ரவிக்குமார்
தமிழ்நாடு அமைச்சரவையில் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். இப்போதுதான் எஸ்சி வகுப்பினரின் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் கிடைத்துள்ளது. இதுவொரு மகத்தான சாதனையாகும்.

அம்பேத்கர் வலியுறுத்திய உரிமை
அமைச்சரவையில் எஸ்சி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்திய உரிமையாகும். “ வட்ட மேசை மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களின் போது தொடக்கத்திலிருந்தே நான் ஒன்றை வலியுறுத்திக் கொண்டிருந்தேன்; அதாவது தீண்டாத மக்களுக்குச் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான உரிமை இருந்தால் மட்டும் போதாது. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் உரிமை வேண்டும் என்றேன்” என அம்பேத்கர் அதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இடம் ஏன்?
அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியிருக்கிறார்: “சாதி இந்துக்கள் தீண்டாத மக்களுக்கு எதிராகக் காலங்காலமாய் வளர்த்துக் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சிகளை நிர்வாகத்தினுள் நுழைத்து விடுகிறார்கள். அரசுப் பணிகளில் தொடர்ந்து சாத் இந்துக்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் வரை, காவல் துறையிடமிருந்து பாதுகாப்போ, நீதித் துறையிடமிருந்து நீதியோ, நிர்வாகத் துறையிடமிருந்து சட்ட வழிபட்ட நன்மையோ கிடைக்குமென்று தீண்டாத மக்கள் ஒரு நாளும் நம்புவதற்கில்லை. அரசுப் பணிகளைத் தீண்டாத மக்களின் தேவைகள் பால் குறைந்த வெறுப்பும் கூடுதல் பொறுப்புணர்ச்சியும் கொண்டவையாக மாற்ற முடியும் என்று நம்புவதற்கு ஒரே ஆதாரம் உயர் நிர்வாகத் துறையில் தீண்டாத மக்களை இடம் பெறச் செய்வதுதான். இந்தக் காரணங்களால் தான் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டபோது, தீண்டாத மக்கள் சட்ட மன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்தது போலவே, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெறும் தங்களது உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தீண்டாத மக்களின் கோரிக்கையையும் அழுத்தம் திருத்தமாய் வலியுறுத்தினேன்” என்கிறார் அம்பேத்கர் ( what gandhi and Congress has done to untouchables, BAWS Vol 9, p 95-102, Dr. Ambedkar Foundation Ministry of Social Justice & Empowerment, Govt. of India, )

தலித் அமைச்சர்கள்- ஏற்க மறுத்த காந்தி- காங்கிரஸ்
வட்ட மேசை மாநாடு அந்தக் கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டு, அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்துப் பரிசீலித்தது. ஆளுநரின் பொறுப்பில் அதை விடுவது என முடிவு செய்யப்பட்டது. ‘ஒரு மாகாணத்தில் அமைச்சரவை பொறுப்பேற்கும்போது அதில் எஸ்சி வகுப்பைச் சேர்ந்தவர் இடம் பெற்றிருப்பதை ஆளுநர் உறுதி செய்யவேண்டும்’ என முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் காந்தி அதற்கு உடன்படவில்லை. காங்கிரஸ் கட்சியும் அதை ஏற்கவில்லை. 1937 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாட்டின் ஒரு அங்கமாக ‘ இந்த வாக்குறுதியை செயல்படுத்த மாட்டோம்’ என்பதையும் காங்கிரஸ் சேர்த்தது.

