தென் மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பக்கத்திலிருந்து தான் கிளம்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் தென் மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் புறப்பட வேண்டும் என்று கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தான் விண்ணப்பிக்க முடியும்.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன், மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்கலாம்’ என உத்தரவிட்டார்.
மேலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்து இயக்க உரிமம் வழங்கிய நிலையில், அதை தடுக்க முடியாது எனவும், தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.
2026 ஜனவரி மாதம் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், போரூர் சுங்கச்சாவடி அல்லது சூரப்பேடு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குவதைப் போல, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள இடத்தையும் பயன்படுத்துவது என எடுக்கப்பட்ட முடிவை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்
