கூரன்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Kooran Tamil Movie Review

வித்தியாசமான கதைதான்.. ஆனா..?

ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளில் நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. முழுக்க அனிமேஷன் வகைமையில் அமைந்தவை, பகுதி அளவில் அந்த நுட்பத்தைப் பயன்படுத்தியவை தாண்டி சாதாரணமாக நடிப்புக்கலைஞர்களைப் போலவே குறிப்பிட்ட விலங்குகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் படங்களும் அவற்றில் அடக்கம். வெகுகாலமாக இது தொடர்ந்து வருகிறது. இப்படங்களுக்கு என்று தனிப்பட்ட பார்வையாளர்கள் இருக்கின்றனர். அப்படங்களில் குறிப்பிட்ட அளவுக்கு விஎஃப்எக்ஸ் பயன்படுத்துகிற வழக்கமும் தற்போது பெருகியிருக்கிறது. Kooran Tamil Movie Review

தமிழில் அதே பாணியில் ‘கூரன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. நிதின் வேமுபதி இதனை இயக்கியிருக்கிறார். சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரா, பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா, இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழில் நாயை மையப்படுத்தி ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஓ மை டாக்’, ‘நாய் சேகர்’ போன்ற படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறுகிறதா ‘கூரன்’ அல்லது அதைத் தாண்டி புதிய விஷயங்களைச் சொல்லி மேலும் வசீகரிக்கிறதா?

ஒரு தாயின் வலி! Kooran Tamil Movie Review

நெடுஞ்சாலையில் ஒரு தாய் தனது குழந்தையோடு செல்கிறார். அந்த குழந்தையின் மீது மோதி ஒரு வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது. அதில் அந்த குழந்தை இறந்து போகிறது. அந்த விபத்தை நிகழ்த்திவிட்டுப் பொறுப்பில்லாமல் சென்றுவிடும் அந்த வாகன ஓட்டியை போலீஸில் பிடித்துக் கொடுத்து, அவருக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டுமென்று நினைக்கிறார் அந்தத் தாய். அதனைச் செய்யக் காவல் நிலையத்திற்கும் செல்கிறார். ஆனால், அவரது கூக்குரலை அங்கிருந்தவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. அது ஏன்?

மேற்சொன்ன காட்சியில் இருந்து சூடு பிடிக்கிறது ‘கூரன்’ திரைக்கதை.

ஏனென்றால், ‘அந்த தாய் ஒரு மனிதப் பெண் அல்ல. ஒரு நாய்’ என்று சொல்கிறது ‘கூரன்’ திரைக்கதை. Kooran Tamil Movie Review

‘நாய் என்றாலும் தாய் தாய் தானே. அதன் வலி நிஜம்தானே’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், மேற்கொண்டு ‘கூரன்’ படத்தை நீங்கள் பார்க்கலாம்.

அந்த நாய்க்குக் காவல் நிலையத்தில் உதவ யாருமே தயாராக இல்லை. அந்த நிலையில், தர்மராஜ் (எஸ்.ஏ.சந்திரசேகரன்) எனும் வழக்கறிஞரை அது நாடுகிறது. முதலில் அதனைச் சரிவரக் கவனிக்காதவர், அதன்பின் அதன் துன்பம் என்னவென்று அறிய முயல்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, ஒரு கல்லறைக்கு அருகே மண் தோண்டி மூடப்பட்ட இடத்தில் குட்டி நாயின் சடலம் கிடைக்கிறது. அதற்கும் முன்னரே சாலையில் விபத்து நடந்த தடங்களை அவர் பார்த்திருக்கிறார். அந்த வகையில், அவருக்கு நாயின் தாய்மை மனம் படும் பாடு என்னவென்று புரிகிறது. Kooran Tamil Movie Review

அந்த நாயின் துன்பம் என்னவென்று உணர்ந்தபிறகு, அதன் சார்பாக வாதாட முயல்கிறார். அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘கூரன்’ படத்தின் மீதி.

