பெரியாருக்கு எதிரான கருத்துகளுக்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 18) தள்ளுபடி செய்தது. chennai high court dismissed seeman plea
கடலூர் ஜனவரி மாதம் முதல் பெரியார் தொடர்பாக பெரியாரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தார். அவரது பேச்சுக்கு பாஜகவினர் தவிர முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெரியாருக்கு எதிராக தான் பேசிய கருத்துகளுக்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களையும் சேர்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சீமானுக்கு எதிராக பாலியல் புகார் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பெரியாருக்கு எதிராக பேசவில்லை! chennai high court dismissed seeman plea
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பெரியாருக்கு எதிராக சீமான் எந்த இழிவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை . பொதுக் கூட்டத்தில் மற்ற அரசியல் தலைவர்கள் ஆற்றிய உரைகள் மற்றும் எழுத்துக்களை மட்டுமே எடுத்து பேசினார்.
வேறொருவரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களை பேசுவது குற்றச்சாட்டாகாது. அவரது பேச்சில் எந்த தூண்டுதலோ இல்லாதபோது, அதை நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகக் கூற முடியாது. இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள BNSS இன் பிரிவுகள் 192, 196(1)(a), 352, 353(1)(c) மற்றும் 353(2) என் எதன் கீழும் வராது. பல FIRகளைப் பதிவு செய்வது, ஆளும் ஆட்சியின் உதவியுடன் சட்ட செயல்முறையை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகும்” என்று வாதிட்டார்.
எஃப்.ஐ.ஆர் விவரங்கள் எங்கே? chennai high court dismissed seeman plea
இதனையடுத்து, ”மனுவில் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் விவரங்களை ஏன் குறிப்பிடவில்லை” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சீமான் தரப்பில், “BNSS பிரிவு 35(3)(5) இன் கீழ் நோட்டீஸ்களைப் பெற்றபோது, காவல்துறை அதிகாரியிடம் சரியான குற்றச்சாட்டுகளின் விவரங்களை கேட்டோம். ஆனால் அவர்கள் அதுகுறித்த தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்” என வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து “மனுவில் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் விவரங்களைக் குறிப்பிடாமல், எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் புகார்தாரர்களை சேர்க்காமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவரங்கள் இல்லாமல் மனுவை எப்படி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சீமானின் மனுவை அவர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இது சீமானுக்கு மிகப் பெரும் சோதனையாக அமைந்துள்ளது. இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சீமான் நேரில் சென்று ஆஜராக வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.