தமிழகத்தில் கடந்த மே 10-ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் (DGP Mahesh Kumar Aggarwal) இன்று ஜூன் 3-ந் தேதி பொறுப்பேற்றார்.
தமிழக டிஜிபி பதவியும் சர்ச்சையும்
தமிழகத்தின் கடைசி வழக்கமான மற்றும் முழு நேர டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கடந்த 2025 ஆகஸ்ட் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு பல மாதங்களாக நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை.
ஜி. வெங்கடராமன், இடைக்காலப் பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்தார்.
புதிய டிஜிபியைத் தேர்வு செய்ய தமிழக அரசு அனுப்பிய பட்டியலில், மிக மூத்த அதிகாரியான சீமா அகர்வால் (1990 Batch) பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவர் 2026 ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளதால், “ஓய்வு பெற குறைந்தபட்சம் 6 மாதங்கள் பணிக்காலம் (Residual Service) இருக்க வேண்டும்” என்ற உச்ச நீதிமன்ற விதியைக் காட்டி யுபிஎஸ்சி அவரது பெயரை நிராகரித்தது. இது சீனியாரிட்டி அடிப்படையில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடுநிலையாக இல்லை என எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததால், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கடராமனை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியது.
வெங்கடராமனுக்குப் பதிலாக கடந்த ஏப்ரல் 2-ந் தேதி சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் கால டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் யுபிஎஸ்சி பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளான ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் அடங்கிய இறுதிப் பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து மகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டின் 34-வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார்.
யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?
பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மகேஷ் குமார் அகர்வால் 1972-ல் பிறந்தார். சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1990-1993 காலகட்டத்தில் சட்டப் படிப்பை (L.L.B.) முடித்தார். பின்னர் பர்சனல் மேனேஜ்மென்ட் படிப்பில் முதுகலைப் பட்டமும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். 1994-ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது 22 வயதிலேயே தேர்ச்சி பெற்று தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தன் பணியைத் தொடங்கினார்.
1996 முதல் காவல்துறையில் பணியாற்ற தொடங்கிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
- தேனி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP)
- ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – SP
- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP
- தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP -ஆக பணியாற்றினார்.
சிபிஐ அதிகாரியாக
சென்னை பூக்கடை துணை கமிஷனராக பணியாற்றிய நிலையில் 2007-ம் ஆண்டு மத்திய அரசுப் பணிக்கு மகேஷ் குமார் அகர்வால் அனுப்பப்பட்டார். மத்திய புலனாய்வு அமைப்பான – சிபிஐ -ல் சண்டிகர்- டெல்லி பிரிவுகளுக்கான எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
இதன் பின்னர் 2012-ம் ஆண்டு முதல் மீண்டும் தமிழகப் பணியில் இணைந்தார் மகேஷ் குமார் அகர்வால்.
சிபிசிஐடி ஐஜியாக மகேஷ் குமார் அகர்வால் பதவி வகித்த 2016-ல்தான் நாட்டையே உலுக்கிய ஓடும் ரயிலில் ரூ5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. பணமதிப்பிழப்பு காலத்தின் போது சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தை மகேஷ் குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்தது.
இதன் பின்னர் 2018-ம் ஆண்டு வரை மதுரை மாநகர காவல் ஆணையராக- போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் பணியாற்றினார். அப்பதவியில் இருந்து சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
2020-ம் ஆண்டு சென்னை மாநகரத்தின் 107-வது போலீஸ் கமிஷனராக- காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். கொரோனா காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக சவால்களுக்கு இடையே பணியாற்றினார் மகேஷ்குமார் அகர்வால்.
சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபியாக உயர்வு பெற்றார்.
2023-2024ல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக (ADGP, Enforcement) இவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், 2023 மே மாதத்தில் மரக்காணத்திலும், 2024 ஜூன் மாதத்தில் கள்ளக்குறிச்சியிலும் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு பின்னர் ஆயுதப் படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் இயக்குநராகப் பணியாற்றினார்.
2025-ல் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகப் பொறுப்பு வகித்தார்.
2025-ம் ஆண்டு மீண்டும் அயல் பணியாக மத்திய அரசு பணிக்கு சென்றார் மகேஷ் குமார் அகர்வால். எல்லைப் பாதுகாப்பு படையான BSF-ல் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றிய நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு பதவிகளை வகித்த காலங்களில்
- சென்னை தி.நகர் நகைக் கடையில் சுவரைத் துளையிட்டுப் பல கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், வடமாநிலக் கொள்ளையர்களை அண்டை மாநில எல்லையில் வைத்து அதிரடியாகக் கைது செய்தது
- ஆன்லைன் ரம்மி மோசடி கும்பல்களை முடக்கியது
- 2021-ல் அண்ணா நகரில் ரவுடிகளைப் பிடிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட அதிரடிகளும் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.
