காஷ்மீரின் மீது கோபத்தைக் காட்டுவது பயங்கரவாதத்திற்கான தீர்வு அல்ல!

Published On:

| By Minnambalam Desk

Anger over Kashmir is no solution to terrorism

மனோஜ் ஜோஷி Anger over Kashmir is no solution to terrorism

கடந்த புதன்கிழமை காலை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள்மீது இந்தியா நடத்திய விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் புதிய, தெளிவற்ற கட்டம் தொடங்குகிறது. 1980களிலிருந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படைவாதிகள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் உண்மையில் பாகிஸ்தான் இராணுவத்தின் பலியாடுகளாகவே இருக்கிறார்கள். இந்தியாவைச் சமநிலையற்றதாக வைத்திருப்பதற்காகவே இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். Anger over Kashmir is no solution to terrorism

இந்தியா இந்த பயங்கரவாதிகள் மீது தீர்க்கமாகத் தாக்குதல் நடத்தியது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகங்களைத் தாக்கியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இடைநிறுத்தியுள்ளது. இந்தியாவிடம் சிந்து நதியின் நீரோட்டத்தைத் தடுக்கக் கால்வாய்கள், அணைகள் போன்ற உள்கட்டமைப்பு இல்லை என்பது தெரிந்ததே, ஆனால் தற்போதுள்ள அணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தைத் தடுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு.  Anger over Kashmir is no solution to terrorism

இந்த மோதலில் முக்கிய அம்சம் காஷ்மீர். இராணுவத் தாக்குதல் விஷயத்தில் இந்தியா தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதன் நடவடிக்கைகளை எதுவும் கட்டுப்படுத்தாது. அங்கு கொள்கையை வகுத்துச் செயல்படுத்துவதற்கு அதற்கு முழு சுதந்திரம் உள்ளது.

இந்தப் பகுதியை பாகிஸ்தானின் “கழுத்து நரம்பு” என்று அதன் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் சமீபத்தில் விவரித்தார். ஜம்மு-காஷ்மீர்மீது பாகிஸ்தான் நீண்ட காலமாகவே முனைப்புடன் ஈடுபாடு காட்டிவருகிறது. அதைப் பிடிக்கக் கடந்த காலங்களில் இந்தியாமீது போர் தொடுத்துள்ளது. தற்போது ஜிஹாதி பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி அதை நிலைகுலையச் செய்து கைப்பற்ற ஒரு மறைமுகப் போரை நீண்டகாலமாக நடத்திவருகிறது. Anger over Kashmir is no solution to terrorism

பிரிவு 370ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கிய பிறகு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்ற இந்தியக் கதையாடலைச் சீர்குலைப்பதே பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஜிஹாதிகளின் தாக்குதலின் நோக்கம். 

அரசாங்கம் இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என மூன்று பயங்கரவாதிகளை (காஷ்மீரியான அடில் ஹுசைன் தோக்கர், இரண்டு பாகிஸ்தானியர்கள்) அடையாளம் கண்டுள்ளது. தோக்கர் உட்பட பத்துப் போராளிகளின் வீடுகளை அது அழித்தது. 1,500க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காகக் காவலில் வைத்திருக்கிறது. தாக்குதலை நடத்தியவர்கள் இருக்கும் இடம் குறித்து அதிகாரிகளுக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்பதையே இது குறிக்கிறது. Anger over Kashmir is no solution to terrorism

காஷ்மீரிகளின் மனநிலை Anger over Kashmir is no solution to terrorism

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் பரவலான கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரதேசமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மக்களிடையே ஒற்றுமை காணப்படுகிறது. பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் உள்ள காஷ்மீரிகள், குறிப்பாக ஸ்ரீநகர், புல்வாமா, ஷோபியன், பஹல்காம், அனந்த்நாக், பாரமுல்லா போன்ற நகரங்களில் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களையும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினார்கள். கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கச் செய்தித்தாள்கள் கருப்பு முகப்புப் பக்கங்களை வெளியிட்டன.

ஏப்ரல் 25 அன்று, ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின்போது பஹல்காம் கொலைகளைக் கண்டித்து, இறந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள். முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் ஏப்ரல் 28 அன்று அதிர்ச்சியையும் வேதனையையும் வெளிப்படுத்தி, தாக்குதலைக் கண்டித்து, வகுப்புவாத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

உள்ளூர் காஷ்மீரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கினார்கள். ஹோட்டல்கள் இலவசத் தங்குமிடங்களை வழங்கின. டாக்ஸி ஓட்டுநர்கள் இலவச சவாரிகளை வழங்கினார்கள். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளைத் தந்து உதவினார்கள்.

