பஸ்தரில் நடக்கும் கொலைகள்… இந்திய ஜனநாயகம் ஏன் வெட்கப்படவில்லை?

Published On:

| By Minnambalam Desk

சரோஜ் கிரி bastar killings Indian Democracy

பஸ்தரில் கொலைகள் நடந்து வருகின்றன. சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனால் நாடாளுமன்ற அமர்வு நடந்துகொண்டிருந்தபோதும் அதைப் பற்றிய விவாதம் எதுவும் நடக்கவில்லை.

ADVERTISEMENT

அரசியல் வட்டாரம்  முழுவதும் மயான அமைதி நிலவுகிறது.

மவுனத்தில் எதிர்க்கட்சிகள்! bastar killings Indian Democracy

இனப்படுகொலை என்று சொல்லக்கூடிய பஸ்தர் படுகொலைகளை மறைக்க ஆளும் கட்சி முயற்சிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதைச் சத்தமாகவும் தெளிவாகவும் அறிவிக்கிறார். ஆனால் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அதை எதிர்த்துக் குரல் எழுப்புவதில்லை. மற்ற பல விஷயங்களில் எதிர்க்கட்சிகள் அமித் ஷாவை வறுத்தெடுக்கின்றன. ஆனால் பஸ்தர் விஷயத்தில் யாரும் பேசுவதில்லை. எந்தக் குழுவும் இதைப் பற்றிப் பேசக் குடியரசுத் தலைவரைச் ச்ந்திக்கவில்லை.  செய்தியாளர் சந்திப்பு இல்லை. வெள்ளை அறிக்கை அல்லது விசாரணைக்கான கோரிக்கை இல்லை. பஸ்தரைப் பொறுத்தவரை எதையும் கேட்கவில்லை, எதையும் பார்க்கவில்லை, எதையும் கவனிக்கவில்லை என்பது போல் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. இந்திய ஜனநாயகத்தின் முற்போக்குக் குரல்களாக அறியப்படும் ராகுல் காந்தி, மஹுவா மித்ரா, சஷி தரூர், அசாதுதீன் ஒவைசி ஆகிய அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்தியாவின் அரசியல் வர்க்கத்தின் துயரமானதும் தீங்கு நிறைந்ததுமான ஒருமித்த கருத்தை நாம் காண்கிறோமா? இந்தியாவில் ஜனநாயகம் என்னும் கருத்தின் எல்லைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமா? 

நாடாளுமன்றத்தின் ஒப்புதல்! bastar killings Indian Democracy

பஸ்தரில் நடக்கும் கொலைகள் பற்றிப் பொதுவில் எதையும் சொல்லக் கூடாது என்ற ரகசிய உடன்படிக்கையை அனைவரும் பின்பற்றுவதுபோல் உள்ளது. கடும் மழை, சூறாவளி முதலான இயற்கைப் பேரழிவு பற்றிய செய்திகளைப் போல ஊடகங்கள் இந்தக் கொலைகள் பற்றிய செய்திகளையும் வெளியிடுகின்றன. இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

ADVERTISEMENT

பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தியாவை உள்ளடக்கிய பல்வேறு சமூகப் பிரிவுகள், சாதிகள், பழங்குடியினர், பிராந்தியங்கள், மத சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்றன. ஆதிவாசிகளின் பிரதிநிதிகள்கூட நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால் பஸ்தர் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது.

இவர்கள் அனைவரையும் பிணைக்கும் ஒப்பந்தம் என்ன? இவர்களை மௌனமாக்குவது எது? பஸ்தர் கொலைகள் இந்தியாவின் கட்டமைப்புக்கான தேவை என்று சொல்லப்படுவதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் போலிருக்கிறது.

பொதுவான எதிரி bastar killings Indian Democracy

இந்தச் சூழ்நிலையில் நாம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விஷயத்தில் உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தார்மீக மனசாட்சியுடன் “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” தலையிடுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

சூழ்நிலை உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வது நல்லது. இந்தியாவின் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் இந்த மௌனத்தை, ஒருமித்த கருத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மொத்த அரசியல் வர்க்கத்திற்கும் ஒரு பொதுவான எதிரி இருக்கிறார் என்பதுதான் நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். அந்த எதிரிக்கு எதிரான இந்த எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்தின் அனைத்துப் பங்குதாரர்களையும் பிணைக்கிறது. அவர்கள் அனைவரும் ஒரு எதிரிக்கு அஞ்சுகிறார்கள். அந்த எதிரியைக் கொன்று முடிக்க அவர்கள் ஒன்றுபட வேண்டும்.

