வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகலாம் : நீதிமன்றம்!

Published On:

| By Kavi

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம், திமுக ஆகியோர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி மனு தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது வேலுமணி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜரானார்.

இதற்குத் தமிழக அரசு சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்த போது, டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை,

தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் எனத் தெரிவித்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையைச் செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதே சமயத்தில், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகத் தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்த நீதிமன்றம் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பிரியா

கோவைக்கு திமுக அரசு எதுவும் செய்வதில்லை: எஸ்.பி.வேலுமணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share