சிஎம் சார் நீங்கள் சர்வாதிகாரியாக மாறவெல்லாம் தேவையில்லை; நீங்கள் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறீர்கள். தயவு செய்து முடிந்தால் ஜனநாயக வாதியாக மாற முயற்சி செய்யுங்கள் என்று அருண் ராஜ் ஐஆர்எஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேசுகையில், ” பவானி ஆறும், காவிரி ஆறும் ஓடும் இந்த கொங்கு மண்டலத்தின் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார் ஜனநாயகன் விஜய். அண்ணன் செங்கோட்டையன் எப்போது தவெகவில் சேர்ந்தாரோ அப்போதே அவருக்கு 20 வயது கம்மியா ஆகிவிட்டது. என்ன ஸ்பீடு.. கூட நடக்கவே முடியவில்லை.
விஜய் அரசியலுக்கு வந்த ஒரே நோக்கம்
நம் தலைவரும் காவிரி ஆறு மாதிரி தான். ஆறுக்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் தெரியாமல் எல்லா வயலுக்கும் பாயும். அதே போல் நமது தலைவரும் ஏழை பணக்காரர் வித்தியாசம் பார்க்காமல், சாதி, மதம், இனம் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரே தலைவர் நம் தலைவர். அவர்கள் நம் தலைவர் அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானவர். அதனால் தான் நான் உங்களைப் பார்த்து அடுத்த முதலமைச்சராக யார் வரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.( அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் விஜய் என்று முழக்கமிட்டனர்) ஏன் நமது வெற்றி தலைவர் முதலமைச்சராக வரவேண்டும்? பணம் பதவி, புகழுக்காக நமது தலைவர் அரசியலுக்கு வந்தாரா ? இதை எல்லாம் போதும் போதும் என்று திகட்டும் அளவிற்கு அவர் பார்த்து விட்டார். அவரோடு நெருங்கி பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். அவர் வருவதற்கான ஒரே நோக்கம் தனக்கு பணம், பெயர், புகழ் எல்லாம் கொடுத்த இந்த தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான்.
அந்த நம்பிக்கை என்னிடம் ஆழமாக இருந்ததால் தான் அண்ணன் சொன்னது போல் நான் கஷ்டப்பட்டு படித்த ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்து விட்டு அண்ணன் பக்கத்தில் நிற்கிறேன். அந்த நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா என்றார்.
விஜய் வருகிறார் நல்லது செய்யப் போகிறார் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இருக்கிறது. நம்மைப் பார்த்து ரசிகர் கூட்டம் என்று சொல்கின்றனர். நம்முடன் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு காலத்தில் தீவிர எம்ஜிஆர் ரசிகர். இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் மதிக்கும் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார் இல்லையா?
அதே போல் இந்த ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து எத்தனை செங்கோட்டையன்கள் வரப்போகிறார் என்பதை பாருங்கள். ஆனால் ஒரு ரசிகர் கூட்டமாக கூட இருந்து விடலாம். ஆனால் இந்த திமுகவை போல் கொள்ளை அடிக்கிற கூட்டமாக, சுயநல கூட்டமாக மட்டும் இருக்கவே கூடாது.
திமுகவின் நிலை
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த இந்த ஈரோட்டு மண்ணில் இதை பேசுவது பொருத்தமாக இருக்கும். 1916 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. அப்போது அதன் முக்கியமான நோக்கம் மூன்று சதவீதம் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கால்வாசி அரசு பணியிடங்களை ஆக்கிரமித்து இருந்தனர்.
நீதிக் கட்சியின் கொள்கையை கடைப்பிடிப்பதாக சொல்லும் இன்றைய திமுக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். 3% எல்லாம் இல்லை ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தில் பிறந்து விட்டால் ஆட்சி, பணம், அதிகாரம் எல்லாமே கிடைத்துவிடும். அப்படி இல்லை என்றால் கடைசிவரை திமுகவினுடைய தொண்டனாக உழைத்து உழைத்து கடைசி வரை பதவியே கிடைக்காமல் சாக வேண்டியது தான். இதுதான் இன்றைய உண்மையான திமுகவின் நிலை. குறிப்பாக அந்த குடும்பத்திற்கு சமூக நீதியை பற்றி பேசும் எந்த தகுதியுமே கிடையாது. தப்பு செய்தால் நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று சிஎம் பலமுறை சொல்லி உள்ளார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நமது சி.எம் அவர்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன? சர்வாதிகார ஆட்சி என்றால் என்ன? என்பதே தெரியவில்லை.