பாஜகவிற்கும் நாடு முழுவதிலும் அதற்கு எதிராக உள்ள கட்சிகளுக்கும் இடையிலான சண்டைகளுக்கு மத்தியில், இந்திய அரசியல் வர்க்கத்தில் நிலவும் உள்ளார்ந்த ஒத்திசைவை உணர்வது கடினமாக இருக்கலாம். மாவோயிஸ்டுகள்தான் மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அறிவித்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்காக இருக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்துவது அமித் ஷாதான். சல்வா ஜூடும் அமைப்பும் சிறப்புக் காவல் அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

ஷாவும் ப. சிதம்பரமும் ஒரே தரப்பில் நிற்கும் பிரச்சினை இது. ஆர்எஸ்எஸ்ஸும் காங்கிரஸும் ஒன்றுபடும் புள்ளியும் இதுதான். 

குடியரசை தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுப்படுத்தக்கூடிய நீதிக்கான போராட்டம் அதன் செயல்திறனை இழக்கிறது. குடியரசின் தார்மீக இழை இங்கே மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, இவ்வளவு ஆழமான தார்மீக நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்திலிருந்து இந்திய நாடாளுமன்றம் பின்வாங்குவதில் ஆச்சரியமில்லை.

இந்த வேலை முடிந்தவரை அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற புரிதல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே நாடாளுமன்றம் இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் முழு நம்பிக்கையுடனும் இவ்விஷயத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்னும் ஏற்பாடு மறைமுகமாக நடந்திருப்பதாகத் தெரிகிறது.

நீதித்துறை என்ன செய்கிறது? bastar killings Indian Democracy

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்கூட பஸ்தரில் செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால் நீதிமன்றம் அந்த முற்போக்கான தீர்ப்புகளை வழங்குகிறது. ஏனென்றால் எதுவும் நடக்காது என்று அது உறுதியாக நம்புகிறது.

எனவே, நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று துறைகளும் இதில் ஒன்றுதான். 

இந்தக் கொலைகளுக்கு எந்த ஆவணப் பதிவும் இருக்காது, அரசாங்கப் பதிவும் இருக்காது. அவை குறித்து எந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நடைபெறாது. நாட்டில் நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உள்துறை அமைச்சர் தீவிரமாகச் செயல்பட்டபோதிலும், யாரும் எழுத்துப்பூர்வமான கட்டளை அல்லது சுற்றறிக்கை வழங்கியதற்கான எந்தப் பதிவும் இருக்காது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், வெளிப்படையாக அறிவிக்காமல், ஒரு ஆவணப் பதிவும் இல்லாமல், பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ நடத்தியது. 1971இல் இந்திரா காந்தி உத்தரவிட்ட ‘ஆபரேஷன் ஸ்டீப்பிள்சேஸ்’ என்னும் நடவடிக்கையும் இப்படித்தான் நடந்தது. 

2002 குஜராத் கலவரம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் அல்லது நெல்லியில் நடந்த கொலைகளில் அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆவணத் தடயங்களைக் கண்டறியும் முயற்சிகளில் எந்த அளவுக்குப் பலரும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பஸ்தர் படுகொலைகள் தொடர்பான மௌனம் பெரிய முரண்பாடாக உள்ளது. கலவரம் நடக்கும்போது உத்தரவுகள் எங்கிருந்து யாருக்குப் போகின்றன என்பதையெல்லாம் கண்டறிந்து எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தின. பஸ்தர் படுகொலைகள் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. 

இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பஸ்தரில் அரசு நடவடிக்கை அனிச்சைச் செயல்போன்றது. எந்த விவாதமும் தேவையில்லை. எந்த மெனக்கெடலும் தேவையில்லை. பஸ்தாரில் அரசு என்ன செய்கிறதோ அது தானாகவே நடக்கும் வகையில் இந்தச் செயல்முறை திட்டமிடப்பட்டுள்ளது. எதுவும் அதற்குக் குறுக்கே வர முடியாது.

