மத்தி மீன் (Mathi Fish) சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் அதிகரிப்பதோடு பல்வேறு உடல்நல நன்மைகளும் கிடைக்கின்றன.
அசைவப் பிரியர்களில் மீன் சாப்பிடாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. மீன் அதன் சுவைக்காக மட்டுமின்றி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் (Benefits of eating fish) பரவலாக அறியப்படுகிறது. நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால் வாரத்திற்கு 2 முறையாவது மீன் சேர்த்துக்கொள்வது உடல்நலனுக்கு நல்லது.
மீன் சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும், ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக மீனில் உயர்தர புரதம், ஒமேகா – 3 கொழுப்பு (Omega-3 fat) அமிலங்கள், வைட்டமின் ஏ, டி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. குறைந்த விலையில் அதிகமான நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுக்கு மத்தி மீன் சிறந்த தேர்வாக இருக்கும்.
முடி ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கிறது
தலைமுடி ஆரோக்கியமாக இருக்க மத்தி மீன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மத்தி மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12 ஆகியவை நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை (Fish for hair growth) மேம்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்க உதவுகின்றன. மத்தி மீனைத் தவறாமல் உட்கொள்வது, அடர்த்தியான, பளபளப்பான முடியைப் பராமரிக்கவும், இளநரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எலும்புகளின் வலிமை அதிகரிக்கிறது
மத்தி மீனில் உள்ள வைட்டமின் டி (Vitamin D), கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளுக்கு நன்மை அளிக்கின்றன. குறிப்பாக எலும்புகளை வலுப்படுத்தவும் அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. மத்தி மீனை தொடர்ந்து சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் கீல்வாதத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
இதய ஆரோக்கியம்
மத்தி மீன் இதய ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது என கருதப்படுகிறது. இதில் உள்ள ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்கவும் நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், இது ரத்த நாளங்களில் ரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தைக் குறைத்து, அதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடும்.
நினைவாற்றலை மேம்படுத்தும் மத்தி மீன்
மேலும் மத்தி மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றலை மேம்படுத்தி, மூளையைச் சுறுசுறுப்பாக (Sardines that boost memory) வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த மீன் சந்தையில் குறைந்த விலையில் கிடைப்பதால், இது சாமானிய மனிதன் வாங்கும் அளவுக்கு விலை குறைந்ததாக உள்ளது.
