தணல் – விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

atharva thanal movie review sep 12

’டெம்ப்ளேட்’டுக்குள் மாட்டிய ‘ஆக்‌ஷன்’ கதை!

தமிழ் திரையுலகில் தற்போதிருக்கும் நாயகர்களில் ‘அண்டர்ரேட்டட்’ ஆகக் கருதப்படுபவர்களில் ஒருவர் அதர்வா. இரண்டாவது படமான ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ தொடங்கி ‘இரும்பு குதிரை’, ‘ஈட்டி’, ‘கணிதன்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘100’, ‘ட்ரிக்கர்’ என்று வரிசையாகப் பல ‘ஆக்‌ஷன்’ கதைகளில் நடித்தாலும், உரிய வரவேற்பு கிடைக்காத நிலையை எதிர்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் ‘டிஎன்ஏ’ வெளியாகிப் பெருங்கவனத்தைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, முழுமையாகத் தயாராகிச் சில காலம் காத்திருப்பில் இருந்த ‘தணல்’ இப்போது வெளியாகியிருக்கிறது. ரவீந்திர மாதவா எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். லாவண்யா திரிபாதி இதில் நாயகியாக நடித்துள்ளார்.

ADVERTISEMENT

’தணல்’ படமாவது அதர்வாவை ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக பக்காவாக முன்னிறுத்தியிருக்கிறதா?

’ஆக்‌ஷன்’ கதைக்களம்!

நாயகன் வீர தீரப் பராக்கிரமங்களில் ஈடுபடுவதற்கான காரணங்கள் மிகச்சீரிய வகையில் சில கதைகளில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அப்படியொரு கதையாக அமைந்திருக்கிறது ‘தணல்’.

ADVERTISEMENT

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சில இளைஞர்களைச் சுட்டுக் கொல்கின்றனர் போலீசார். இந்த சம்பவம் 2016இல் நடக்கிறது.

சில ஆண்டுகள் கழித்து, அந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரை கொல்கிறார் ஒரு நபர். ’பழிக்குப் பழி’ வாங்கும் வெறியில் அவர் (அஸ்வின்) இருப்பது நன்றாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

சரியாக ஓராண்டு கழித்து, மரணமடைந்த கான்ஸ்டபிள்கள் இருந்த காவல் நிலையத்திற்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் பணியில் சேர்கின்றனர்.

அவர்கள் அனைவரும் ஒரே நாளில் அங்கு வருகின்றனர். காலை முதல் இரவு வரை ‘பணியில் சேர்ந்த கடிதம்’ பெறக் காத்திருக்கின்றனர். ஆனால், ‘இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் போயிருக்கார்’ என்று சொல்லி ஒரு சப் இன்ஸ்பெக்டர் அவர்களைக் காக்க வைக்கிறார்.

அன்றிரவு வீடு செல்ல நினைக்கும் அந்த ஆறு புதிய கான்ஸ்டபிள்களையும் ‘ரவுண்ட்ஸ் போய்ட்டு வாங்க’ என்று அனுப்புகிறார் சப் இன்ஸ்பெக்டர். அவர்களும் அவ்வாறே செல்கின்றனர்.

ஆள் அரவமற்ற ஒரு சாலையில் பாதாளச் சாக்கடை தடுப்பைத் திறந்து, ஒரு நபர் வெளியே வருவதை அவர்கள் பார்க்கின்றனர். உடனே, ‘இந்த நேரத்துல இவன் என்ன பண்றான்’ என்று அவரைத் துரத்துகின்றனர்.

அந்த நபர், ஒரு குடிசைப்பகுதிக்குள் நுழைகிறார். அங்கு வசித்தவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகச் சொல்லி மக்களை அரசு அப்புறப்படுத்தியதால், அப்பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது. வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன.

தாங்கள் துரத்தி வந்த நபரைத் தேடிச் செல்லும் அந்த கான்ஸ்டபிள்கள், ஒரு இடத்தில் மூன்று நபரைப் பார்க்கின்றனர். சத்தம் கேட்டதும், மற்ற இருவரையும் போகச் சொல்கிறார் ஒரு நபர் (அஸ்வின்).

ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் அந்த நபரை நோக்கி முன்னோக்கிச் செல்கிறார். அவரிடம் தோரணையாகப் பேசுகிறார். அடுத்த நொடியே, அந்த கான்ஸ்டபிளை வெட்டிச் சாய்க்கிறார் அந்த நபர்.

அடுத்த நொடி, மீதியிருக்கும் ஐந்து பேரையும் பயம் பிடித்தாட்டுகிறது. யார் அந்த நபர் என்று அவர்கள் யோசிக்கும்போதுதான், அன்றிரவு ஏதோ ஒரு கொடிய சம்பவத்தை நிகழ்த்த அவர்கள் தயாராவது தெரிகிறது.

அந்த நபர் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்? பாதாள சாக்கடையைப் பயன்படுத்தி அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்? அதனால் என்ன விளைவு நிகழும்?

தப்பித்து ஓடும் அந்த ஐந்து பேரில் நாயகனும் (அதர்வா) அவரது நண்பர்கள் இருவரும் இருக்கின்றனர்.

எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும் அந்த குடிசைப்பகுதியை விட்டு அவர்கள் தப்பித்தார்களா? அந்த நபர் செய்ய நினைக்கிற காரியம் என்ன என்று அறிந்தார்களா? அந்த குற்றத்தைத் தடுக்க முனைந்தார்களா என்று சொல்கிறது ‘தணல்’ படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், இப்படியொரு கதை கிடைத்தால் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் நெட்டி முறித்து, அந்த படைப்பாளியைச் சுவீகரித்துக் கொள்வார்கள். காரணம், பிரமாண்டத்தைத் திரையில் காட்டத் தேவையான அத்தனை விஷயங்களும் இக்கதையில் இருக்கிறது.

‘தணல்’ படத்திலும் அது ஓரளவுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நாயகன் என்பவர் யார்? எப்படி அவர் முன்பிருந்தார்? இப்போது எப்படி இருக்கிறார் என்பதை ‘விலாவாரியாக’ விளக்கினால் தானே, கதையோடு ரசிகர்கள் ஒன்றுவார்கள் என்று நினைத்துச் சில காட்சிகளை இணைத்திருக்கிறார் இயக்குனர் ரவீந்திர மாதவா.

அதுவே படத்தின் பலவீனமாக உள்ளது. அக்காட்சிகளில் குறை இல்லை என்றபோதும், திரைக்கதையின் மையத்திற்கும் அவற்றுக்குமான இடைவெளி கணிசமாக இருக்கிறது. நல்லவேளையாக, படத்தின் பின்பாதியில் அது போன்ற இடையூறுகள் இல்லை.

பரபரப்புக்குப் பஞ்சமில்லை..!

அதர்வா நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவற்றில் காவல் துறை சார்ந்த பாத்திரங்களை ஏற்றிருக்கிறார். அது அவருக்குப் பொருத்தமாகவும் உள்ளது. ‘தணல்’ படத்திலும் அவர் நல்லதொரு ‘ஆக்‌ஷன் ஹீரோ’வாக மிளிர்ந்திருக்கிறார்.

நாயகி லாவண்யா திரிபாதிக்கு இதில் இளமை கொஞ்சுகிற, அதே நேரத்தில் ‘மெச்சூர்டு கேர்ள்’ பாத்திரம். ஆனால், அந்த காட்சிகள் ஈர்க்கும்படியாக இல்லை.

அதனால், அதர்வா மற்றும் அவர் சம்பந்தப்பட்ட ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் பெரிய ஈர்ப்பைத் தரவில்லை.

வில்லனாக வரும் அஸ்வினுக்கு இதில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆனால், தான் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான காரணத்தை அவர் விளக்கும் இடம் திரைக்கதையில் சட்டென்று கடந்து போவதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

‘காவிரி நதிநீர் பிரச்சனை’யைப் பிரதியெடுத்தாற்போல, அந்த காட்சிகள் இருப்பதைப் பாமர ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள்.

நாயகனின் நண்பர்களாக ஷரா, பரத் மற்றும் புதுமுகம் சர்வா வந்து போகின்றனர். அந்த காட்சிகளில் பிழை இல்லை; என்றபோதும், மையக்கதை ஓட்டத்தோடு அவை கலக்க முடிவதில்லை.