ஒரு தவறு நடந்தால் தப்பு செய்தவர்களை கண்டறிந்து தீர விசாரித்து அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதுதான் சரியான ஜனநாயக நடைமுறை. ஆனால் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால் அவர்களை கைது செய்து உள்ளே வைப்பதும் உண்மையான குற்றவாளிகள் வெளியில் சுற்றுவதும் சர்வாதிகார ஆட்சியில் தான் நடக்கும்.
சிஎம் சார் நீங்கள் சர்வாதிகாரியாக மாறவெல்லாம் தேவையில்லை; நீங்கள் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறீர்கள். தயவு செய்து முடிந்தால் ஜனநாயக வாதியாக மாற முயற்சி செய்யுங்கள். ஆட்சி நன்றாக நடத்துகிறார்களோ.. இல்லையோ.. விளம்பரத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை.
யார் அந்த சீமா அகர்வால்
சமீபத்தில் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற ஒரு விழா நடத்தினார்கள். அதில் ஒரு மூத்த பெண் போலீஸ் அதிகாரி வந்தார் அவர்கள் யார் என்று சிஎம் சாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் சொல்கிறேன். சீமா அகர்வால் ஐபிஎஸ் மேடம். தமிழகத்தில் டிஜிபியாக யுபிஎஸ்சி பரிந்துரைத்த மூன்று பேரில் முதல் இடத்தில் இருந்தவர் இந்த சீமா அகர்வால் ஐபிஎஸ். சிஎம் அவர்களே நீங்கள் உண்மையாகவே தமிழகப் பெண்களை மதிப்பதாக இருந்தால் தமிழகப் பெண்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அந்த அதிகாரியை நீங்கள் நியமித்திருக்க வேண்டும். தவற விட்டுவிட்டீர்கள். கண்டிப்பாக தமிழக பெண்கள் உங்களை நம்பவே மாட்டார்கள் .
இம்போசிஷன் எழுதும் சிம்
இவ்வளவு மோசமான ஆட்சியை செய்துவிட்டு தேர்தல் நேரத்தில் மக்கள் வரிப்பணத்தில் அந்தத் திட்டம்.. இந்தத் திட்டம் என்று சொல்லி ஸ்டாலின் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது சரியாக படிக்காத, ஹோம் வொர்க் செய்யாத பசங்களை வாத்தியார் இம்போசிஷன் எழுதச் சொல்வது போல் உள்ளது. 4 1/2 வருஷம் ஒழுங்காக ஆட்சி செய்யாத திமுக கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் இந்தத் திட்டம் என்று சொல்லி சிஎம் ஸ்டாலின் இம்போசிஷன் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த இம்போசிசனை எழுத வைத்த வாத்தியார் நம்ம தலைவர்.
கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஒரு நல்ல ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று நமது தலைவர் உங்களுக்கு கிளாஸ் எடுக்கப் போகிறார். அப்போதாவது பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
பாசிச பாஜக ஏதோ ஒரு பிரச்சனையை செய்து கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றி VBGRAMG என்று கொண்டு வருகிறார்கள். இதில் மாநிலத்தில் நிதி பகிர்வை குறைத்துள்ளார்கள். அதுவெல்லாம் கூட அடுத்த விஷயம். நான் கேட்கிறேன் இந்தியாவில் அனைத்து மொழிகள் பேசும் மக்கள் இருக்கிறார்கள் எப்படி ஒரு ஹிந்தி பெயரை வைக்கிறீர்கள்.. சமஸ்கிருத பெயர்களை வைத்தீர்கள். தெளிவாக ஒன்று புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு கூட்டு குடும்பம் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஒரு இணைப்பு மொழி அதை நீங்கள் புறக்கணிக்க கூடாது. புறக்கணிக்கவும் விடமாட்டோம்.
மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
மக்களை வைத்து கோடி கணக்காக சம்பாதிக்கிற தலைவரா? அல்லது மக்களுக்காக கோடிகளை விட்டுப் போன தலைவரா? யார் வேண்டும். ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடத்தும் தலைவரா அல்லது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் தன் குடும்பமாக நினைக்கும் தலைவரா? ஆட்சி செய்யும் போது போட்டோ சூட் நடத்தி நடிக்கும் முதல்வரா? அல்லது மக்களுக்காக சேவை செய்ய துடிக்கும் முதல்வரா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வீசும் புயலை வேலி போட யாராலும் முடியாது அதுபோல் நம் தலைவர் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
