ADVERTISEMENT

மேயர் பிரியா திடீர் ஹைதராபாத் பயணம்! பின்னணி என்ன?

Published On:

| By Aara

சென்னை மேயர் பிரியா ஹைதராபாத்துக்கு பயணம் செல்கிறார். அவருடன் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் கவுன்சிலர்கள் ஹைதராபாத் செல்கிறார்கள். Chennai Mayor Priya trip to Hyderabad

எதற்காக இந்த ஹைதராபாத் பயணம்?

சென்னை கொடுங்கையூரில் இருக்கும் குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில்தான் சென்னை மாநகரின் ஒட்டுமொத்த குப்பைகளும் குவிக்கப்படுகின்றன. குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும் என்ற மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக,

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி ‘குப்பை எரி உலைகள்’ திட்டத்தை கொடுங்கையூர் பகுதியில் செயல்படுத்த முடிவு செய்தது. ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்து இதன் மூலம் தனியார் பங்களிப்புடன், குப்பை கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,248 கோடி மதிப்பில் ‘குப்பை எரி உலைகள்’ திட்டத்தை கொடுங்கையூர் பகுதியில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. Chennai Mayor Priya trip to Hyderabad

இதன்படி கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கட்டடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் எரி உலைகள் போன்றவற்றிற்கு ரூ.848 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த எரி உலைகளில் இருந்து 2 ஆயிரம் டன் குப்பையை எரிப்பதால், 42 மெகா வாட் மின்சாரமும், 80 கிலோ எரிவாயுவும் கிடைக்கும் என்றும் இதன் மூலம் சென்னை மாநகரே பயன்பெறும் என்றும் மாநகராட்சி கூறுகிறது.

இந்த திட்டத்துக்கு மக்களும், கொடுங்கையூர் கவுன்சிலரான காங்கிரஸ் மாவட்ட தலைவர் டில்லி பாபு, மதிமுக மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான ஜீவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Chennai Mayor Priya trip to Hyderabad

ADVERTISEMENT

35 வது வார்டு மதிமுக கவுன்சிலரான ஜீவன் பேசும்போது, “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்களுடன் சேர்ந்து எங்கள் தலைவர் வைகோ போராடினார். கிட்டத்தட்ட அதற்கு இணையானதுதான் கொடுங்கையூரில் எரியூட்டியை அனுமதிப்பதாகும்.

இதை வைகோவின் தம்பியாகிய நான் அனுமதிக்க மாட்டேன். வட சென்னையில் உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான திட்டம் இது. மக்கள் நச்சு வாயுக்களுக்கு ஆளாக நேரிடும். கழிவுகளிலிருந்து எரியூட்டித் திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழியை மாநகராட்சி கண்டுபிடிக்க வேண்டும்” என்று மாமன்றத்திலேயே பேசினார் ஜீவன்.

சமீபத்தில், பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சென்னை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு கோரினர்.

ஏப்ரல் 13 ஆம் தேதி, வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கொடுங்கையூரில் அமையும் எரிஉலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் சென்னை கொடுங்கையூரில் நடைபெற்றது.

இதில் நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், கொடுங்கையூர் குப்பை கிடங்கு அமைந்துள்ள பகுதியின் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெ.டில்லிபாபு , இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ரேணுகா, மதிமுக கவுன்சிலர் ஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

“கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற வேண்டும். கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும். தற்போது கொடுங்கையூர், சின்னமாத்தூரில் செயல்பட்டு வரும் எரிஉலைகளை மூட வேண்டும். இவற்றை வலியுறுத்தி மே 25ம் தேதி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்” என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் மேயர், கமிஷனர் ஆகியோர் அந்த திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தோடு ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இதேபோன்ற நாங்கள் நடத்தும் குப்பை எரி உலைகள் திட்டம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்கே குப்பை எரி உலைகள் எப்படி செயல்படுகிறது என்பதை நேரடியாக காட்டி விளக்குவோம் என அந்த நிறுவனத்தினர் ஆலோசனை கூறினர்.

அதன்படி சென்னை மாநகர மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ்குமார், இத்திட்டம் அமைந்திருக்கும் பகுதி கவுன்சிலரான டில்லிபாபு, திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மதிமுக கவுன்சிலர் ஜீவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரேணுகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் இத்துறை தொடர்பான அதிகாரிகள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் என சுமார் 15 பேர் ஹைதராபாத் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதுகுறித்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு அமைந்திருக்கும் வார்டின் கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் டில்லிபாபுவிடம் பேசினோம்.

“இங்கே குப்பை கிடங்கு எரி உலை திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனம், ஹைதராபாத்திலும் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நான் உள்ளிட்ட கவுன்சிலர்கள் தெரிவித்த எதிர்ப்புகள், மக்கள் நலனில் அக்கறைகொண்டு தெரிவித்த சந்தேகங்களுக்கு அந்த பிளான்ட் செயல்படும் விதத்தைக் காட்டி தெளிவுபடுத்துகிறோம் என்று தனியார் நிறுவனம் ஆலோசனை கொடுத்துள்ளது. அதன்படி இந்த பயணத்துக்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அங்கே சென்று பார்வையிட்டு விட்டு எங்கள் கருத்தை தெரிவிக்கிறோம்” என்றார்.

ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்கே செயல்பட்டு வரும் குப்பை எரி உலைகளின் செயல்பாடுகளை சுட்டிக் காட்டி எதிர்ப்பாளர்களை சரிக்கட்டுவது தான் இந்த பயணத்தின் நோக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share