முறுக்கு, அதிரசம், சீடை, சீப்பு சீடை, இனிப்புச் சீடை, சின்ன சீடை, ஙகைமுறுக்கு, தேன்குழல், மாவுருண்டை என நீளும் செட்டிநாட்டுப் பாரம்பர்ய பலகாரங்களின் வரிசையில், மணகோலத்துக்குத் தனியிடம் உண்டு.
கல்யாணச் சீர், தீபாவளி சீர், பொங்கல் சீர் என்று எல்லா செட்டிநாட்டு சீர் வரிசையிலும் முதல் இனிப்பாக இதைத்தான் எடுத்துவைப்பார்கள். பார்க்கக் காரசேவு மாதிரிதான் தெரியும். எடுத்து வாயில்போடும்போதுதான் இது ஓர் இனிப்புப் பலகாரம் என்று தெரியவரும். இந்த பலகாரத்தை நீங்களும் செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பாசிப்பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – அரை கிலோ
பச்சரிசி – கால் கிலோ
உளுத்தம்பருப்பு – கால் கிலோ
பொட்டுக்கடலை – கால் கிலோ
தேங்காய் – ஒன்று
வெல்லம் – முக்கால் கிலோ
ஏலக்காய் – 10
சர்க்கரை – கால் கிலோ
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
நெய் – மூன்று டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து, அரைத்து, சலித்துக்கொள்ளவும்.
மாவு அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து காய வைக்கவும். முறுக்கு பிழியும் அச்சில் மாவை வைத்து, காய்ந்துகொண்டிருக்கும் எண்ணெயில் பிழிய வேண்டும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் அகலமான பாத்திரத்தில் மணகோலத்தை உதிர்த்துவிட்டு தேங்காயை நறுக்கி, நெய்விட்டு வதக்கி போடவும்.
அதன் மீது பொட்டுக்கடலையையும் இளஞ்சூடாக வறுத்து போடவும். பின்னர் ஏலக்காய் – சர்க்கரை ஆகியவற்றைத் தூளாக்கிக் மணகோலத்தின் மீது தூவி விடவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீரை தெளித்துக் கொதிக்க வைத்துக் கம்பிப் பாகு போல காய்ச்ச வேண்டும்.
பாகு சூடாக இருக்கும் போதே மணகோலத்தின் மீது ஊற்றிக் கொண்டே, கரண்டியினால் கிளற வேண்டும். பாகை ஊற்றுவதும், கரண்டியினால் கிளறுவதுமாக இருங்கள். அப்போதுதான் கெட்டியாகாது.
இந்த கலவை நன்றாக ஆறிய பின்னர் காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான, சத்தான மணகோலம் தயார். ஒருமாதம் வரை கெட்டுப்போகாது.