சிறப்பான முயற்சி! Kooran Tamil Movie Review

‘கூரன்’ படத்தின் மையப்பாத்திரமாக ஒரு நாய் விளங்குகிறது. பிஸ்கட்களை ஆங்காங்கே தூவி, அதனை நன்கு வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. Kooran Tamil Movie Review

இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாலாஜி சக்திவேல் இருவருமே எதிரும்புதிருமான வழக்கறிஞர்களாக வருகின்றனர். அவர்களது நடிப்பு கடைக்கோடி ரசிகரையும் ஈர்ப்பதாக உள்ளது. அதேநேரத்தில், ‘கொஞ்சம் மெச்சூர்டான’ படம், திரைக்கதை, உள்ளடக்கத்தை எதிர்பார்ப்பவர்களை இப்படம் நிறையவே சோதனைக்கு உட்படுத்தும்.

இந்திரஜா, சத்யன், ஜார்ஜ் மரியான், சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் உண்டு. அவர்களில் ஜார்ஜ் வரும் காட்சி சட்டென்று நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

ஒய்.ஜி. மகேந்திரா வரும் காட்சிகள் அப்படியே ‘தி வெட்னஸ்டே’ படத்தில் வரும் அனுபம் கெர் பாத்திரத்தைப் பிரதியெடுத்தாற் போலிருக்கிறது. அது போதாதென்று, ‘உங்க கேரியர்ல நீங்க மறக்க முடியாது கேஸ் எது சார்’ என்று எதிரில் இருக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்பதாக ஒரு வசனம் வருகிறது. அதனைச் சகிக்க நிறையப் பொறுமை வேண்டும்.

இந்திரஜாவை ஒரு நபர் ‘எந்தக் கடையில நீ அரிசி வாங்குற’ எனும் டைப்பில் ஒருவர் கிண்டலடிக்க, அவரை அடித்து உதைத்துக் காவல் நிலையம் வரை சென்று விடுகிறது விஷயம். ஆனால், எஸ்.ஏ.சி அவரை ‘குண்டம்மா’ என்றே வார்த்தைக்கு வார்த்தை விளிக்கிறார். அது அவரது மனதையோ, மானத்தையோ புண்படுத்தாதா? தெரியவில்லை. எஸ்.ஏ.சியும் சரி; இயக்குனர் நிதின் வேமுபதியும் சரி; அதனைப் புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டிருக்கின்றனர். Kooran Tamil Movie Review

கவிதா பாரதி சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாகச் சிரிக்க வைக்கவில்லை. மாறாக, நம்மை எரிச்சல்படுத்துகிற வகையில் உள்ளன. இயக்குனர் நிதின் வேமுபதி அவரது மகனாக நடித்திருக்கிறார். நிதின் வசன உச்சரிப்பில் இருக்கும் தெலுங்கு வாடை, அந்த பாத்திரம் உண்டாக்கியிருக்க வேண்டிய தாக்கத்தைக் கொலை செய்துவிட்டிருக்கிறது.

சித்தார்த் விபின் அமைத்துள்ள பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசை வெளிப்படுத்தும் நகைச்சுவை சில காட்சிகளைக் கரை சேர்க்கிறது. எமோஷனலான இடங்களில் அது போதுமான அளவுக்கு இல்லை. என்ன, மௌனத்தைத் தந்திருக்கும் இடங்கள் சரியாகப் பொருந்தி நிற்கின்றன. அது ஆறுதல் தரும் விஷயம்.

மார்ட்டின் தன்ராஜின் ஒளிப்பதிவில், சில காட்சிகளில் பின்னணி ‘ப்ளீச்’ அடிக்கிறது. டிஐயில் அது சரிப்படுத்தப்பட்டிருந்தாலும், படத்தின் பட்ஜெட் குறைவை அது காட்டுகிறது.

பி.லெனின் – மாருதியின் படத்தொகுப்பானது கதையை உள்வாங்குவதில் இருக்கிற தடைகளை அகற்றியிருக்கிறது. Kooran Tamil Movie Review

இயக்குனர் நிதின் வேமுபதி இப்படத்தின் கதையை ஆக்கியிருக்கிறார். உண்மையிலேயே இது வித்தியாசமான கதை தான்.

விபத்தில் தான் அடைந்த வேதனைக்குப் பதிலாக நீதி வேண்டும் என்கிற அந்த நாயின் போராட்டம் ‘கூரன்’ படத்தின் முதல் சிறப்பம்சம். Kooran Tamil Movie Review

அந்த விபத்தை ஏற்படுத்தியவர் யார் என்று அறிவது சினிமாத்தனமாக இருக்கிறது. அதன்பிறகும் கூட, ஒரு நாய் ஏன் காவல்நிலையத்தை நாடி வர வேண்டுமென்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலாக, இதன் இடைவேளைக் காட்சியை அமைத்திருக்கிறார் இயக்குனர். அது, உண்மையிலேயே ‘ஆவ்சம்’ ரகம்.

