் பெரும்பாலான காட்சிகளில் அவர் ‘ஒரேமாதிரியாக’ இருப்பது ஆச்சர்யமான விஷயம்.
சில யூடியூப் சீரிஸ்களில் பார்த்த நரேந்திர பிரசாத் இதில் நாயகனாக வருகிறார். திரையில் வரும் தனது பாத்திரத்தின் தன்மைக்கேற்க ‘அளவாக’ நடித்திருக்கிறார்.
நாயகியின் பெற்றோராக வரும் ராஜு ராஜப்பன் – கீதா கைலாசம் இருவருமே உணர்ச்சிப்பிழம்பாகத் திரையில் தெரிகின்றனர். அதிலும் கீதாவின் நடிப்பு இப்படத்தின் மைய இழையான ‘துக்கத்தை’த் திரையில் தாங்கி நிற்கிறது.
நாயகியின் சகோதரராக வருபவர், முக்கியமான காட்சிகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதில் சற்றே சுணங்கியிருக்கிறார். அவருடன் நண்பர்களாக வருபவர்கள், திரையில் இருக்கும் மனிதர்களில் ஒருவராகத் தோற்றம் தந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
இவர்கள் தவிர்த்து நாயகியின் உறவினர்கள், வேறு தெருக்களில் வசிப்பவர்கள் என்று சுமார் இருநூறு பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் வசனம் பேசி நடிக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு. அழகியல் அம்சங்களைத் தாண்டி, கதையில் இருக்கும் அமானுஷ்யத்தைக் காட்சியாக்கத்தில் கொண்டுவர மெனக்கெட்டிருப்பது அருமை. காட்சிக்கோணங்கள், கேமிரா நகர்வு, ஒளி அமைப்பு என்று ஒவ்வொரு பிரேமையும் கவனமாகச் செதுக்கியிருக்கிறார்.
ஸ்ரீஜித் சாரங் இப்படத்தின் படத்தொகுப்பாளர். காட்சியாக்கத்திற்கு ஏற்ற ‘டிஐ’ மூலமாக, அதன் உள்ளடக்கத்தில் செறிவைக் கூட்டியிருக்கிறார். கூடவே, ஒரு காட்சி முடியும் இடம் மற்றும் தொடங்குமிடத்தைக் கூர்மையான ‘கத்தரிப்பு’ மூலம் திரையில் கதை சொல்லலைக் கனமாக உணரச் செய்திருப்பது அருமை.
முக்கால்வாசி காட்சிகள் துக்க வீட்டைச் சுற்றி நிகழ்வதாகக் காட்டப்படுவதால், அதற்கான சடங்குகளைத் திரையில் காட்டுவதில் துல்லியம் கூட்டியிருக்கிறது ஜோசப் பாபினின் கலை வடிவமைப்பு. வீடுகளினுள் இருக்கும் பொருட்களைக் காட்டியிருப்பதில் அவரது குழுவினரின் ஆய்வும் உழைப்பும் பாராட்டுக்குரியது.
இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜ், கதையில் நிறைந்திருக்கும் அமானுஷ்யத்தை உணர்த்தும்விதமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். சில இடங்களில் மௌனத்திற்கு இடம் விட்டிருக்கிறார்.
திரைக்கதையில் ‘ஹாரர்’ என்கிற அம்சம் பெரிதாக இல்லை. அதற்குப் பதிலாக, புதிரை விடுவிப்பதற்கான வேட்கையை உணர்த்தும் வண்ணம் ‘மிஸ்டரி’ எனும் அம்சமே அதிகமிருக்கிறது. ஆனால், அதற்கேற்ற இசை அவரிடத்தில் வெளிப்படவில்லை. அதேநேரத்தில், அதனைக் குறை என்றும் சொல்லிவிட முடியாது. அவரது பாணி இது என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். ராஜேந்திரன் இதற்கான வசனங்களை எழுதியிருக்கிறார்.
