தீர்ப்பு வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு உயர்நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4 கைதிகளின் மேல்முறையீட்டு வழக்கில் 2022 ஆம் ஆண்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இது எங்களது வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது. எங்களுக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டு இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் ஜாய் மால்யா பக்சி அமர்வு விசாரித்தது.
இந்த நிலையில் நேற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் விரைந்து தீர்ப்பு வழங்குவதற்காக மூன்று மாத காலவரம்பை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
ஒரு வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் போது, அந்தத் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அதற்கான தெளிவான காரணங்களுடன் இறுதித் தீர்ப்பை வழங்கிட உயர் நீதிமன்றம் முழு முயற்சி செய்ய வேண்டும்.
தனிநபர் சுதந்திரம், ஜாமீன், முன்ஜாமீன் போன்ற விவகாரங்களில் தீர்ப்பு வழங்குவதில் உயர் நீதிமன்றங்கள் கூடுதல் வேகத்தை காட்ட வேண்டும்.
ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, அதற்கான உத்தரவை முடிந்தவரை அதே நாளில் பிறப்பித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை உத்தரவு ஒத்திவைக்கப்பட்டால், அது அடுத்த நாளே பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஜாமீன் அல்லது தண்டனை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உடனேயே, அதுகுறித்த தகவல் சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். வேறு ஏதேனும் வழக்கில் அவர்கள் தேவைப்பட்டாலோ அல்லது பிணை நிபந்தனைகளை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டாலோ ஒழிய, அந்த விசாரணைக்காலக் கைதி அல்லது தண்டனைக் கைதி முடிந்தவரை அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளுக்குள் விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்த இணக்க அறிக்கையை கீழமை நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கிலோ அல்லது மரண தண்டனைக்குரிய வழக்கிலோ தீர்ப்பு தள்ளிவைக்கப்படும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் இருந்தால், நீதிபதிகள் அந்த வழக்கு குறித்து ஏதேனும் விளக்கம் கேட்க விரும்பினால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட 7 நாட்களுக்குள் இரு தரப்பிடமும் கேட்க வேண்டும்.
ஒரு தீர்ப்பு வழங்கப்படும்போது, அத்தீர்ப்பின் முக்கியப் பகுதியை மட்டும் திறந்த நீதிமன்றத்தில் வாசிப்பது போதுமானது. ஆனால், 7 நாள்களுக்குள் அல்லது 15 நாட்களுக்குள் முழுமையான தீர்ப்பை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
திறந்த நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் வாசித்து அறிவிக்கப்பட்ட, காரணங்களுடன் கூடிய முழுமையான தீர்ப்புகள், அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் விவரங்களும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மின்னஞ்சலின் நகல் எந்த நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்ததோ, அந்த அமர்விற்கும் அனுப்பப்பட வேண்டும். இதற்கேற்ப உயர் நீதிமன்ற இணையதளத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய நிர்வாகத் தரப்பில் தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும்.
வழக்கு ஒத்திவைக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் தீர்ப்பு வழங்கப்படாத வழக்குகளின் பட்டியலை, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே பகிர்வது பயனுள்ளதாக இருக்குமா என்பதையும் தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முத்திரையிடப்பட்ட மற்றும் ரகசியமான ஆவணமாக மட்டுமே இருக்க வேண்டும்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் அது வழங்கப்படாவிட்டால், அந்த விவகாரத்தைப் பதிவாளர் ஜெனரல் தகுந்த உத்தரவுகளுக்காகத் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தலைமை நீதிபதி 2 வாரங்களுக்குள் அந்தப் பட்டியலைச் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அமர்வின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்குப் பிறகும், அடுத்த 2 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படவில்லை எனில், தலைமை நீதிபதி அந்த வழக்கை வேறு ஒரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றலாம். அந்தப் புதிய அமர்வு வழக்கை மீண்டும் விசாரித்து, தாமதமின்றி விரைவாகத் தீர்ப்பை வழங்கலாம்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அது வழங்கப்படாவிட்டால், அந்த வழக்கில் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரும் ‘ தீர்ப்பை அறிவிக்க கோரி’ உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனு, அடுத்த 2 நாட்களுக்குள் நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியிலிருந்து 3+1 (நான்கு) மாதங்களுக்குள் அது வழங்கப்படாவிட்டால், அந்த வழக்கில் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரும், ‘குறிப்பிட்ட அந்த வழக்கை அந்த அமர்விலிருந்து திரும்பப் பெற்று, புதிய வாதங்களுக்காக வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக் கோரி’ தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்ய முழு உரிமை உடையவராவார்.
வழங்கப்படும் தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகலில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தேதி மற்றும் தீர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
உயர் நீதிமன்றங்கள் தங்களது இணையதளங்களை முறைப்படி உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும். தீர்ப்பு எந்தத் தேதியில் ஒத்திவைக்கப்பட்டது என்ற விவரம் வழக்கின் தற்போதைய நிலவரம் ஆகியவை அதில் காட்டப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றங்களின் விதிகளுக்குள் அதிகாரப்பூர்வமாகச் சேர்ப்பதற்கான தகுந்த திருத்தங்களைச் செய்யும் பொருட்டு, உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்கள் இவற்றை அந்தந்தத் தலைமை நீதிபதிகளின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கினர்.
