மார்ச் 8-ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்ற உள்ளார். Ilayaraja went to London
இதையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைபிரபலங்கள் இளையராஜாவை வீடு தேடிச்சென்று நேரில் வாழ்த்தினர்.

சிம்பொனி அரங்கேற்றத்திற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இளையராஜா லண்டன் புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் இளையராஜா பேசும்போது,
“புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக லண்டன் செல்கிறேன். உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கலைஞர்கள் சிம்பொனியை வாசிக்க இருக்கிறார்கள்.
இந்த சிம்பொனியை காண வருகை தரும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை. இது என்னுடைய பெருமை அல்ல. இந்திய நாட்டின் பெருமை. இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்க எல்லோரையும் வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். Ilayaraja went to London
தொடர்ந்து அவரிடம், “என்னுடைய பாடலை 2கே கிட்ஸ் அனைவரும் பயன்படுத்துங்கள். நான் அதற்கு காப்பி ரைட்ஸ் எதுவும் கேட்க மாட்டேன் என்று இசையமைப்பாளர் தேவா சொல்லியிருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இந்த கேள்வியால் கோபமான இளையராஜா, “அதற்காகவா நான் இங்கு வந்திருக்கிறேன். அநாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன்” என்றார். பிரஸ்மீட்டில் செய்தியாளர்களுடன் இளையராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.