‘மழையும் நீயுமா ஒண்ணா நடந்து வந்தீங்க’ என்பது போன்ற இயல்புமிகு வசனங்கள் இப்படத்தின் பெரும்பலம்.
மையப் பாத்திரங்கள் முதல் ஓரிரு ஷாட்களில் வந்து போனவர்கள் வரை அனைவருமே ‘வட்டார வழக்கு’ பேசியிருக்கின்றனர். அது, கதை நிகழும் களத்தை விட்டு நம் மனதை விலக்குவதில்லை.
ஒரு இயக்குனராக, ஒரு வித்தியாசமான கதையை, களத்தை நமக்கு காட்டியிருக்கிறார் பெப்பின் ஜார்ஜ். ’ஹாரர்’ கதையாக மட்டுமல்லாமல், வாழ்ந்து மறைந்து வணங்கப்படுகிற ஒரு நாட்டார் பெண் தெய்வத்தின் வாழ்வைச் சொல்கிற பாங்கைத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பிட்ட வட்டாரங்களில் இது போன்ற பேய்க்கதைகளை, பெண் தெய்வங்களாக மாறியவர்களின் வாழ்வை நாம் பாமர மக்களின் பேச்சுவழக்கின் வழியே அறிய முடியும். அப்படியொரு விஷயத்தை விரிவுபடுத்தி கதை அமைத்திருப்பது அருமையான உத்தி.
‘பொணம் அசையுது’ என்று முதன்முறையாகச் சொல்லப்படுகிற கணத்தில், பார்வையாளர்கள் மனதில் ‘பீதியை’ அதிகப்படுத்த இயக்குனர் முயலவில்லை. இந்தக் கதையின் யுஎஸ்பி அதுவல்ல என்று அவர் முடிவு செய்திருக்கலாம். தவறில்லை.
’மரணித்தபிறகும் ஒரு பெண் மனதில் என்ன இருக்கிறது என்று எவருக்கும் தெரிவதில்லை’ என்பதனை ‘வீட்டை விட்டு நகர மறுக்கும் பிணம்’ என்ற கருத்தாக்கத்தின் வழியே சொல்ல முயன்றிருக்கிறார். அது, இக்கதையில் ஒளிந்திருக்கும் பல புதிர்களை விடுவிக்கிறது.
கிளைமேக்ஸ் திருப்பம், இந்தக் கதையில் வரும் காதலை, அதன் பின்னே இருக்கும் சாதீய வன்மத்தை நமக்குச் சொல்கிறது. இதனைக் குறிப்பிட்டதும், ‘ஓ இந்தக் கதை இப்படித்தான் போகுதா’ என்று சிலருக்குத் தோன்றலாம். அந்த கணிப்பையும் மீறியதாக இப்படம் அமைந்திருப்பதே இதன் வெற்றி.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, திரைக்கதையாக்கத்திலும் காட்சியாக்கத்திலும் ‘அமானுஷ்யத்தை’ அடிக்கோடிடுகிற வண்ணம் சில முயற்சிகளைச் செய்திருக்கலாம். அது, பின்பாதி திரைக்கதையில் இருக்கிற வெறுமையை, அது உண்டாக்குகிற அயர்ச்சியை மறைத்திருக்கும்.
ஆனாலும், ‘இந்தக் கதைக்கு இப்படியான ஆக்கமே சரி’ என்று ஒரு உறுதியோடு ‘எமகாதகி’யைத் தந்திருக்கிறது பெப்பின் ஜார்ஜ் & டீம்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இப்படத்தை வெளியிட முயன்ற காரணத்திற்காக, அதில் மும்முரம் காட்டியதற்காக, படக்குழுவுக்குத் தனியாக ‘பாராட்டுகளை’ தெரிவித்தாக வேண்டும்..!
உதயசங்கரன் பாடகலிங்கம்