சென்னை பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி (Modi) இன்று (அக்டோபர் 11-ந் தேதி) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் ஒன்றாக பயணித்தார்.
சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்டத்தின் கீழ் மாதவரம்- சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி- வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து, தன்னுடன் இணைந்து பச்சைக் கொடி காட்ட வருமாறு பிரதமர் மோடி அழைத்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து பச்சைக் கொடியை அசைத்து, பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணித்தனர். முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணிக்க பிரதமர் மோடி பணம் செலுத்தி டிக்கெட் வாங்கினார்.

மெட்ரோ ரயில் பயணத்தின் போது அதன் சேவைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக, சென்னைக்கு தனி விமானத்தில் வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
