தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் தற்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். Annamalai BJP
நாகப்பட்டினத்தில் தமது சுற்றுப் பயணத்தில் பேசிய பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர ஏமாளி அல்ல; அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றார். இது பாஜக- அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநில தலைவர் பதவி வெங்காய பதவி
இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் பதவிக்கு பின்னால் போய் பார்த்திருக்கிறீர்களா? மாநில தலைவர் பதவியே வெங்காய பதவி என்று சொல்லி இருக்கிறேன்; உரித்து உரித்து பார்த்தால் உள்ளே ஒன்றும் இருக்காது; நம்ம வேலையை நாம் செய்வோம்; ஆண்டவன் இருக்கிறான்.
இபிஎஸ் பேச்சுக்கு பதில்
அதிமுக ஆட்சியில் பாஜகவுக்கு பங்குதர ஏமாளி அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் உள்நோக்கத்துடன் தாம் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம் தந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டதாக கருதுகிறேன்.
பாஜக ஏமாறக் கூடிய கட்சி அல்ல
ஆனாலும் பாஜகவைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஏமாற்றுகிற கட்சி கிடையாது; அதே நேரத்தில் ஏமாறக் கூடிய கட்சியும் கிடையாது. நாங்க யாரையும் அடித்து பிடுங்கவும் மாட்டோம். எந்த கட்சியையும் பாஜக கீழே தள்ளிவிட்டு வளர வேண்டும் என நினைக்காது.
தனித்து ஆட்சி அமைக்க முடியாது
தமிழ்நாட்டில் முன்னரைப் போல அரசியல் களம் இல்லை; கட்சிகள் வலுவிழந்துவிட்டன. ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது தெரியவில்லை. திமுக, தானாக தனியாக ஆட்சி அமைக்குமா? என்பது தெரியாது. அதேபோல எந்த ஒரு கட்சியும் தனியாக ஆட்சி அமைக்க முடியுமா? அல்லது கூட்டணி எல்லாம் சேர்த்து உழைத்து அனைத்து கட்சிகளும் ஆட்சிஅமைக்க முடியுமா? 1980, 1990, 2000-ல் இருந்த தமிழகம் இப்போது இல்லை.2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலே ஒரு சாட்சி. எந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். நாங்கள் யாரையும் குறைத்து மதிக்கவில்லை; எங்களையும் யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு. ஆகையால் தேவையில்லாத விஷயங்களை பேசக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
