தமிழகத்தில் ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என தவெக தலைவர் விஜய் , தமிழ்நாடை அரசை விமர்சித்து பேசி வருகிறார். ஆனால் விஜய் முன்னிலையிலேயே ”பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு” என ஆற்காடு இளவரசர் நவாப்ஜாதா முகமது ஆசிப் அலி (Nawabzada Mohammed Asif Ali) பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று டிசம்பர் 22-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஆற்காடு இளவரசர் நவாப்ஜாதா முகமது ஆசிப் அலி பேசியதாவது: விஜய்கூட ஒரே மேடையில் இருப்பது சந்தோஷம். நான் ஒரு இஸ்லாமியன். முஸ்லிம். என் மகனின் பெயர் ஜீசஸ்- ஈசா. நானும் விஜய்யும் ஒரே மாதிரியான உடையில் வந்திருப்பது மகிழ்ச்சி.
முதலாளிக்கும் தலைவர் என்பவருக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாளி என்பவர் பெரிய நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்திருப்பவர். ஆனால் தலைவர் என்பவர், மக்களை வழிநடத்தக் கூடியவர். எல்லோரும் அமர்ந்திருக்கக் கூடிய நாற்காலியில்தான் விஜய்யும் அமர்ந்திருக்கிறார்.

விஜய் மிகப் பெரிய நடிகர். பணம், புகழ்,பெருமை எல்லாமும் விஜய்க்கு இருக்கிறது. ஆனாலும் தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக விஜய் முன்வந்துள்ளார். நமது தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய இளந்தலைவர்கள் தேவை.
முஸ்லிம், ஹிந்து, கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் இருக்கட்டும்.. அனைத்து மதங்களும் வெவ்வேறானவை. ஆனால் மனிதாபிமானம் என்பதுதான் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. அதை நாம் பின்பற்ற வேண்டும்; அதை கற்றுத் தர வேண்டும்.
நான் கிறிஸ்தவப் பள்ளியில் படித்தேன். கிறிஸ்தவ கல்லூரியில் படித்தேன். மிகவும் அமைதியான மதங்களில் ஒன்று கிறிஸ்துவம்.
எங்களுடைய குடும்பத்தை நவாப் ஆப் ஆர்க்காடு என்று சொல்வார்கள். எங்களுடைய ஆட்சியில் 340 இந்து கோவில்களுக்கு இடம் கொடுத்தனர். 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்களுக்கு இடம் கொடுத்தனர்.
Gen Z இளைஞர்கள், மிகப் பெரிய எண்ணிக்கையில் விஜய்யை நேசிக்கின்றனர். விஜய்க்கும் அவரது கட்சி, குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நமது தமிழ்நாடு மாநிலம், ஒற்றுமைக்கு மிக முன்னுதாரணமான திகழ்கிறது. . இங்கே முஸ்லிம், இந்து, கிறிஸ்துவர் என பாகுபாடு இல்லாமல் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. இங்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவிலேயே 2-வது மிகப் பெரிய பொருளாதார வலிமையை கொண்ட மாநிலம் நமது தமிழ்நாடு. விஜய் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
இவ்வாறு ஆற்காடு இளவரசர்- திவான்
ஈரோட்டில் விஜய் பேசியது என்ன?
முன்னதாக ஈரோட்டில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. சட்டம் ஒழுங்கு சரியா இல்லைன்னு சொன்னா.. தமிழ்நாட்லதான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமா இருக்குதாம். நீங்க சொல்லுங்க மக்களே! பெண்கள் பாதுகாப்பு இருக்கு? சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு? அவங்க சொல்றது உண்மையா? அவங்க சொல்றதை ஏத்துக்கறீங்களா?… சொல்லுங்க…கேட்குதா சார்?… இதுதான் ரியாலிட்டி.. இதுதான் நிஜம்” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஆற்காடு நவாப்கள்?
முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் வரிவசூல் செய்ய நியமிக்கப்பட்டவர் ஆற்காடு நவாப்கள் எனப்படும் கருநாடக நவாப்கள்.
கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய பகுதிகளை ஆட்சி செய்த ஆட்சியாளர்களாகினர்.
வடதமிழ்நாட்டில் உள்ள ஆற்காட்டை தலைமை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வரிவசூல் செய்ய உரிமை வழங்கியதன் மூலம் ஆங்கிலேயர் பேரரசு அமையக் காரணமானவர்கள் ஆற்காடு நவாப்கள். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்காடு இளவரசர்கள் என இப்போதும் அழைக்கப்படுகின்றனர்.