எந்த விவாதமும், பரிசீலனையும் தேவையில்லாத இப்படிப்பட்ட நடவடிக்கையைத் தூண்டும் எதிரி எப்படிப்பட்டவர்? இந்தியக் குடியரசின் தன்மை, ஜனநாயகம் என்பது பற்றிய இந்தியாவின் கருத்து ஆகியவை பற்றி இது நமக்கு என்ன சொல்கிறது? எந்த வகையான அச்சத்திற்கு எதிராக ஒவ்வொரு முறையும் அவ்வளவு கச்சிதமாக இத்தகைய எதிர்வினையை அது செயல்படுத்துகிறது?

பஸ்தரில் நடந்த கொலைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், இந்திய ஜனநாயகம் தனது எதிரியைப் பற்றிய ரகசியப் புரிதலைக் கொண்டுள்ளது. இந்தப் புரிதலே இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிறது.

இந்திய ஜனநாயகத்தைப் பெரிய அச்சமொன்று பீடித்திருப்பதாகத் தெரிகிறது. அரசியலமைப்பின் முகவுரை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய இந்தியக் குடியரசை ஒன்றிணைக்கும் விழுமியங்களை அறிவிக்கிறது அல்லது உறுதியளிக்கிறது. இந்த விழுமியகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இந்தக் குடியரசிற்குள் நடக்கிறது. யார் உண்மையில் ஜனநாயக ரீதியான இந்தியா என்னும் கருத்தை ஆதரிக்கிறார்கள், யார் ஆதரிக்கவில்லை என்னும் விவாதம் நடக்கிறது. அம்பேத்கரின் லட்சிய நோக்கிற்கு யார் விசுவாசமாக இருக்கிறார்கள், யார் விசுவாசமாக இல்லை என்னும் விவாதமும் நடக்கிறது. ஆனால் பஸ்தர் படுகொலைகள் பற்றி விவாதம் நடப்பதில்லை. பொது எதிரி குறித்த அச்சமே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த வேறுபட்ட சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டுவதற்கு நிர்ப்பந்தப்படுத்தும் அச்சமாக இருக்கலாம். 

மௌனமாக வேடிக்கை பார்க்கும் நிலை

இது இந்தியா என்னும் அமைப்பின் உள்ளார்ந்த ஒத்திசைவையும் ஒற்றுமையையும் விளக்குகிறது. சொத்துரிமை கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் ஒற்றுமை , 1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் கோட்பாட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்தக் கோட்பாடு முதலாளித்துவச் சொத்துரிமைகளுக்கும் தனிநபரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கும் இடையிலான நன்கு அறியப்பட்ட ஒற்றுமையின் மீதான ஒட்டுண்ணிபோன்றது. 

சுதந்திரத்திற்கு முன்பே, இந்தியாவில் தாராளவாத அமைப்பு வடிவம் பெற்றபோது, இத்தகைய அச்சம் தோன்றியது. 1920களில் பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு ஆகியவை நடந்தன. அலி ராசா, “அதிகாரப்பூர்வ கம்யூனிசம்” மீரட் சதி வழக்கின்போது பிறந்தது என்பதைத் தன்னுடைய ஆய்வறிக்கை ஒன்றில் காட்டுகிறார்.

ஆழமானதொரு பொய்தான் இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் சக்தியாக இருக்கிறதா என்று கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்திய ஜனநாயகம் தன்னுடைய படுகுழியைப் பார்க்க அஞ்சுகிறது. நீங்கள் படுகுழியை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தால், படுகுழி உங்களைத் திரும்பிப் பார்க்கத் தொடங்குகிறது என்று நீட்சே எழுதினார். பார்க்க மறுப்பது யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளவோ ​​பேசவோ மறுப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒருநாள் நீங்கள் கண்ணாடியில் உங்கள் நிஜ உருவத்தைப் பார்த்துவிடுவீர்கள் என்ற அச்சம் உங்களுக்கு உள்ளது. இந்த அச்சம்தான் பஸ்தரின் நடக்கும் படுகொலைகளை அனைத்துத் தரப்பினரும் எல்லா அரசியல் கட்சிகளும் மௌனமாக வேடிக்கை பார்க்கும் நிலையை உருவாக்குகிறது.

சரோஜ் கிரி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் ஆசிரியர். பெருநிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்றத்திலும் (FACAM) செயலாற்றிவருகிறார்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா bastar killings Indian Democracy

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share