தேஜகூ வெற்றி பெறவும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதற்கும் பாஜகவினர் உயிரை கொடுத்து உழைப்போம் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக, பாஜக, திமுக, தவெக, நாதக என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதற்கான கூட்டங்கள், பிரச்சார பொதுக்கூட்டம், மாநாடு, பூத் கமிட்டி கூட்டம் என அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துவிட்டது.
இந்தநிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது நமது கடமை என்று அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிமுக – பாஜகவுக்குள் பேசு பொருளான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
நேற்றிரவு (ஆகஸ்ட் 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அண்ணாமலையே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டுமென்று பேசிவிட்டார். இதுவே நாம் வலிமையாக இருப்பதற்கான எடுத்துக்காட்டு என்று ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூறுகிறார்களே?
அண்ணாமலையே சொல்லிவிட்டார் என்றில்லை. நான் இந்த கட்சியின் ஒரு தொண்டர். இது எனக்கு பெருமை. மற்ற எல்லா பதவிகளும் கட்சி கொடுப்பது. எங்கள் கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 2026ல் தேஜகூ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சென்னை பிரஸ் மீட்டில் சொல்லிவிட்டோம். எனவே, அதன்படி செயல்படுவதுதான் ஒவ்வொரு தொண்டனுக்கும் அழகு. அதைத்தான் நான் செய்கிறேன். எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் இந்த கட்சியின் கருத்து எனக்கு வேதவாக்கு. அன்று பூத் கமிட்டியில் இதை நான் சொல்லியாக வேண்டும். அத்தனை பேர் வந்திருக்கிறார்கள். 68 ஆயிரம் பூத்துகளில் ஒரு தலைவர் 12 துணை தலைவர்கள் உள்ளனர். அப்படி 68 ஆயிரம் பூத்துகளை எடுத்துக்கொண்டால் 10 லட்சம் பேர். இவர்களுக்கு தேஜகூ எதற்கு இருக்கிறது? முதல்வர் வேட்பாளர் யார்? எதற்காக வேலை செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்க வேண்டும்.
இதில் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் முடிவு செய்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துவிட்டார். அதன்பிறகு பாஜகவின் இலக்கணம் என்னவென்றால் ஓரணியாக திரண்டு நிற்க வேண்டும்.
அதேபோல பாஜகவை மாற்றாந்தாய் கட்சியாக அதிமுகவினர் பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எங்கள் தலைவர்கள் சொன்ன பிறகு தேஜகூ வெற்றி பெறுவதற்கும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதற்கும் உயிரை கொடுத்து உழைப்போம். அதை நீங்கள் பார்ப்பீர்கள்.
அதேபோல, பாஜக எங்கு நிற்கிறதோ… அங்கு வெற்றி பெற அதிமுகவும் உழைக்க வேண்டும். எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக பாஜகவுக்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்?
மதுரை கிழக்கு, மதுரை மேற்கு… அப்படியெல்லாம் சொல்கிறார்கள். எதோ ஒரு தொகுதியில் மக்களின் அன்பு எனக்கு கிடைக்கும். கட்சி தலைமை சொல்லும் இடத்தில் நிற்பேன். 2026ல் கட்சி சொல்வதை செய்வதுதான் என் வேலை.
2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் சொல்லியிருக்கிறாரே?
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி சொல்வது இயல்புதான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு தயாராகிவிட்டது. என்னை பொறுத்தவரை வாக்குப்பெட்டியில் ஓட்டுப்போட்டு மக்கள் அதை சொல்ல வேண்டும். விஜய் முயற்சி செய்யட்டும், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். சண்டை நல்லதுதான். அவருடைய கட்சி வளர்வதற்குதான் விஜய் இப்படி சொல்கிறார். நல்ல தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.
இவ்வாறு பேட்டியளித்தார்.
