திமுக செய்ததில் அதிமுக 5% செய்திருக்கிறதா?: ஈபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் ஓபன் சேலஞ்ச்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 26) கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

எ.வ.வேலுவுக்கு பாராட்டு

ADVERTISEMENT

இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “ உங்கள் மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் கட்டட திறப்பு விழா; உள்ளிட்ட 341 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 ஆயிரத்து 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 386 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 2 இலட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு ஆயிரத்து 45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்று இந்த விழா ஒரு முப்பெரும் விழாவாக, மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செயல்வீரர் எ.வ.வேலுவை பாராட்டுகிறேன்;

எந்த வேலையை வழங்கினாலும், அதை 100 சதவிகிதமல்ல, அதை 200 சதவிகிதம் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைப் பொறுத்தவரைக்கும், ஒரு கண்ணில் வெண்ணெய் – மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்று வேறுபாடு காட்டாமல், அவருடைய திருவண்ணாமலை மாவட்டத்தைப் போலவே, இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சியிலும் அக்கறை காட்டக் கூடியவர். 

ADVERTISEMENT

அவருக்கு துணையாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் – அதேபோல, சிறப்பாக செயல்படக்கூடிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு அதிகாரிகள் ஆகிய அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்” என்றார்.

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி

ADVERTISEMENT

மேலும் அவர், “ வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! 

அதற்கு சாட்சிதான், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்பதுபோல, நாம் பெற்றுள்ள 11.19 விழுக்காடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி! GSDP-லேயும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியா!  ஆட்டோமொபைல் உற்பத்தியா! தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியா! ஸ்டார்ட்-அப் தரவரிசையா! எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடர்” என்று தெரிவித்தார். 

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்

திமுக அரசில் செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின் , “அடுத்து, 20 இட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க இருக்கிறோம். அதுவும், A.I. என்கின்ற செயற்கை நுண்ணறிவு சந்தாவுடன் வழங்க இருக்கிறோம்! சொல்லச் சொல்ல மூச்சு வாங்குகின்ற அளவுக்கு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்! இதில், எதையுமே திராவிட மாடலுக்கு எதிரானவர்கள் கூட மறுத்துப் பேச முடியாது! 

திமுக செய்ததில் அதிமுக 5 சதவிகிதம் செய்திருக்கிறதா?

அனைத்துமே ப்ரூவன் ட்ராக் ரெக்கார்டு! எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள் – ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம் தான் – உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பது போல, தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது! நான் கேட்கிறேன் இதில் 5 சதவிகிதமாவது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா!

இது என்னுடைய ஓப்பன் சேலஞ்ச்! தைரியம் இருந்தால் சொல்லுங்கள்! 5 சதவிகிதம் கூறுங்கள்! பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பாழாய் போன தமிழ்நாடு, திராவிட மாடலின் நான்காண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது! இனி நமக்கு எப்போதும் ஏறுமுகம்தான்!  

ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மீறி அவர்களின் உதவி இல்லாமல்,  இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு வளரவே கூடாது என்று அவர்கள் அமைக்கின்ற ஸ்பீட்-பிரேக்கரை எல்லாம் தாண்டிதான், இந்த இடத்தில் நாம் நிற்கிறோம்! ஆனால், “இது எதையுமே பார்க்க மாட்டோம்; செய்திகளை படிக்க மாட்டோம்; உண்மையை பேச மாட்டோம்; தமிழ்நாட்டின் சாதனைகளைப் பற்றி வாயே திறக்க மாட்டோம்” என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது,  நீங்கள் இப்படியே கண்ணை மூடிக் கொண்டிருங்கள்! நாங்கள் அடித்து தூள் கிளப்பி சென்று கொண்டே இருப்போம்!

திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு மகுடமாக, 2026 தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்புதான், உங்களுக்கான ரியாலிட்டி ‘செக்’-ஆக இருக்கும்! இப்போது நான் சொன்ன தமிழ்நாட்டின் சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது! வறுமை, மத வன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை… இதுதான் பா.ஜ.க.-வின் இந்தியா!

தமிழக மக்களின் ஒற்றுமை

கிறிஸ்துமஸ் அன்றைக்குக் கூட மாற்றுத் திறனாளிகளையும், குழந்தைகளையும் தாக்குகின்ற மோசமான சூழலை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது!  இந்த மாடலைத்தான் தமிழ்நாட்டிலும் கொண்டு வரவேண்டும் என்று பார்க்கிறார்கள்! ஆனால், நம்முடைய மக்கள் மிகவும் உஷார்! திருப்பரங்குன்றம் தர்கா கொடியை முருக பக்தர்கள் வணங்குகிறார்கள்!

மதுரை சித்திரை திருவிழாவிற்கு வரும் இந்து பக்தர்களுக்கு பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய சகோதரர்கள் ரோஸ்மில்க் வழங்குகிறார்கள். தை முதல் நாள் அன்றைக்கு தேவாலயத்தில், பொங்கல் வைத்து படைக்கிறார்கள்! கிறிஸ்துமஸ், ரம்ஜான் வந்துவிட்டால், இந்து நண்பர்கள் எல்லாம் “கேக், பிரியாணி எங்கே?” என்று உரிமையாக கேட்கிறார்கள்.

 எம்மதமும் சம்மதம் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் இந்த ஒற்றுமை, நல்லிணக்கம்தான் மதவாத அரசியல் செய்து மக்களைப் பிளவுபடுத்த நினைக்கின்ற, பா.ஜ.க.வின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது! அவர்கள் எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு அந்தர் பல்டி அடித்தாலும் சரி, ஒற்றுமையாக வாழுகின்ற தமிழ்நாட்டு மக்களிடம் மதவெறியை தூண்ட முடியாது. இந்த ஸ்டாலின் இருக்கின்ற வரைக்கும், எங்கள் திராவிட மாடல் அரசு இருக்கின்ற வரைக்கும், உங்களுடைய மதவெறி ஆட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது.

தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஓட்டுகளால் விரட்டி அடிப்பார்கள்.  நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன நாடகம் நடத்தினாலும் சரி, தமிழ்நாட்டில் உங்கள் வித்தை, வேலைக்கே ஆகாது! உங்கள் பாட்சா பலிக்காது. திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! நம்முடைய கடமை எல்லாம், வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயரை உறுதி செய்வதுதான்!

அவசர கோலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள்

நீங்கள் அனைவரும் உறுதி செய்துவிட்டீர்களா? நியூஸில் பாத்திருப்பீர்கள். இறந்த பல பேர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்கள்! 50 ஆண்டுகளாக ஒரே அட்ரஸில் இருப்பவர்கள், பிரபல பத்திரிகையாளர்கள் என்று பலருடைய பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்டிருக்கிறது! இதனால்தான், “அவசர கோலத்தில், இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளை செய்யக் கூடாது! போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று சொன்னோம்! லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் உடனே உங்கள் பெயரை இணைத்துக் கொள்ள அப்ளை செய்யுங்கள்!

ஒவ்வொருவரின் வாக்குரிமையையும், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பாதுகாக்க, திராவிட மாடல் அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் உங்களுக்கு நிச்சயமாக, துணையாக இருப்போம்!

2026-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் துவங்கப் போகிறது! அதற்கு, நீங்கள் அனைவரும் துணையாக எப்போதும் இருக்க வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share