அழகம்பெருமாள், சோனியா, லட்சுமி பிரியா சந்திரமௌலி உட்படச் சிலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

செல்வா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘வெட்டி எறியப்பட்டிருப்பது’ திரையில் தெளிவாகத் தெரிகிறது. காரணம் படக்குழுவினருக்கே வெளிச்சம்.

படத்தின் பெரும்பகுதி இரவு நேரத்தில் நடப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆளில்லா குடிசைப்பகுதியில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப கலை இயக்குனர் அய்யப்பன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பணி அமைந்துள்ளன.

முடிந்தவரை திரையில் ‘படம்’ பரபரவென்று நகருமாறு தொகுத்திருக்கிறார் கலைவாணன். அதனால் பரபரப்புக்குப் பஞ்சமில்லை.  

அதேநேரத்தில், திருப்தியான ‘ஆக்‌ஷன் படம்’ பார்த்த உணர்வு ஏற்படுகிறதா என்று சாதாரண ரசிகனின் பார்வையிலும் திரையை அவர் உற்றுநோக்கியிருக்கலாம்.

டிஐ அம்சம் இப்படத்தில் செம்மையாகக் கையாளப்பட்டிருக்கிறது. இதர தொழில்நுட்பக் கலைஞர்களும் கிட்டத்தட்ட அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டிருப்பது தெரிகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் திரைக்கதையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தலைகாட்டுகின்றன. அவற்றை விடப் பின்னணி இசையில் அவர் கொட்டியிருக்கும் உழைப்பு அதிகம். அதற்கான பலனாக, காட்சிகளில் நிறைந்திருக்கிற பரபரப்பு நம்மைச் சட்டென்று பற்றிக் கொள்கிறது.

இக்கதையை எழுதி இயக்கியிருக்கும் ரவீந்திர மாதவா, நிறைய அடுக்குகளைக் கொண்ட ஒரு திரைக்கதையைப் படைக்க முயன்றிருக்கிறார். அதில் ஓரளவுக்குத்தான் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது எனலாம்.

மையக்கருவை வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றிச் சில காட்சிகளை, காட்சிக் கோர்வைகளை உருவாக்கியதில் அவரது கற்பனையைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், அதனை வழமையான ‘டெம்ப்ளேட்’டுக்குள் அடைக்க முற்பட்டதால் மூச்சு திணறியிருக்கிறது இந்த ஆக்‌ஷன் கதை.

நாயகன் பற்றிய விவரணைகளைச் சுத்தமாகத் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால், கிளைமேக்ஸில் நாயகன் பற்றி வில்லன் சொல்கிற பிளாஷ்பேக்கும் முன்பாதியில் வருகிற காட்சிகளும் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. அதுவே இப்படத்தில் இருக்கும் லாஜிக் மீறல்களில் தலையாயது. ‘கமர்ஷியல் ஆக்‌ஷன் படம்’ என்ற நோக்கில் இதர மீறல்களைப் புறந்தள்ளிவிடலாம்.

வில்லனாக வரும் அஸ்வின் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளை விரிவாக உருவாக்கி, பின்னர் படத்தொகுப்பு மேஜையில் அவற்றை இயக்குனர் வீசியெறிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

என்ன நடந்திருந்தாலும், தற்போது திரையில் நாம் பார்க்கிற ‘தணல்’ முழுமையற்றதாக உள்ளது. அதற்கான முழுப்பொறுப்பும் இயக்குனருடையது தான்.

இப்படம் வெளிநாட்டுப் படங்களின் தழுவலாக உள்ளதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இந்த கதையைச் சற்றே செப்பனிட்டு மெருகேற்றினால், இது சிறப்பானதொரு ஆக்‌ஷன் படத்திற்கான உள்ளடக்கம் தானாக உருவாகும்.

இதே கதையை வேறு மொழிகளில் ரவீந்திர மாதவா உருவாக்குகிற பட்சத்தில், அந்த மாற்றங்கள் நல்லதொரு திரையனுபவத்தைத் தரக்கூடும். வேறென்ன சொல்ல..?!

Photo of author
uthay Padagalingam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share