கிளைமேக்ஸில் வரும் நீதிமன்றக் காட்சியும் கூட, நம் மனதைத் தொடக்கூடியது தான். இந்த உலகில் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இழப்புகள் உண்டு என்று சொல்வதும், அதனை நியாயப்படுத்தும்விதமாகக் காட்சிகளை அமைத்ததும் பாராட்டுக்குரியது.

ஆனால், முன்பாதியில் வரும் காட்சிகளில் பழமையின் நெடி அதிகம். பின்பாதியில் வரும் ‘பிளாஷ்பேக்’ ஆனது ‘வேறு புட்டேஜ் இல்லையே, நாங்க என்ன பண்ண’ என்று கேட்பதாக இருக்கிறது.

திரைக்கதையின் தொடக்கத்தில் வரும் தாய், நாய் ஒப்பீடு செம. அதனைக் காட்சியாகச் சொன்ன விதம், கதைக்குள் நம்மை இழுத்துக் கொள்கிறது. ஆனால், மீதமுள்ள காட்சிகள் அந்த தரத்தில் இல்லை.

இந்த வழக்கைத் தான் மறக்க முடியாமலிருப்பது ஏன் என்ற கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லிவிடுகிறார் நீதிபதி.

வழக்கறிஞராக வரும் அந்த நாய்க்கும் தர்மராஜுக்குமான பந்தத்தைக் காட்டியதில் ‘யதார்த்தம்’ சிறிதுமில்லை.

நாயின் உணர்ச்சி வெளிப்பாட்டை எப்படி மனிதர்கள் புரிந்துகொள்வது என்ற கேள்விக்கு, நேராக ஒரு அறிவியல் நுட்பத்தைக் காட்டுகிறது திரைக்கதை. அது குறித்த பார்வையாளர்களின் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பமே வழங்கப்படவில்லை.

அனைத்துக்கும் மேலாக, திரைக்கதையில் திருப்பம் ஏற்படும்போதெல்லாம், ‘இந்த திருப்பம் எப்படி இருக்குங்க’ என்பது போல ஒரு பாத்திரம் அதனை விளக்குவது ‘பெப்’பை காணாமல் போகச் செய்திருக்கிறது.

பொறியில் எலி மாட்டிக்கொள்வதற்கு முன்பாக, உள்ளே இருக்கும் தேங்காயைச் சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசிக்கும். அந்த கால அவகாசம் கூடப் பார்வையாளர்களுக்குத் தரப்படவில்லை. Kooran Tamil Movie Review

அந்த வகையில் திரைக்கதை வசனம் எழுதிய எஸ்.ஏ.சந்திரசேகரன் ஏமாற்றம் தந்திருக்கிறார். ஏ, பி, சி என்று அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவர தனது அணுகுமுறையே சரியானது என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த உத்தி ‘காலாவதி’ ஆனதாகத் தென்படுகிறது.

மணி அடித்து நீதி கேட்ட பசுவுக்குச் செவிமடுத்த மனுநீதிச் சோழனின் கதை இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘கூரன்’ எனும் டைட்டில் வடிவமைப்பில் கார் டயர் கிறீச்சிடும் சித்திரமும் ஒரு தாய் நாயின் சோக முகமும் இடம்பெற்றிருக்கின்றன.

கொக்கி போட்டு இழுக்கிற வகையில் சில ‘சூப்பர்’ காட்சிகள் ‘கூரன்’னில் இருக்கின்றன. ஆனால், அவற்றை ஒன்றிணைத்து கோர்த்த வகையில் நம்மைச் சோகத்தில் தள்ளிவிடுகிறது ‘கூரன்’.

போலவே, இதற்கு முன் நாம் பார்த்த நாய்கள் ஜாக்கிரதை, நாய் சேகர், ஓ மை டாக் அளவுக்கான காட்சியாக்கச் செறிவு ‘கூரன்’னில் இல்லை. அந்த பலவீனத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இந்த இரண்டு மணி நேரத் திரைப்படத்தை ரசிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share