ஈரோட்டில் இன்று (டிசம்பர் 18) நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க காலை முதலே தவெக தொண்டர்கள், இரும்பு தடுப்புகளுக்குள் நின்று கொண்டிருக்கின்றனர்.
ஈரோடு பெருந்துறை சரளையில் விஜய் பிரசார கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிற்பகல் 1 மணியளவில் விஜய் பேச இருக்கிறார்.
இதில் பங்கேற்பதற்காக காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் விஜய் புறப்பட்டார். ஆனால் தவெக தொண்டர்களோ அதிகாலை முதலே விஜய் பிரசார கூட்டம் நடைபெறும் இடத்தில் குவிந்துள்ளனர்.
இந்த பிரசார கூட்ட இடம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இரும்பு தடுப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளுக்குள் தவெக தொண்டர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கே பந்தல் எதுவும் போடப்படவில்லை; நாற்காலிகளும் போடவில்லை. இதனால் அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் கால்கடுக்க நின்று வருகின்றனர். பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் காலை முதலே இரும்பு தடுப்புகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