அரசியல் நிர்ணய சபையில் விவாதம்
சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையிலும் இதற்கான விவாதம் நடந்தது. 1947 ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்யப்பட்ட ‘ சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த அறிக்கை’ மீது பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த தலைவருமான திரு வி. ஐ. முனிசாமிப் பிள்ளை ,
“ ஐயா, நமது நாட்டின் நலிந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உறுதியாக நம்புகிறவர்களில் நானும் ஒருவன் . அரசுப் பொறுப்புகளை வகிப்பதன் மூலமாகவே, இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அந்தத் துரதிர்ஷ்டவசமான சமூகங்களுடன் நேரடித் தொடர்புகொள்ளவும், அவர்களை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாங்களே நேரில் உணர்ந்துகொள்ளவும் இயலும்” எனக் குறிப்பிட்ட அவர் , “ அமைச்சரவையில் இச்சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துவதன் மூலம், அமைச்சரவையின் தூய்மை கெட்டுவிடும் என்றோ அல்லது அதன் செயல்பாடு திறனற்றதாகிவிடும் என்றோ நான் கருதவில்லை; மாறாக, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போலவே, அமைச்சரவையிலும் அதே விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன்” எனத் தெள்ளத் தெளிவாகப் பேசினார்.
“ ஐயா, நமது நாட்டில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் ஒன்றைத் தெளிவாக உணர்த்துகின்றன: அமைச்சர்களாகவோ அல்லது சட்டமன்றப் பேரவைத் தலைவர்களாகவோ பல்வேறு உயர் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும், தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சமமான திறமையுடனேயே செயல்பட்டுள்ளனர். இச்சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து உயர் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திறம்படச் செயல்பட மாட்டார்கள் என்ற ஐயம், பெரும்பான்மைச் சமூகத்தினரின் மனதில் எழவே கூடாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ( Constituent Assembly Debates, Vol. V, 27 August 1947)
அமைச்சரவையில் இடஒதுக்கீடு
டாக்டர் அம்பேத்கர், வி.ஐ. முனிசாமிப் பிள்ளை ஆகியோர் வலியுறுத்தியும்கூட சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் அமைச்சரவையில் இட ஒதுக்கீடு என்ற கொள்கை ஏற்கப்படவில்லை. அதனால் கடந்த 75 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் அமைச்சரவையிலோ, மாநில அரசுகளின் அமைச்சரவைகளிலோ எஸ்சி மக்கள் அடையாளமாக சில பொறுப்புகளை மட்டுமே பெற முடிந்தது.
தமிழகத்தில் எஸ்சி அமைச்சர்கள்
தமிழ்நாட்டின் நிலையைப் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இங்கே மிகவும் மோசமான நிலைதான் இருந்தது என்பதைக் காணலாம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திரு கக்கன் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதற்குப் பின் அமைந்த திமுக, அதிமுக அரசுகளில் எஸ்சி வகுப்பினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு எதுவும் தரப்பட்டதில்லை. அருந்ததியருக்கு ஒரு அமைச்சர், தேவேந்திரகுல வேளாளருக்கு ஒரு அமைச்சர், பறையர்/ ஆதி திராவிடருக்கு ஒரு அமைச்சர் என்றே வழங்கப்பட்டு வந்தது. கடந்த திமுக ஆட்சியில்தான் முதல் முறையாக பறையர் / ஆதி திராவிடருக்கு 2 அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. உயர்கல்வித் துறையும் தரப்பட்டது. ஆனால் அப்போதும்கூட எஸ்சி மக்கள் தொகைக்கு இணையாக அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.

மாயைகள் உடைபட்டன
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் கால் பங்கினராக இருக்கும் எஸ்சி வகுப்பினர் கடந்த 75 ஆண்டுகளாகத் தமது மக்கள் தொகைக்கேற்ப அமைச்சர்களைப் பெறவே இல்லை. அதுமட்டுமின்றி எஸ்சி வகுப்பினருக்கு சட்டப்படி உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளைக்கூடத் தருவதற்கு ஆட்சியாளர்கள் தயங்கினர். அவ்வாறு தந்தால் மற்ற சாதியினரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற போலியான காரணம் சொல்லப்பட்டது. இப்போதுதான் அந்த மாயை உடைக்கப்பட்டிருக்கிறது. 8 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் அரசியல் பூகம்பம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
முதல்வர் விஜய்யின் துணிச்சல்
1931 இல் அம்பேத்கரும் 1947 இல் வி.ஐ.முனிசாமிப் பிள்ளையும் வலியுறுத்திய உரிமை நனவாவதற்கு சுமார் 100 ஆண்டுகள் ஆகியுள்ளது. துணிச்சலாக இதை செயல்படுத்திக் காட்டியிருக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்குப் பாராட்டுகள்.
கர்நாடகா, தெலுங்கானாவிலும்…
தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த முன்னுதாரணத்தை இங்கே அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி நடக்கும் கர்னாடகாவிலும், தெலுங்கானாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசிலும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு சனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு:

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.
