தமிழ் திரையுலகில் 1976ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற படத்தின் இசை அமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதன்பின்னர் இசையுலகில் கொடிகட்டி பறந்துவரும் அவர், இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 9 மொழிகளில் 1500க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது உலகளாவிய இசைத் துறையில் ஒப்பிடமுடியாத சாதனையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. ilaiyaraaja Symphony No. 1Valiant live performance
இந்த நிலையில் லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோ அரங்கத்தில் ‘வேலியண்ட்’ என்ற சிம்பொனியை இன்று இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உலகளாவிய இசை வரலாற்றில் ஒரு திருப்புமுனை மைல்கல்லாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இளையராஜா, தனது நீண்ட கால கனவான சிம்பொனி இசையமைக்க உள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசையமைக்க உள்ளது.

நிரம்பி வரும் அரங்கம்! ilaiyaraaja Symphony No. 1Valiant live performance
நிகழ்ச்சி நடைபெற உள்ள ஈவென்டிம் அப்பல்லோ அரங்கத்தில் மொத்தம் 3,655 இருக்கைகள் உள்ளன. இதில் 7 வகைகளாக இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்திய மதிப்பில் 31,250 ரூபாயும், குறைந்த பட்சமாக 9,713 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள இருக்கைகளில், 95 சதவீதம் நிரம்பியுள்ளதாக ஈவென்டிம் அப்பல்லோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டன் நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு அரங்கேற்றம் செய்யப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
இதனையொட்டி லண்டன் அப்பல்லோ அரங்கத்தை நோக்கி, தற்போதே இசைஞானியின் ரசிகர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.