’பிரேமம்’ படத்தில் மேரி எனும் பாத்திரத்தில் தோன்றி, தனது சுருள்முடி அழகு மூலம் ரசிகர்களை வசீகரித்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத் திரையுலகில் அறிமுகம் ஆனாலும், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன் எனச் சில படங்களில் தலைகாட்டியவர் ‘ட்ராகன்’ வழியே பிரபலம் ஆனார்.
அனுபமா நடித்துள்ள ‘பரதா’ எனும் தெலுங்கு, மலையாளம் ‘பைலிங்குவல்’ வரும் 22ஆம் தேதியன்று ‘ரிலீஸ்’ ஆகிறது. ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ சாயலில் தென்படுகிற இப்படத்தில் அவரோடு தர்ஷனா ராஜேந்திரன், சங்கீதா கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
முகத்தைக் காட்டாத அளவுக்கு முக்காடு இட்டபடி வலம் வருகிற ஒரு வழக்கத்தைச் சாடுவதாக, பெண்களின் சுயசார்பு செயல்பாடுகளை ஊக்குவிப்பதாக, இக்கதை அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் புரோமோஷன் பேட்டிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அனுபமாவிடம் இதற்கு முன் அவர் தெலுங்கில் நடித்த ‘டில்லு ஸ்கொயர்’ பட அனுபவம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் படுகிளாமராக தோன்றி நாயகன் சித்து ஜோனலகடா உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்ததுடன் வில்லி பாத்திரத்தையும் ஏற்றிருந்தார்.
“அந்தப் படத்தில் நடித்த அனுபவம் அவ்வளவு சுமூகமானதாக இல்லை. ரொம்ப மோசமாக, ஏமாற்றமாக உணர்ந்தேன். அந்த பாத்திரத்தில் நடிக்கிற நம்பிக்கையே என்னிடத்தில் இல்லை. அப்படியிருந்தும், ரசிகர்கள் என்னை அந்த பாத்திரமாக உணர வேண்டுமென்று மெனக்கெட்டேன்.
ஆனாலும் அதில் நான் அணிந்த ஆடைகள் மனதுக்குப் பிடித்த வகையில் இல்லை. சில ‘போல்டான’ காட்சிகள் படம்பிடிக்கப்பட்டபோது நான் நல்ல மனநிலையில் இல்லை” என்று ‘டில்லு ஸ்கொயர்’ படம் பற்றிப் பதிலளித்தார்.
அதோடு நில்லாமல், ‘அந்த மாதிரி படங்களில் இனி நடிக்க மாட்டேன்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேவையில்லாமல் இப்போது எதற்கு அந்தப் படம் பற்றி ‘பரதா’ புரோமோஷனில் பேசுகிறார் என்ற கேள்வி சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகியிருக்கிறது. அதனை முன்வைத்து சில ரசிகர்கள் அனுபமாவை ‘ட்ரோல்’ செய்தும் வருகின்றனர்.
