முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “தற்போதைய வழக்கில்,செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்தும் வகையில் எந்த ஆதாரங்களும் இல்லை. டாஸ்மாக் அலுவலகத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இது தொடர்பாக உச்ச, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது” என்று வாதங்களை முன் வைத்தார்.
மேலும் அவர், ”டாஸ்மாக் என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு. அதன் டெண்டர்களில் அமைச்சராக இருப்பவருக்கு எந்த பங்கும் இருக்காது. பாட்டில் விநியோகம் நிறுவனங்கள் மட்டுமே சதியில் ஈடுபட்டு பணம் பெற்றுள்ளதால் செந்தில் பாலாஜி மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது சரியானது அல்ல” என்றும் தெரிவித்தார்.
இதற்கு அரசு சார்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை என்பது டாஸ்மாக் நிறுவனத்திற்கு தான். செந்தில் பாலாஜி மற்றும் இதர நபர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. தற்போது கண்டறியப்பட்டுள்ள 17 கோடி ரூபாய் என்பது பனிமலையின் நுனியைப் போல வெறும் ஆரம்பம் மட்டும் தான். அரசுக்கு நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதற்காக நிறைய ஆதாரங்கள் இருப்பதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை செய்வது மிகவும் அவசியம்”என்று கூறினார்.
அரசு தரப்பு வாதத்தை கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரணை செய்வது அவசியம் என கருதுவதால் முன் ஜாமின் வழங்க விரும்பவில்லை என்று கூறி செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
