டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று (ஜூலை 29) சோதனை மேற்கொண்டது.
ஜூலை 28ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து 29ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. உடனடியாக செந்தில் பாலாஜியும் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (ஜூலை 30) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் காவலில் வைத்து விசாரிப்பது அவசியம் என்று கூறினார்.
முன்ஜாமின் மறுப்பு காரணமாக செந்தில் பாலாஜி இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.
ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் பெற்று, தினம் தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜியும் அவரது தம்பி அசோக்குமாரும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இன்று அசோக் குமார் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜி வரவில்லை.
அவர் விரைவில் டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் தனது சட்ட வல்லுனர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன
