தமிழகத்தில் 2026ல் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். BJP allaiance government in 2026
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.
ஆனால் இந்த கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சரியாக பதில் அளிப்பதில்லை. ஏற்கனவே அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனிடம் ஈரோட்டில் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால் செங்கோட்டையன் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
அதிமுக பாஜக கூட்டணியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியில் இருந்து விலகப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு சென்னையில் பதிலளித்த அவர், ”என்னைப்பற்றி பொய்ச் செய்தியை பரப்புகிறார்கள்” என்று கூறியதோடு திராவிட பாரம்பரிய குடும்பம் எங்களுடையது என்று கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இன்று (ஏப்ரல் 14) மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “15 நாளைக்கு நான் விரதம். அரசியல் பற்றி கேட்காதீர்கள்” என்று பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, “2026ல் அதிமுக தலைமையிலான ஆட்சிதான் நடைபெறும்” என்றார். அவரிடம், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறாரே என்ற கேள்விக்கு, “அவர்கள் ஆயிரம் சொல்வார்கள்… ஆனால் எங்கள் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்” என்று பதிலளித்தார் செல்லூர் ராஜூ.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவரிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல, இந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி. திமுக தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி” என்றார்.
பாஜக மாநில தலைவரை மாற்றினால்தான் கூட்டணி வைக்கப்படும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி சாதித்துவிட்ட பிறகுதான் இந்த கூட்டணி அமைந்திருக்கிறது என்று சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு,
“நீங்கள் யாராவது எடப்பாடி பழனிசாமி அருகில் அமைந்திருந்தீர்களா… பாஜகவில் அமைப்பு தேர்தல் நடந்து முடிந்து தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜகவில் 12 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவரை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் மற்றவர்கள் கட்சியில் 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அதுவும் . 25 வருடத்துக்கு ஒருமுறை தேர்ந்தெடுப்பார்கள். நாங்கள் மூன்று வருடத்துக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.
திமுக கூட்டணி அடிமை கூட்டணி என்று விமர்சித்த தமிழிசை, “செல்வப்பெருந்தகை துணை முதல்வர் என்று போஸ்டர் ஒட்டியவுடன் அதனை உடனே கிழிக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஏன் கூட்டணி கட்சிக்கு துணை முதல்வர் பதவி கேட்க உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “பாஜக கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கும். 2026 எங்களுக்கான ஆட்சி” என்று கூறியுள்ளார்.
இது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. BJP allaiance government in 2026