உள்ளூர் மக்கள் தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்றபோதிலும், நாட்டின் பிற பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள், தொழிலாளர்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இது பரந்த அளவிலான காஷ்மீர் எதிர்ப்பு உணர்வு குறித்த கவலைகளைத் தூண்டியது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது அப்பாவி காஷ்மீரிகளை அந்நியப்படுத்துவதைத் தவிர்க்க பயங்கரவாதிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி போன்ற தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அண்மைக்காலங்களில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் சீற்றத்திற்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக எதிர்வினையாற்றிய தருணம் இது. Anger over Kashmir is no solution to terrorism

பிரச்சினை என்னவென்றால், அரசாங்கம் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உள்ளூர் மக்களை அந்நியப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. 2018ஆம் ஆண்டிலேயே தோக்கர் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் அவரது வீட்டை இப்போது தரைமட்டமாக்கியதன் பயன் என்ன? கேள்விக்குரிய இந்த இஸ்ரேலியத் தந்திரோபாயம் அமைதியை ஏற்படுத்தாது. இதுபோன்ற எதிர்மறையான நடவடிக்கைகள் காசாவைப் போலப் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து வீடுகளையும் தரைமட்டமாக்கிவிடும். Anger over Kashmir is no solution to terrorism

இஸ்ரேலியர்கள் தங்கள் எதிரியாக வகைப்படுத்திய “மற்றவர்” அல்லது “இஸ்ரேலியர் அல்லாதவர்”களை இப்படிக் கையாள்கிறார்கள். இந்தியர்கள் தங்கள் சொந்தக் குடிமக்களிடம் அப்படி நடந்துகொள்ள முடியாது. காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கினாலும், காஷ்மீரின் கணிசமான பகுதியினர் இந்தியாவின் பக்கம்தான் இருந்துள்ளார்கள். ​​மாற்றத்திற்கான மனநிலை உள்ளது என்பதைக் கடந்த ஆண்டு மக்களவை, மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் காட்டுகின்றன. இது பஹல்காம் தாக்குதலுக்கான காஷ்மீர் மக்களின் எதிர்வினையில் ஓரளவு வெளிப்பட்டுள்ளது.

இது உண்மையில் காஷ்மீரிகளின் கருத்தை அறிந்து அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான தருணம். இந்தப் பிரச்சினைகளில் பலவும் உளவியல் ரீதியானவை; காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்றிலிருந்து எழுபவை. இந்து அடையாளம் தலையெடுத்துவரும் ஒரு மாநிலத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதாலும் இவை எழுகின்றன. நாடு முழுவதும் காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும் தாக்குதல்களும் அவர்களுடைய அச்சங்களை அதிகரிக்கச்செய்கின்றன. 

மோடி அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே காஷ்மீருக்கு எதிராகக் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. 2017இல் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆபரேஷன் ஆல் அவுட்டை அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல், 2019இல் 370ஆவது பிரிவையும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தையும் நீக்கி யூனியன் பிரதேசமாகத் தரமிறக்கியது. இந்தச் செயல்பாட்டில், இந்தியாவை ஆதரிக்கும் அப்துல்லா குடும்பத்தினர்முதல் ரஷீத் போன்ற பிரிவினைவாதிகள்வரை பலதரப்பட்டவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.

பிரிவு 370 என்பது காலத்தால் அழியாத நினைவுச்சின்னம். சாராம்சத்தில் அது உள்ளீடற்றதுதான் என்றாலும், காஷ்மீரிகளுக்குத் தாங்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்ற உணர்வை அது அளித்தது. வரலாற்றுக் காரணங்களின் அடிப்படையில் நிலம் விற்பனை அல்லது வேலைகளை அணுகுவதில் கட்டுப்பாடுகள் போன்ற சிறப்பு அந்தஸ்துகள் நாட்டின் பல மாநிலங்களில் அமலில் உள்ளன. Anger over Kashmir is no solution to terrorism

பள்ளத்தாக்கையும் காஷ்மீரிகளையும் தாக்குவது பயங்கரவாத எதிர்ப்பு உத்தி அல்ல. இஸ்ரேலியர்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, 1960களுக்கும் 1990களுக்கும் இடையில் செயல்பட்ட ஆபத்தான ஐரிஷ் பயங்கரவாத இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இங்கிலாந்தின் தந்திரோபாயங்களிலிருந்து இந்திய அரசாங்கம் கற்றுக்கொள்வது நல்லது. பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான தந்திரோபாயங்கள் பலனளிக்கத் தவறிய பிறகு, பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் எல்லைக்குள் நின்றபடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்காலிக ஐரிஷ் குடியரசுக் கட்சியை அரசியல் ரீதியாக அணுகியது. இன்று அங்கே பயங்கரவாதம் இல்லை. 

இந்திய அரசு காஷ்மீரில் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாகிஸ்தான் பினாமி போர்வீரர்களால் செயல்படுத்தப்படும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளைத் தொடர வேண்டும். பள்ளத்தாக்கில் உள்ள எல்லாத் தீவிரவாதங்களையும் “பயங்கரவாதம்” என்று குறிப்பிடுவதன் மூலம் மத்திய அரசு தனது கைகளையே கட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதே பாகிஸ்தானின் திட்டங்களைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழியாகும்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தேவா Anger over Kashmir is no solution to terrorism

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share